Friday, December 13, 2013

சமையல் உப்பும் உடல்நலமும்


அறுபது வயதைக்கடந்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் வயலில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார்.உடன் வந்திருந்த மாமன் மகன் சொன்னான் வியர்வை வெளியேறிவிட்டால் ஒரு நோயும் கிடையாது.வியர்வை உப்புக்கரிக்கக் காரணம் சோடியம்.உடலின் நீர்சமநிலையை காக்கும் பணியைச் செய்வது இதுதான்.


சமையல் உப்பு  சோடியம்குளோரைடுஎன்பது உங்களுக்குத்தெரியும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொன்னார்கள்.நாம் சுவைக்காகத்தான்உப்பைச்சேர்த்துக்கொள்கிறோம்.வயிற்றுப்போக்கின்போது சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைத்தயாரித்து பருகவேண்டும்.இதில் உப்பு உயிர்காக்கும் பணியைச்செய்கிறது.நம்முடைய உணவுப்பொருட்களில் சோடியம் இருக்கிறது.

உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்று கேட்பார்கள்.உப்பு ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறார்கள்.அதிக உப்பு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக உள்ளது.நோய் வந்தபிறகு உப்பைக்குறைத்து சாப்பிடுவார்கள்.உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கைமுறையில் உப்பைக்குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.


சில குடும்பங்களில் வழக்கமாகவே மிகக் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வார்கள்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது வேறுபடும்.அன்றாட சமையலில் சேர்க்கும் உப்பு மூலம் நாம் சாப்பிடுவது குறைவு.பொட்டலமிடப்பட்ட பொருட்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் வழியாக அதிக உப்பைப்பெறுகிறோம்.பதப்படுத்துவதில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பைக் குறைத்து சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும்.ஆனால் இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களாக,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களும்,பேக்கிங் செய்யப்பட்டவையும் இருக்கின்றன.துரித உணவுகள்,நூடூல்ஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.


அதிக உப்பு கால்சியத்தை வெளியேற்றிவிடுவதால் உறுதியான எலும்புக்கு உத்தரவாதம் இல்லை.இன்றைய பெற்றோர்கள் அதிக உப்புச்சுவையை பழக்கப்படுத்துகிறார்கள்.ஏற்கனவே குறிப்பிட்டது போல உப்புச்சுவைக்கு ஒரு குடும்பத்தின் பழக்கமே காரணம்.எதிர்காலத்தில் உப்பைக்குறைத்து சாப்பிடவேண்டிய நிலையில் சுத்தமாக சுவை இல்லாத சிரமத்தை உணர்வார்கள்.


சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்போது பொட்டாசியம் குறைக்கிறது.சோடியம்,பொட்டாசியம் விகிதத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.அதிக சோடியம் ஏற்படுத்தும் விளைவுகளை பொட்டாசியம்கட்டுப்படுத்தும்.பழங்கள்,கீரை,காய்கள்,இளநீர்,போன்றவை பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.வாழைப்பழம் நமது கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன பழம்.முக்கனிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது.மூன்று வேளையும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
-

No comments: