Wednesday, October 30, 2013

தெருக்கூத்து நினைவுகள்.



சுத்தம் சுகாதாரம் எல்லாம் யாருக்குத்தெரியும்? நான்குபுறமும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கிற இடமாக இருக்கும்.மண்ணில் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும்.டவுசர் கால நினைவுகள் அவை.தெருக்கூத்து நடப்பதாக சொல்லிவிட்டால் இரவு சாப்பாட்டில் கூட மனம் இருக்காது.அரிதாரம் பூச நான்குபுறமும் தென்னை ஓலை கட்டி விளக்குபோட்டால் போதும்.முதல் ஆளாக இடம்பிடித்துவிடுவோம்.கூத்து துவங்குவதற்கு முன்பாகவே தூங்கிப்போயிருப்போம்.


எங்கள் கிராமத்தில் நாடகம் என்று சொல்வார்கள்.கொஞ்சம் வளர்ந்து பெரியவகுப்பு படிக்கப்போனபிறகு பபூன் வருகைக்காக தூங்காமல் காத்திருப்போம்.தெருக்கூத்து என்பது மகாபாரதம்,இராமாயணத்தில் ஏதேனும் ஒருபகுதி.அத்தை,பாட்டி போன்றவர்களுக்கு இந்தக்கதையெல்லாம் அற்புதமாகத் தெரியும்.கூத்துக்கு முன்பாகவே கதை சொல்லி ஆர்வத்தைக்கிளறிவிடுவார்கள்.


கூத்துக்கு வாத்தியார் என்று உண்டு.அவர்தான் பயிற்சி கொடுத்து தயார் செய்வார்.ஒவ்வொரு கூத்துக்கென்று தனிதனியாக நோட்டுக்களை வைத்திருப்பார்.ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனியாக வேறு எழுதிக்கொடுப்பார்கள்.புதிய்தாக சேர்ந்தவர் மனப்பாடம் செய்து கொண்டிருப்பார்.ஏதாவது பகுதி மறந்துவிட்டால் வாத்தியார் போடும் சத்தத்தில் மற்றவர்களுக்கும் உதறல் எடுக்கும்.


உள்ளூர் கலைஞர்களாக இருந்தால் உறவினர் நண்பர்கள் ரூபாய் நோட்டுகளை கோர்ப்பார்கள்.கொஞ்சம் வசதிப்பட்டவர்களுக்கு நிறைய நோட்டுகள் சேரும்.அவர்களது குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் திருஷ்டி சுற்றிப்போடுவார்கள்.சில கூத்துகளுக்குக் காரணங்களை வைத்திருப்பார்கள்.இதுபற்றிய எனது பதிவை கிளிக் செய்து படியுங்கள்.நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமம்.


துக்க காரியத்திற்குப்பிறகு தெருக்கூத்து வழக்கமான ஒன்றாக இருந்துவந்தது.கொஞ்சம்கொஞ்சமாக மாற்றம் பெற்று வீடியோ போட ஆரம்பித்தார்கள்.கூத்து என்றால் கிராமத்து மக்கள் மட்டுமல்லாமல் பக்கத்து கிராமத்திலிருந்தும் நிறைந்திருப்பார்கள்.எளிய மக்களுக்கு மதிப்பீட்டை போதித்த கலை அது.இப்போது தெருக்கூத்து பார்க்க பட்த்தில் உள்ள அளவுதான் வருகிறார்கள்.

பதிவில் உள்ள புகைப்படங்கள் சென்ற ஆண்டு ஏலகிரி மலையில் எடுத்தது.அர்ச்சுணன் தபசு கூத்தை முடியும் தருவாயில் நான் பார்த்தேன்.காலை பதினொருமணி ஆகிவிட்டிருந்தது.தபசுக்கம்பத்தில் மேலே ஏறிவிட்டால் கருடன்வரும்வரை கீழே இறங்கமாட்டார்கள்.கருடன் சுற்றிவிட்டுபோன பிறகு பொதுமக்கள் பூசை செய்வார்கள்.சில மாதங்களுக்கு முன்னால் ஹொகேனக்கல் செல்லும்போது மன்மதன் வரையப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.


திருவண்ணாமலை பக்கம் தெருக்கூத்துக்கென்று தரகர்கள் இருக்கிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சிலரைப் பார்த்தேன்.இன்னமும் தெருக்கூத்தை தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இரவுகளில் தூக்கம் கெடும் கொஞ்சம் கஷ்டமான தொழில்.ஆனால் எதிர்காலம் இருப்பதாக நான் நம்பவில்லை.

நண்பர் ம்கேந்திரன் தெருக்கூத்து பற்றிய தொடர் கவிதை எழுதி வருகிறார்.மேலதிக தகவல்களை கவிதையில் தெரிந்துகொள்ளலாம்.

இளவேனிற்காலம்.http://ilavenirkaalam.blogspot.in/2013/10/blog-post_28.html
-

Tuesday, October 29, 2013

வெள்ளாட்டுக்கறியும் தீபாவளியும்



வெள்ளாட்டுக்கறிதான் மதிப்பு மிக்கதாக இருந்துவருகிறது.சுவை மட்டும் இதற்கு காரணமல்ல! கிராமப்புறங்களில் தோஷம் இல்லாதது என்றநம்பிக்கை இருந்து வருகிறது.உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடுவார்கள்.பல இடங்களில் தீபாவளிக்கு கறி சீட்டு பிரபலமாக இருக்கிறது.வெள்ளாட்டுக்கறி என்று சொன்னால் கலந்துகொள்பவர்கள் அதிகம்.

காந்தி வெள்ளாட்டுப்பாலைக் குடித்து வந்தார்.வெள்ளாட்டுக்கறியில் கொலஸ்ட்ரால் பயம் இல்லை.மற்ற கறிகளை ஒப்பிடும்போது கொழுப்பு மிகவும் குறைவு.வீட்டில் அரைக்கும் மசாலாவில் சேர்க்கப்படும் பொருட்களே இருக்கும் கொழுப்பையும் சமன்படுத்திவிடும்.அதிகம் பயப்படாமல் சாப்பிடத்தேர்ந்தெடுக்கலாம்.

இந்த ஆண்டு பலருக்கு கறி இல்லாத தீபாவளியாக அமைந்துவிட்டது.பல குடும்பங்களில் கௌரி விரதம் முடியும்வரை அசைவம் சாப்பிடமாட்டார்கள்.அமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமைதான் விரதம் வருகிறது.அடுத்தநாள் பலருக்கு அலுவலகம் இருக்கும்.இந்த விரதம்தான் பலரை நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரச்செய்கிறது.

தீபாவளி சீட்டு என்று இனிப்பும் காரமும் தருகிறார்கள்.ஆனால் விரதத்தின் சிறப்பு இனிப்பாக அதிரசம் தயாரிப்பார்கள்.படைக்கமட்டும் நெய்யில் தயாரித்துவிட்டு எண்ணெயில் பொரிப்பார்கள்.பாகு பதம்பார்த்து எடுப்பதற்கென்றே சிலர் உண்டு.அன்றையதினம் மட்டும் அவருக்கு சிறப்பு மரியாதையாக இருக்கும்.அதிரசத்தை வாழைப்பழத்தில் பிசைந்து நெய்விட்டு சாப்பிடுவது பலருக்கு விருப்பமானது.

கிராமங்களில் ஒருவாரம் முன்பே பட்டாசுகள் கடைக்கு வந்துவிடும்.அவ்வப்போது விட்டுவிட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்.விலை அதிகமாகிவிட்டதால்இப்போது அதுவும் குறைந்துபோய்விட்டது.நகரத்திலிருந்து வருபவர்கள்தான் அதிகம் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள்.


எண்ணெய் தேய்த்துக்குளிப்பது தீபாவளிக்கு இன்னொரு விசேஷம்.கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்பார்கள்.அதிகாலையில் சுடுநீர் காய்ச்சிக்கொண்டிருப்பார்கள்.நல்லெண்ணெய் அதிகம் தீபாவளிக்குத்தான் விற்பனையாகும்.தலைதீபாவளிக்கு மாப்பிள்ளை முறுக்காக இருப்பார்.புதுத்துணியும் நகையும் பளபளக்கும்.மாமன்,மச்சான் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி...

வெளியூரிலிருந்து கிராமத்துக்குச் சென்று வருவது பண்டிகை நாட்களில் சிரமமாக இருக்கிறது.பேருந்தின் கூட்ட நெரிசலும்,பயணக்களைப்பும் சோர்வைத்தரக்கூடியது.ஆனால் பலரை நேரில் சந்திக்க முடிவது ஒரு சந்தோஷம்.நெருங்கிய உறவினர்களையும்,பால்ய நண்பர்களையும் பார்த்துப்பேசலாம்.களைப்பெல்லாம் அந்த மகிழ்ச்சியில் காணாமல் போய்விடுகிறது.
-

Sunday, October 27, 2013

இரயில் பயணத்தில்.....



பார்க்கச்சலிக்காத விஷயங்களில் இரயிலும் ஒன்று.பேருந்துப்பயணத்தை ஒப்பிடும்போது இரயில் உடல் சோர்வு தராமல் கொண்டு சேர்க்கிறது.எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டரில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருக்கிறது.ஆடி பதினெட்டு என்றால் வழக்கமாகச் செல்வதுண்டு.சுமார் பாதிதூரத்தை இரயில்பாதை வழியே நடந்துசெல்வது வழக்கம்.அப்போது இத்தனை இரயில் இல்லை.இரயிலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கும்.

கடந்தவாரம் ஆம்பூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்தேன்.முதல் வேலையாக இரண்டாம்வகுப்பில் காலியிடத்தைக் கேட்டோம்.வாலாஜாவில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று சீட்டு வழங்கினார்கள்.அதுவரை நின்றுகொண்டுதான் பயணம் செய்யவேண்டும்.பக்கத்தில் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒருகுடும்பம் காத்திருந்தது.

மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள்.குழந்தைகளுக்கு ஆறு,நான்கு வயது இருக்கக்கூடும்.கணவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.தாயும் இரண்டு குழந்தைகளும் உள்ள இருக்கையில் இன்னொருவர் அமரமுடியும்.கையில் குழந்தை வைத்திருந்தபெண் உட்கார அனுமதி கேட்டார்.அவரது முயற்சி பலிக்கவில்லை.அந்தப்பெண்மணியின் பரிவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டார்கள். குழந்தைகளுக்கு டிக்கெட் எடுத்திருக்கக்கூட மாட்டார்கள் என்று ஒருவர் சொன்னார்.கணவன்,மனைவி இருவரும் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.ஆங்கில நாளிதழ் ஒன்றின் பெயர் தாங்கிய பயணப்பையை வைத்திருந்தார்கள்.கணவரும்,மனைவியும் மாறிமாறி குழந்தையை வைத்துக்கொண்டார்கள்.

பேருந்துப்பயணத்தில் சாதாரணமாக நாம் பார்த்திருக்கிறோம்.கர்ப்பிணிகள் என்றால் யாராவது இடம் கொடுத்துவிடுவார்கள்.பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் அப்படித்தான்.ஆனால் இப்போது அந்தப்பண்பும் மறைந்து வருவதாக எனக்குத்தோன்றுகிறது.இப்போது அந்தக்குணங்களை கொண்டிருப்பவர் எளிய கிராமத்து மனிதராக இருக்கிறார்.இன்று பேருந்திலும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.கர்ப்பிணிகளுக்கும்,குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் இடம் ஒதுக்கினால் என்ன?

இரயில் நான் அந்தப்பெண் குழந்தைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.அவர்களிடமும் இத்தகைய பண்புகள்தான் மனதில்பதியும்.தனிக்குடும்பத்தைத் தாண்டி சக மனிதர்களிடம் பழகுவதே குறைந்துவருகிறது.உலகத்தில் இருப்பதே அவர்கள் நான்குபேர்தான்.குழந்தைகளுக்கு பரிவும் நேசமும் வளர வாய்ப்பே இல்லை.தாய்,தந்தையைத் தாண்டி குழந்தைகளுக்கு நெருக்கமான உறவுகள் அறிமுகமே இல்லை.

கிராமத்திலும்,கூட்டுக்குடும்பத்திலும் குழந்தையைத்தூக்கிக் கொண்டாட நிறைய மனிதர்கள் இருந்தார்கள்.அவர்கள் பரிவும் நேசமும்காட்டினார்கள்.குழந்தைகளிடமும் அந்தப்பண்புகள் வளர்ந்தன.சாஃப்ட்வேர் துறையில் நல்ல நிலையில் இருக்கும் ஒருவர்,கிராமத்து உறவினர் வீட்டு சாவுக்கு செல்லத்தயங்கினார்.நான் செத்துப்போனால் நாலுபேர் வீட்டில் இருக்கவேண்டுமே? என்று மகனுக்குப் புரியவைத்தார்.

சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ள உறவுகள் என்றநிலை மாறி நாலுபேர் வேண்டுமே? என்று ஆகிவிட்டது.குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகப்படுத்துவதும்,அவர்களுடைய வீடுகளுக்கு சென்றுவருவதும் அவசியம் என்று தோன்றுகிறது.சக மனிதர்கள்மீது பரிவும்,நேசமும் வளராத சமூகம் குற்றவாளிகளைத்தான் உற்பத்தி செய்யும்.
-

Wednesday, October 23, 2013

சென்னை பெருநகர ஆட்டோக்கள்.

கிருஷ்ணகிரியில் ஐந்து ரூபாயில் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணிக்க முடியும்.இருபதாண்டுகளுக்கு மேலாகஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் போலத்தான்.ஷேர் ஆட்டோக்களுக்கு முன்னோடி என்றுகூட சொல்லலாம்.மூன்று பேர் சேர்ந்தால் எங்கே இறங்கினாலும் ஐந்துரூபாய்.சில நேரங்களில் மூன்று பேர் சேரும்வரை காத்திருக்க நேர்ந்தாலும் நமக்கு வசதி. 

வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது.அதிகம் ஆட்டோவை பயன்படுத்த வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.மழை தூறிக்கொண்டிருக்கும்போது பேருந்துக்கு காத்து நிற்பதைவிட ஆட்டோவில் போகலாம் என்றிருக்கும்.பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் பொருத்திவிட்டார்கள்.மீட்டர் பொருத்திய பின்னர் என்னதான் நடக்கிறது? 

சென்ட்ரலில் இறங்கி ஆட்டோ கேட்டேன்.வழக்கமான பல்லவியாக ஒரு தொகையைச் சொன்னார்."மீட்டர் பொருத்திட்டீங்கதானே?"

"நைட் டைம் சார்"

"இப்போதுதான் ஒன்பது மணி ஆகிறது" என்றேன்.

கொஞ்சம் அரை மனதுடன் மீட்டர் போட ஒப்புக்கொண்டு கிளம்பினார்.

இன்னொருவர் "வழக்கமாக நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் சார்"என்றார்.முன்பெல்லாம் பேரம்பேசி போனதைவிட இப்போது குறைவாகத்தான் ஆகும்.திருத்தப்பட்ட மீட்டர் பொருத்தும் முன்பு சென்ட்ரலில் இருந்து கோயம்பேட்டுக்கு 170 இருந்து 200 வரை கேட்பார்கள்.அதற்கு குறைவாக போயிருக்க முடியாது.இப்போது 120 ரூபாய்க்கு மேல் வராது.முன்பை விட பொதுமக்களுக்கு எப்படியும் லாபம்தான்.

ஆட்டோ டிரைவர் ஒருவர் இன்னொரு விஷயத்தைச்சொன்னார்," மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு சவாரி அதிகம் வருகிறது சார்".நம்பகத்தன்மை இருப்பதால் ஆட்டோவை பயன்படுத்த தயங்கமாட்டார்கள்.எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நாமாகச் சொல்லாமல் ஓட்டுனர்கள் மீட்டர் போடுவதே இல்லை.இன்னும் சிலர் திருத்திய கட்டணத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள்.நாமாக மீட்டர் பொருத்திய ஆட்டோவை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு வேறு வழியில்லை.சிறந்த குடிமகனுக்கு அழகு மீட்டர் போடச்சொல்வதுதான்.
-

Friday, October 18, 2013

மாணவர்கள் கையில் கத்தி.



கொடூரமான குற்றங்கள் நிகழும்போது வழக்கமாக என்ன சொல்வார்கள்? மோசமான படுகொலை நடந்துவிட்டால்?அவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்பார்கள்.கடுமையான தணடனை கொடுத்தால் மற்றவர்களுக்கு அந்த எண்ணம் வராது என்பது பொதுப்புத்தி.ஆனால் இப்போது கல்லூரி முதல்வர் கொலையில் குரல்கள் மாறியிருக்கின்றன.ஆனந்தவிகடன் கவுன்சிலிங் மையங்களை இயக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதியிருக்கிறது.

தண்டனைக்கான குரல்கள் பலவீனமாகி வேறு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.இது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.தண்டனையை விட தனிமனித,சமூகக்காரணிகளை கண்டறியும்போது நாம் தீர்வை நோக்கிச் செல்கிறோம்.ஆலோசனை பற்றிஇரண்டு ஆண்டுகளாக பல்வேறு பதிவுகளில் நான் சொல்லிவந்ததை வாசகர்கள் கவனித்திருக்கமுடியும்.ஆனால் தண்டனைகளும் அவசியம்தான்.

கொலை அதிகம் கவனிக்கப்பட்டுவிடுகிறது.ஆனால் மாணவ்ர்களின் தற்கொலைகள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. கோவை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை நாளிதழில் போட்டிருந்தார்கள். தற்கொலை பற்றி பரவலாக இப்படி சொல்வார்கள், மற்றவர்களைக் கொல்ல முடியாதபோது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.மாணவர்கள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கக்கூடும்.

சென்ற ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டுவந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.கல்லூரியில் மாணவ்ர்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதை இல்லை.திடீரென்று கட்டணத்தை உயர்த்துவார்கள்.அதிலும் முதல்வர் மீது காட்டமாக இருப்பார்கள் என்கிறார்.வணிகமயமாகிவிட்ட கல்வியை இந்தச்சீரழிவுக்கு முக்கியகாரணமாகச் சொல்லலாம்.அது பணம் கறக்கும் எந்திரமாக மாணவர்களைத் தரம் தாழ்த்துகிறது.

தங்களுடைய பெற்றோர் கடன் வாங்கி படிக்கவைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தெரியும்.ஒவ்வொருமுறை கடன் வாங்கச்செல்லும் தந்தையைப் பார்த்தாலே மன அழுத்தம் கூடிவிடுகிறது.ஒவ்வொருமுறை கட்டணத்திற்கும் அவன் குற்றவாளியாக்கப்படுகிறான்.குடும்பத்தை கடனில் தள்ளியவனாகத் தெரிகிறான்.நீ மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால்? சலித்துக்கொண்டு சொல்லிக்காட்டும் பெற்றோரும் இருக்கிறார்கள்.

வளரிளம்பருவத்துப்பையனுக்கு மேற்கண்ட பிரச்சினைமட்டும் இல்லை.உடல் மாற்றங்கள் அங்கீகாரவேட்கை என்று பிரச்சினைகள்விரிகின்றன..ஃபேஸ்புக்கில் காதலியுடன் நட்பு பாராட்டிய சக மாணவனைக் கொன்றது ஒரு உதாரணம்.நுகர்வு கலாச்சாரம் காரணமாக அவன் இல்லாதவனாகவே உணர்கிறான்.உணர்ச்சிப்பூர்வமான தோழமையும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு வேண்டும்.

உளவியல் ஆலோசனை மையங்களின் முக்கியத்துவம் இப்போது உணரப்பட்டுவருகிறது.ஆனால் அப்படி துவக்கப்பட்ட மையங்களை மாணவ்ர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று செய்தியில் படித்தேன்.பொதுவில் இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க நாம் விரும்புவதில்லை.அது நமது சுயமதிப்பைக் குறைக்கக்கூடும்நமக்கே எல்லாம் தெரியும் என்று நினைப்பதே வழக்கம்.அதற்காக இந்த முயற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆலோசனை சொல்பவர் மாணவர்களை ஈர்க்க முயற்சி செய்யவேண்டும்.மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பயிற்சிகளை நடத்தலாம்.உளவியல் ஆலோசனையின் தன்மையைப் புரியவைக்கும் கலந்துரையாடல் கூட்டங்கள் அவசியம்.ரகசியம் காப்பதை அவர்களுக்கு உறுதி செய்யவேண்டும்.பண்புடைய தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது எல்லாவற்றையும் விட முக்கியம்.
-