Friday, December 13, 2013

சமையல் உப்பும் உடல்நலமும்


அறுபது வயதைக்கடந்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் வயலில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார்.உடன் வந்திருந்த மாமன் மகன் சொன்னான் வியர்வை வெளியேறிவிட்டால் ஒரு நோயும் கிடையாது.வியர்வை உப்புக்கரிக்கக் காரணம் சோடியம்.உடலின் நீர்சமநிலையை காக்கும் பணியைச் செய்வது இதுதான்.


சமையல் உப்பு  சோடியம்குளோரைடுஎன்பது உங்களுக்குத்தெரியும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொன்னார்கள்.நாம் சுவைக்காகத்தான்உப்பைச்சேர்த்துக்கொள்கிறோம்.வயிற்றுப்போக்கின்போது சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைத்தயாரித்து பருகவேண்டும்.இதில் உப்பு உயிர்காக்கும் பணியைச்செய்கிறது.நம்முடைய உணவுப்பொருட்களில் சோடியம் இருக்கிறது.

உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்று கேட்பார்கள்.உப்பு ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறார்கள்.அதிக உப்பு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக உள்ளது.நோய் வந்தபிறகு உப்பைக்குறைத்து சாப்பிடுவார்கள்.உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கைமுறையில் உப்பைக்குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.


சில குடும்பங்களில் வழக்கமாகவே மிகக் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வார்கள்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது வேறுபடும்.அன்றாட சமையலில் சேர்க்கும் உப்பு மூலம் நாம் சாப்பிடுவது குறைவு.பொட்டலமிடப்பட்ட பொருட்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் வழியாக அதிக உப்பைப்பெறுகிறோம்.பதப்படுத்துவதில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பைக் குறைத்து சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும்.ஆனால் இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களாக,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களும்,பேக்கிங் செய்யப்பட்டவையும் இருக்கின்றன.துரித உணவுகள்,நூடூல்ஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.


அதிக உப்பு கால்சியத்தை வெளியேற்றிவிடுவதால் உறுதியான எலும்புக்கு உத்தரவாதம் இல்லை.இன்றைய பெற்றோர்கள் அதிக உப்புச்சுவையை பழக்கப்படுத்துகிறார்கள்.ஏற்கனவே குறிப்பிட்டது போல உப்புச்சுவைக்கு ஒரு குடும்பத்தின் பழக்கமே காரணம்.எதிர்காலத்தில் உப்பைக்குறைத்து சாப்பிடவேண்டிய நிலையில் சுத்தமாக சுவை இல்லாத சிரமத்தை உணர்வார்கள்.


சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்போது பொட்டாசியம் குறைக்கிறது.சோடியம்,பொட்டாசியம் விகிதத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.அதிக சோடியம் ஏற்படுத்தும் விளைவுகளை பொட்டாசியம்கட்டுப்படுத்தும்.பழங்கள்,கீரை,காய்கள்,இளநீர்,போன்றவை பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.வாழைப்பழம் நமது கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன பழம்.முக்கனிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது.மூன்று வேளையும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
-

Sunday, December 8, 2013

இரத்தப்பரிசோதனை-அறியாத உண்மைகள்.


உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் இரத்தப்பரிசோதனைக்கு பரிந்துரைப்பதுண்டு.சில தினங்களாக காய்ச்சல் எனும்போது டைபாய்டு பரிசோதனை அவசியம்.மலேரியா பரிசோதனைக்கும் எழுதிக்கொடுக்கலாம்.நாம் சொல்லும் அறிகுறிகளை வைத்து தீர்மானிப்பார்கள்.சில இடங்களில் மருத்துவர்களைவிட இரத்தப்பரிசோதனை மையங்கள் அதிகமாக இருக்கின்றன.

நீரிழிவு நோயாளிகள் காலையிலேயே வரிசையில் நிற்பார்கள்.அவர்களுக்கு சாப்பிடும்முன்பும் பின்பும் சோதனை செய்யவேண்டும்.வீடுகளுக்கே நேரில் வந்து இரத்தமாதிரி சேகரித்துச்செல்லும் மையங்களும் இருக்கின்றன.பொதுவாக பணத்திற்காக (கமிஷன்) டெஸ்டுகளை எழுதுகிறார்கள் என்று குற்றச்சாட்டும் இருக்கிறது.ஆனால் எதிர்பாராவிதமாக அறிகுறியற்ற நோயோ,குறைபாடோ கண்டறியப்பட்டதும் உண்டு.

ஒருவர் இரத்தப்பரிசோதனை மையம் வைத்திருந்தார்.அவர் கொடுக்கும் சம்பளத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை.வசதியில்லாத ஒரு பையனைப் பிடித்து இரத்தம் எடுக்கக் கற்றுக்கொடுத்துவிட்டார்.பரிசோதனை செய்ய யாராவது வந்தால் போன் வரும்.வந்தவருக்கு என்ன அறிகுறி இருக்கிறதென்று கேட்கச் சொல்வார்.இரத்தம் மட்டும் எடுப்பானே தவிர சோதனை செய்யத்தெரியாது.

முதலாளி போனிலேயே சொல்லிவிடுவார்.ஒருமணிநேரம் கழித்து வரச்சொல்லி பையன் முடிவை எழுதிக்கொடுத்துவிடுவான்.இருக்கவேண்டிய அளவு தெரிந்தால் போதுமானது.சில இடங்களில் பரிசோதனை செய்ய சோம்பேறித்தனம் வந்துவிடும்.நார்மலாக இருப்பதாக எழுதிக் கொடுப்பார்கள்.பரிசோதனை செய்ய வசதி இருக்காது.இருந்தாலும் அதற்கான பணம் மிச்சமாகிவிடும்.

ஒருவருக்கு கடுமையான இரத்தசோகை அறிகுறி கண்டு மருத்துவர் பரிந்துரை செய்தார்.ஹீமோகுளோபின் பரிசோதனைக்கு அனுப்பினால் நார்மல் என்று முடிவு கொடுத்தார்கள்.மருத்துவரால் நம்ப முடியவில்லை.அவரே நேரில் சென்று தன் முன்னால் பரிசோதனை செய்யுமாறு சொன்னார்.மூன்று கிராம் க்கு கீழேஇருந்தது.அவசியம் இரத்தம் ஏற்றாவிட்டால் ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும்.

தைராய்டு உள்ளிட்ட சில பரிசோதனைகள் உள்ளூரில் இருக்காது.வெளியில் நகரங்களுக்கு அனுப்பி முடிவைப்பெறவேண்டும்.அதற்கான பரிசோதனை செலவும் அதிகம்.சில நாட்கள் கழித்து இவர்களாகவே முடிவைக்கொடுப்பார்கள்.மின்னஞ்சலில் பெற்றதாக சொல்லிக் கொள்வார்கள்.பெயரளவில் உபகரணங்களை வைத்து செயல்படும் மையங்கள் இருக்கின்றன.காலாவதியான ரசாயனங்களைத் தூக்கி எறிய மனமில்லாமல் பயன்படுத்துபவர்கள் உண்டு.

சிலர் மருத்துவரிடம் செல்லாமலே இரத்தப்பரிசோதனைக்கு போய் நிற்பார்கள்.எச்.ஐ.வி போன்ற பரிசோதனைக்கு இது சரியான முடிவு.ஆனால் அரசு மருத்துவமனைக்குச்செல்லவேண்டும்.முறையற்ற வணிக நடைமுறைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.உயிர் காக்கும் விஷயமும் இதில் விதிவிலக்கல்ல! கொடுக்கும் பணத்திற்கு ரசீது கேட்டுப்பெறவேண்டும்.சில நிகழ்வுகளில் வழக்குத்தொடர கட்டாயம் தேவைப்படும்.யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் மிகவும் நல்லது.
-

Thursday, December 5, 2013

கோதுமை பிரெட்-உணவும் விழிப்புணர்வும்


வகுப்புத்தோழனை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன்.இம்மாதிரி நேரங்களில் தேநீராவது குடித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது.அடுமனை(பேக்கரி) ஒன்றுக்குள்நுழைந்தபோது ஒரு அறிவிப்பைக்கவனித்தேன்.கோதுமை பிரெட் இங்கே கிடைக்கும் என்று அறிவிப்பு சொன்னது.பலர் தற்போது கேட்பதால் தயாரிக்க ஆரம்பித்திருப்பதாக சொன்னார்கள்.மைதா பற்றிய விழிப்புணர்வின் அடையாளமாக இதைக்கருதலாம்.


இன்றைய விளம்பர உலகில் விழிப்புணர்வு மூலமாகத்தான் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்.இணையதளங்கள்,வார,மாத இதழ்கள்,நாளிதழ்கள் உள்பட மைதா குறித்த தகவல்கள் வெளிவந்தன.பாரம்பரிய உணவுகள் குறித்த தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.கேழ்வரகு பணக்காரர்களின் உணவாக மாறிவருவதாக தினத்தந்தியில் படித்தேன்.கூழ் தயாரிப்பது பற்றி ஒருவர் கேட்டிருக்கிறார்.

ஓட்ஸ் பற்றிய பதிவில் கேழ்வரகு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.கேழ்வரகுக் கூழ் நம்முடைய கலாச்சாரமாக இருந்து வந்திருக்கிறது.வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது கேழ்வரகுக்கூழ்தான்.சோளத்தை இடித்து நொதிக்கவைத்து தயாரிப்பார்கள்.ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோளம் கலக்காத கூழ் தருவார்கள்.குடித்தவுடன் உடல்நலம் மேம்பட்டுவிட்டதாகத் தோன்றும்.


கொதிக்கும் நீரில் கேழ்வரகு மாவை சிறிதுசிறிதாக கொட்டி கிளறினால் கூழ் தயாராகிவிடும்.கொங்கு மண்டலத்தில் குழந்தைகளின் இணைஉணவு இந்தக்கூழ்தான்.இரும்புச்சத்து,கால்சியம் போன்றவை உடல்பலத்தை உறுதிசெய்யும்.நம்முடைய பாரம்பர்ய உணவுகளே நமக்குப் போதுமானவை.இந்தியாவில் மட்டுமல்ல! உலகின் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைக்கு இவை வழி சொல்லும்.

பேருந்து நிலையங்கள்,சாலைகள் என்று ஏராளமான இடங்களில் கூழ் விற்பனையாகிறது.ஆனால் சுகாதாரமானதா என்பது சந்தேகம்.கலக்கப்படும் நீரும்,கடித்துக்கொள்ள மிளகாய்த்தூள் தடவி ஏதாவது வைத்திருப்பார்கள்.திறந்தவெளியில்தூசுகள் படிந்திருக்கும். கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் இது.காலாவதியான குளிர்பானத்தைக் குடித்து மாணவர்கள் மயங்கினார்கள்.நாம் இன்னும் காலாவதி தேதியைப் பார்த்து வாங்கக் கூட கற்றுத்தரவில்லை.


நம்முடைய தாத்தா,பாட்டியெல்லாம் ஹோட்டலில் சாப்பிடுவதை விரும்பியதில்லை.அப்போது கிரைண்டர் கிடையாது,ஹோட்டலில் மாவு அரைப்பவர்கள் வெற்றிலைபாக்கு போட்டால் அடிக்கடி எழுந்து வெளியில் போகமுடியாது. எச்சிலை மாவிலேயே துப்பிவிடுவார்கள் என்று சொல்வார்கள்.இன்று ஹோட்டலில் சாப்பிடுவது சாதாரணமாகிவிட்டது.நல்ல உணவகங்களும் இருக்கின்றன.

ஆயா கடையில் இட்லி வாங்க வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்துப்போவார்கள்.இன்று பிளாஸ்டி பையில் சாம்பாரும்,குருமாவும் கட்டித்தருகிறார்கள்.பிளாஸ்டிக் சூடான உணவுப்பொருளுடன் வினைபுரிந்து புற்றுநோய் ஆபத்தைத்தரும்.உணவைத்தேர்ந்தெடுத்தல்,தயாரித்தல்,எடுத்துச்செல்லுதல்,பாதுகாத்தல், போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.இவ்விஷயத்தில் அறிவும்,விழிப்புணர்வும் நமக்கு அவசியம் தேவை.
-

Tuesday, December 3, 2013

மனிதர்கள் தனிமையால் கெட்டுப்போவார்களா?




எழுத்தாளர் சுஜாதாதான் என்று நினைக்கிறேன்.தனித்து,விழித்து,பசித்து இருந்தால்? என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். சுஜாதாவின் பதில்-டெத்து.விவேகானந்தருடையது ஆன்மீக சமாச்சாரம்.தனிமையில்தான் ஞானம் தோன்றமுடியும் என்று சொல்வார்கள்.பாரதியும் கூட தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா! என்று பாடினார்.

தனிமை ஒழுக்கக்கேட்டை வளர்க்கும் என்பதும் நிஜம்தான்.நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது.தனிமை ஒருவரை அறிவாளியாக்கலாம்.கெட்டுப்போகவும் செய்யலாம்.குடும்பத்தினர் உள்ளிட்ட யாருடைய கண்காணிப்பும் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? ஒருவர் தீய பழக்கங்களுக்கு ஆளாவதற்கு சாத்தியங்கள் அதிகம்.

தனிமைப்படுத்துவது பொதுவாக தண்டனையாகக் கருதப்படுகிறது.ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கும் பஞ்சாயத்துகள் உண்டு.இது ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக இருக்கும்.அலுவலக அரசியலில் தனிமைப்படுத்துவது ஒருவரை வழிக்குக் கொண்டுவருவதற்கான வழி!பருவ வயதில் தனிமை ஆபத்தான காரணியாகவே பார்க்கப்படுகிறது.

தனிமையில் இருக்கும் பெண் அதிகம் தொல்லையை சந்திக்கக்கூடும்.முதியவர்களுக்குத் தனிமை கொடுமையானது.கிட்டத்தட்ட நெருப்பில் இருப்பது போன்ற அனுபவம்தான்.ஆனாலும் நெருப்பில் வலிமையானது மேலும் உறுதிபெற்று வெளியே வருகிறது.மற்றவை வீழ்ந்து கருகிப்போய்விடுகிறது.


