Wednesday, October 9, 2013

நாட்டுக்கோழி மருந்தா?



நாட்டுக்கோழிக்கறி சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு பிராய்லர் விருப்பமானதாக இல்லை.அதிலும் இளம் சேவல்,முட்டைக்கோழி என்று விதவிதமான சுவையை உணர்ந்திருப்பார்கள்.முற்றிய சேவல் சுவையாக இருக்காது.சமைக்க அதிக நேரம் எடுக்கும்.சிலர் பொறுமையில்லாமல் சமையல் சோடாவை போடுவார்கள்.விரைவில் தயாராகிவிட்டாலும் சுவை மாறிப்போகும்.

சுவையான கறி என்பது முட்டைக்கோழிதான்.ஆனால் அதிக எண்ணிக்கையில் இருந்தால் மட்டுமே அறுப்பார்கள்.உள்ளே சிறுசிறு கருக்கள் இருக்கும்.வராத விருந்தினர் வந்தால் வேறு வழியில்லாமல் அறுப்பதுதான்.ஆனால் மனசில் ஒருபக்கம் வலித்துக்கொண்டுதான் இருக்கும்.எதையோ இழந்துவிட்டது போல உணர்வார்கள்.இளம் சேவலும் நல்ல சுவைதான்.


கோழி முட்டையிடும் பருவம் வந்துவிட்டால் நல்ல சேவலாக வாங்கி இணை சேர்ப்பார்கள்.இருபத்தொருநாள் அடைகாத்து வெளியே எடுக்கப்போகும்போது மனசு பரபரக்கும்.அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் இருந்தால் அத்தனை சந்தோஷம்.சில நேரங்களில் அதிக முட்டைகள் பொரிக்காமல் போய்விடுவதுண்டு.அதை விதவைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

நாட்டுக்கோழியும் சேவலும்தான் எத்தனை அழகு? சில பிராய்லர் கோழிகளை இணையத்தில் படங்களாக பார்த்தேன்.அருவருப்பாக இருக்கிறது.என் நண்பன் ஒருவன் பிராய்லர் கோழி சாப்பிடமாட்டான். எனக்கு ஒத்துக்கொள்வதில்லை என்று சொல்கிறான்.வேறு சிலர் மிருதுவாக இருக்காது என்பதால் விரும்புவதில்லை.


பிடிக்காத ஜலதோஷம் பிடித்துக்கொண்டால் கோழி அறுத்து குழம்பு வைப்பார்கள்.மஞ்சள் கொஞ்சம் அதிகம் சேர்த்து கொதிக்கும் குழம்பை ஊதிஊதிக் குடிப்பார்கள்.நாட்டுக்கோழி சாப்பிட்டபின்பு தெம்பாக உணரவைக்கும்.மனசு ஒரு காரணம் என்றாலும்  வைட்டமின்கள்,இரும்புச்சத்து சேர்வது இன்னொரு காரணம்.பலருக்கு மனசுக்குப்பிடித்த உணவு என்பதால் சந்தோஷமாகிவிடுவார்கள்.

கிராமப்புறங்களில் பல குடும்பங்களின் பொருளாதாரம் நாட்டுக்கோழிகளை மையமாகக் கொண்டிருக்கின்றன.சில நேரங்களில் ஏதேனும் நோய்தாக்கினால் அவசரமாக விற்றுவிடுவார்கள்.அவசர பணத்தேவையை கோழிகள் ஈடுகட்டிவிடும்.சேவல் சண்டையை திரைப்படங்களில்கூட பார்த்திருப்பீர்கள்.சேவல்,கோழிகளால் ஜென்ம விரோதம் கொண்ட குடும்பங்களும் உண்டு.முளைத்த பயிரை,விதையை கிளறி சிதைத்துவிடும்.

சந்தோஷமான சலித்துக்கொள்ளாத சமையல் அது.உரலில் மசாலாவை ஆட்டி,அம்மியில் தேங்காயை தனியே அரைத்து ஊற்றி....குழம்பு கொதிக்கும்போது வெகுதூரம் வாசனை துளைக்கும்.முற்றிய தேங்காயை தனியே நறுக்கிப்போடுவார்கள்.வெந்தபின்பு ரசம் ஊறிய தேங்காய்த்துண்டு அத்தனை சுவை.முட்டையை குழம்பில் போட்டு வேகவைப்பதும் உண்டு.
 
நாட்டுக்கோழி மருந்து என்றுசொல்லி வாங்கிப்போனதாக கேள்விப்பட்டேன்.அது பற்றி ஒன்றும் தெரியவில்லை.நாட்டுக்கோழி சூடு என்றும்,சிற்றின்பத்தைத் தொடர்புபடுத்திப் பேசுவதையும் கேட்டிருக்கிறேன். கலர்பொடிகளைத்தூவி,சாலைகளில் தூசுபடிய விற்கும் பிராய்லர் கோழிக்கறி நோயை உண்டாக்கும் வாய்ப்பிருக்கும்போது நாட்டுக்கோழி மருந்துதான்.பல கிராமப்புறக்குடும்பங்களின் பொருளாதாரம் நோய்பீடிக்கும்போது நாட்டுக்கோழி மருந்தாக காப்பாற்றுகிறது.
-

3 comments:

மகேந்திரன் said...

செயற்கையாக வளர்க்கப்படும் பிராயலர் கோழிகளை விட
நாட்டுக்கோழிகள் ஆரோக்கியமானதே...

Anonymous said...

நாட்டுக்கோழி விடலையாக உள்ளபோது உண்டால் நல்லது எனவும், அதில் ரசம், குழம்பு, பிரட்டல், கறி, வறுவல், பொறியல் என வகை வகையாய் எங்கள் அப்பாச்சி செய்வாங்கள். நடமாட்டமின்றி, தீவனமிட்டு, பண்ணைகளில் உண்டாக்கப்படும் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் சுவையானவை, ஆரோக்கியமானவை.

kalil said...

'' கோழி முட்டையிடும் பருவம் வந்துவிட்டால் நல்ல சேவலாக வாங்கி இணை சேர்ப்பார்கள்.இருபத்தொருநாள் அடைகாத்து வெளியே எடுக்கப்போகும்போது மனசு பரபரக்கும்.அதிக எண்ணிக்கையில் குஞ்சுகள் இருந்தால் அத்தனை சந்தோஷம்.சில நேரங்களில் அதிக முட்டைகள் பொரிக்காமல் போய்விடுவதுண்டு.அதை விதவைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

நாட்டுக்கோழியும் சேவலும்தான் எத்தனை அழகு?''

arumai