Thursday, September 26, 2013

குழந்தைகளிடம் ஏனிந்த மாற்றம்?



இரவு எட்டுமணிக்கு மேல் பேருந்தில் பயணம் செய்வதில் விவரிக்க முடியாத சுகம் இருக்கிறது.அதிக கூட்டம் இருக்காது.சிலுசிலுவென்ற காற்று வீசிக்கொண்டிருக்கும்.இன்று நான் பயணித்த பேருந்தில் மனதை வருடும் பாடல்கள் வேறு ஒலித்துக்கொண்டிருந்தது.சில நேரங்களில் இரண்டுபேர்,மூன்றுநபர் இருக்கையிலும் ஒருவரே ஆக்கிரமித்துக்கொள்ளலாம்.தூங்கிமேலே விழுபவர்கள் தொல்லை இல்லை.


எதிர் இருக்கையில் கணவனும் மனைவியும் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்கள்.குழந்தைக்கு சுமார் மூன்று வயது இருக்கும்.தூங்கிவிட்டது.குழந்தைக்கு வாங்கிய தின்பண்டத்தை தாய் விரலில் கோர்த்துக்கொண்டிருந்தார்.இரண்டு கையில் பத்துவிரல்களிலும் நுழைத்தாகிவிட்டது.ஒவ்வொரு விரலிலும் மெதுவாக கடித்துத் தின்ன ஆரம்பித்தார்.

சிலநேரங்களில் குழந்தையாக மாறிவிட மனம் விரும்புகிறது.சந்தோஷமான தருணங்களில் நம்மையே நாம் கொஞ்சிக்கொள்ளஆசைப்படுகிறோம்.கள்ளம்கபடமில்லாமல்வயல்வெளியை,பாடலை,மேகத்தை,நிலவை பிஞ்சுபோலரசித்துக்கொண்டிருப்போம்.உலகம்இனியதாகத்தெரிகிறது.குழந்தைகளுடன் விளையாடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.ஏனெனில் நாமும் குழந்தையாக மாறிப்போகிறோம்.


நண்பர் ஒருவர் தன்னுடைய குழந்தையின் நடவடிக்கையைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்.சிறுவன் முதல்வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.தந்தை முகச்சவரம் செய்வது போல தானும் செய்ய ஆசைப்பட்டிருக்கிறான்.பெற்றோர் கவனிக்காத நேரத்தில் புருவத்தையெல்லாம் எடுத்துவிட்டான்.இன்னொருநாள் பையன் சொன்னான், டாடி நான் யாருக்காவது இந்தப்பூவை கொடுத்து ஐ லவ் யூ சொல்லிவிடட்டுமா?

பெரியவர்கள் குழந்தைகளாக விரும்பும்போது குழந்தைகள் பெரியவர்களாக விரும்புகிறார்கள்.ஐந்து வயதில் இத்தகைய நடத்தைகள் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்.தாயிடம் அல்லது மற்ற உறவினர்களிடம் முக்கியத்துவம் கிடைக்காதபோது இப்படிநடந்துகொள்ளவாய்ப்பிருக்கிறது.தந்தையைப்போலஆகிவிட்டால் தான் ஒதுக்கப்படமாட்டோம் என்று தோன்றலாம்.ஆனால் உறுதியாக என்ன காரணம் என்று பெற்றோர்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் அறிய முடியும்.

இன்னொரு நாள் தான் கோபத்துக்கு ஆளானபோதுஅவனது நடத்தையைச் சொன்னார்.அப்போது தொலைக்காட்சித்தொடரில் வரும் பாத்திரத்தைப்போல தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினான்.இன்றைய சமூகமயமாக்கலில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிப்பது நாம் உணரவேண்டிய பயங்கரம்.பல நேரங்களில் தீவிரமான எதிர்மறை உணர்ச்சியை குழந்தைகளிடம் ஏற்படுத்துகின்றன.

தொலைக்காட்சியில் குழந்தைகள் முன்னிலையில் என்னென்ன நிகழ்ச்சிகள் பார்க்கலாம் என்று உணரவேண்டும்.குழந்தைகளுக்கு முன்பு  தொடர்களை தவிர்க்காவிட்டால் விரும்பத்தாகாத விளைவுகள்தான் ஏற்படும்.இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்துகொண்டிருக்கும்போது பெற்றோர் சீரியலில் மூழ்கி இருப்பார்கள்.படிக்கச்சொல்லி குழந்தைகளை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு பார்ப்பதையும் ஒரு வீட்டில் பார்த்தேன்.

குழந்தைகளுக்காக நாம் பெற்றோர்கள் சில தியாகங்களைச் செய்யத்தான் வேண்டும்.கடன் வாங்கியும் கூட படிக்க வைக்கிறார்கள்.ஆனால் இத்தகைய விஷயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.குழந்தைகள் வயதுக்கும்,வளர்ச்சிக்கும் ஏற்றவாறு நம்முடைய பழக்கவழக்கங்கள் இருக்கவேண்டும்.படிக்காதவர்கள் குழந்தை வளர்ப்பு குறித்த எனது முந்தைய பதிவுகள்.


 

-

No comments: