உணவுதான் நம்மை
உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு
உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க
ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய
சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே
அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.
ஒவ்வொரு
குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல்
நிபுணர்கள்தான் தேவை. நீரிழிவு நோயாளிக்கான உணவு, இதய நோயாளிக்கான உணவு என்று
ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கூடுதலான கலோரி
தேவை.ஒல்லியாக இருப்பவர்களுக்கும்,உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தனித்தனி
உணவுப்பட்டியல் வேண்டும்.
ஊட்டச்சத்துப்
பற்றாக்குறை இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.நிலத்தடி நீர் இருந்தவரை பப்பாளி,கொய்யா,வாழை,அகத்தி,நெல்லி
போன்றவை வாய்க்கால் ஓரமாகவே கிடைத்துவிடும்.இன்றைய நிலை அப்படி இல்லை.நம்முடைய
உணவில் தேவையான உயிர்ச்சத்துக்கள் இருக்கிறதா? என்பது நமக்குத்தெரியாது.
அன்றாட உணவில் ஏ
வைட்டமின் எவ்வளவு இருக்கவேண்டும் என்று எத்தனை பேருக்குத்தெரியும்? இன்றைய நம்
உணவில் எந்தெந்த உணவு மூலம் அந்த அளவைப்பெற்றிருக்கிறோம்? போதுமான அளவு
நார்ச்சத்தை சாப்பிட்டோமா? ஒரு நாள் சரியாக காலைக்கடன் கழிக்காவிட்டால் மனநலனில்
கூட மாற்றம் ஏற்படுகிறது.மலச்சிக்கல் வந்தவனைப்போல இருக்கிறான் என்று சொல்கிறோம்.
வெளியில் சாப்பிடுவதே
அவ்வளவு ஆரோக்கியமில்லை என்று சொல்கிறோம்.ஆனால் இரண்டு பேரும் வேலைக்குச்செல்லும்
சூழலில் வீட்டுக்கு பார்சல் வாங்குவது அதிகரித்திருக்கிறது.உணவகங்கள்
அதிகரிக்கின்றன.குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் பொட்டலங்களை நம்பி
இருக்கின்றன.சென்ற ஆண்டு ஒரு பேக்கரி இருந்த வீதியில் இன்று ஐந்து
இருக்கின்றன.அத்தனையும் வியாபாரம் கொழித்துக்கொண்டிருக்கின்றன.
வெளியில் வாங்குபவை
பெரும்பாலானவை மைதாவால் செய்யப்படும் உணவுகள்தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
ஒருபதிவில் மைதா நீரிழிவைத்தூண்டுகிறது என்று கேரளாவில் நடைபெறும் போராட்டம் பற்றி
சொல்லியிருந்தேன். வலைப்பதிவுகளில் விரிவாக சில பதிவுகள்
வந்திருக்கின்றன.இன்று வெகுஜன ஊடகங்களிலும் விவாதமாகிவிட்டது.தமிழ்நாட்டிலும்
போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.
புதிதாக வேலைக்காக
வெளியூர் வந்த ஒருவர் தினமும் இரவில் பரோட்டா சாப்பிடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்.மருத்துவர் ஒருவரது அறிவுரைக்குப்பிறகு அந்தப்பழக்கத்தை
விட்டுவிட்டார்.இப்போது மருத்துவமனைகளில் கூட மைதா உணவுகளைத்தவிர்க்குமாறு
ஆலோசனை வழங்கப்படுகிறது.தொற்றுநோயல்லாத நோய்களுக்கான(Non-communicable diseases) திட்டத்தில் முக்கிய தகவல்களாக
சொல்லப்படுகின்றன.நார்ச்சத்து,எண்ணெய் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நீரிழிவு
அச்சுறுத்தும் விதத்தில் அதிகரித்துவருகிறது.இன்று சமூகப்பிரச்சினையாக கவனம்
கொள்ளக்கூடிய நலக்குறைவு அது.உழைப்பு நாட்களை வீணடிப்பது ஒருபுறம்,மருத்துவச்செலவினங்கள்
அதிகரிப்பது இன்னொருபக்கம் என்று நெருக்குகிறது.எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம்
என்பது சூழல் காரணமாக அடிக்கடி என்று மாறிவருகிறது.குழந்தைகளுக்கும் இவற்றையே
பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
நம்மைப்போன்ற வளரும்
நாடுகளில் உணவுகளைப்பரிந்துரைக்கும்போது கவனம் தேவை.அவை ஊட்டச்சத்துப்
பற்றாக்குறையை போக்குவதாக இருக்கவேண்டும்.அன்றாடத்தேவையான உயிர்ச்சத்துக்களையும்,தாதுக்களையும்
வழங்கவேண்டும்.உணவுப்பொருள் ஒன்றை ஆதரித்தாலும்,எதிர்த்தாலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை இவைதான்.சுவைக்காக மட்டும் ஒரு உணவைப் பரிந்துரைப்பது தனிமனிதனுக்கும்,தேசத்துக்கும் இழப்பை
ஏற்படுத்தும்.