தனிமை சிலருக்கு வரமாகவும் பலருக்கு சாபமாகவும் இருக்கிறது.தனிமையில்தான் நான் அதிகம் படித்திருக்கிறேன்.அதிகம் சிந்தித்தும் இருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் எப்போதாவது கொஞ்சம் தனிமை தேவைப்படத்தான் செய்கிறது.அப்போது நல்ல இசையைக் கேட்டு ரசிக்கமுடியும்.கண்மூடி அமைதியாக தியானிக்கமுடியும்.

தனிமை என்பது கடந்துசெல்லக் கஷ்டமான நெருப்பாறுதான்.ஆனால் கலை,இலக்கியங்களோடு உறவாடும்போது மதிப்பு பெற்றுவிடுகிறது.நல்ல இசையோ,புத்தகமோ அருகில் இருக்கும்போது அற்புத அனுபவமாகிவிடுகிறது.மனிதன் துன்பங்களைத் தாங்கி முன்னேறவும்,வலியில்லாமல் கடந்து செல்லவும் கலையும்,இலக்கியமும் உதவும்.
-

Sunday, December 1, 2013

சுங்கச்சாவடியை ஏமாற்ற பயணிகளை வதைப்பதா?

வேலூரிலிருந்து ஓசூர் போகும் பேருந்து அது.பேருந்தின் நடத்துனர் விறைப்பாக சொல்லிக்கொண்டிருந்தார்."நாட்றம்பள்ளி பஸ் ஸ்டாண்டுக்குள்ள போகாது.பைபாஸ் இறங்கிக்கனும் ".சிலர் கேட்டுவிட்டு போய்விட்டார்கள்.பைபாஸில் இறங்க விருப்பம்  உள்ளவர்கள் மட்டும் ஏறிக்கொண்டார்கள்.அடுத்து ஒருவர் "பர்கூர் போகுமா?" என்று கேட்டார்."பைபாஸ் மட்டும்தான்" என்றார் நடத்துனர்.அவரும் அரைமனதுடன் ஏறிக்கொண்டார்.


பேருந்து அவ்வளவு வேகமில்லை.வாணியம்பாடிக்குப் பிறகு கொஞ்ச தூரத்தில் பேருந்து நெடுஞ்சாலையை விட்டு பாதை மாறிப் பயணித்தது.பயணிகளுக்கு காரணம் புரியவில்லை.சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்ப்பதற்காக இருக்கும் என்று ஒருவர் சொன்னார்.உறுதியாக யாரும் சொல்லவில்லை.நூறு ரூபாய்க்காக அல்லது அற்ப விஷயங்களுக்காக பாதை மாறுபவர்களை நினைத்துக்கொண்டேன்.

ஒட்டுனருக்குப் பாதை பழக்கமில்லாமல் இருக்கவேண்டும்.திருப்பத்தூர் செல்லும் வழியில் போய்க்கொண்டே இருந்தார்.பயணிகள் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.பயணி ஒருவர் நாட்றம்பள்ளி இறங்க வேண்டியவர்.ஓட்டுனரிடம் சென்று வழி காட்ட ஆரம்பித்தார்."ரைட்ல போங்க! லெப்ட்ல போங்க!" என்ற சத்தம் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தது.

நிறுத்துங்க என்றபோது பேருந்து நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில்  கொண்டிருந்தது.முதல் பத்தியை மீண்டும் படிக்கவும்.நான் நடத்துனரைப் பார்த்தேன்.பாவமாக  நின்று கொண்டிருந்தார்.பயணிகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.வீடுகளில் இருந்து அலைபேசிக்கு அழைப்புகள் வர ஆரம்பித்துவிட்டது.பின் இருக்கையில் இருந்தவர் எரிச்சலில் மனைவிமீது கோபத்தைக் காட்டினார்."வைடி போன! நீ ஒரு தொல்லை! இந்த டிரைவர் ஒரு தொல்லை!".

கல்லூரி மாணவிகள் சிலபேர் இருந்தார்கள்.பேருந்து நிலையத்தில்  காத்திருந்த தந்தையோ,அண்ணனோ தொடர்ந்து போனில் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.வீட்டிலிருந்து அம்மாக்கள் காரணத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.இரவு பத்துமணியை தாண்டி விட்டது.கிராமத்துக்குச் செல்லும் பேருந்து போய்விட்டிருக்கும் என்று ஒருவர் புலம்பினார்.

கிட்டத்தட்ட பேருந்து ஒருமணி நேரம் தாமதமாகி விட்டது.பர்கூர்க் காரர் "லெப்ட்ல போங்க" என்றார்.பேருந்து பர்கூரில் பொறுமையாக நின்று கிளம்பியது.அற்பமான லாபத்துக்காக மற்றவர்களை வதைப்பதை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.சக மனிதர்களை அவர்கள் சிரமப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

-