Sunday, October 31, 2010

தீபாவளிக்கு மது விற்பனை அதிகரிப்பது ஏன்?

தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்?
பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது.
நண்பேண்டா -சொல்ல ஆளில்லை!
எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதற்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா என்று தெரியவில்லை.விழாக்காலங்களில் மது மீது அதிக ஆர்வம் உள்ள சிலர் தங்களது குற்ற உணர்வை -சமூகம் தவறென்று சொல்லித்தந்திருக்கிறது-குறைத்துக்கொள்ள குழுவை சேர்த்துவிடுகிறார்கள்.
விழாக்கால மனப்பாங்கு!
விழா நாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு.அறிமுகமாகாதவர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் என்று பொது இடங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது.எல்லோரும் நம்மை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும்,கவனிப்பார்களா?என்ற கலக்கமும்,அதன் தொடர்ச்சியாக பதட்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாலு பேருக்கு முன்னால் பேசவோ இயங்கவோ நமக்கு எப்போதும் கொஞ்சம் தயக்கம்தான்.பெரும்பாலான குற்றச்செயல்களும் மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளன.மது பதட்டத்தை குறைத்து செயல்பட தூண்டுகிறது.எனக்கு ஒரு நண்பனை தெரியும்.தண்ணி அடித்த பிறகுதான் போனை எடுத்து பெண்களிடம் பல மடங்கு பேசுவான்.அவனே நேரில் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.மிதமான போதை இருந்தால் விழா நேரங்களில் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எளிதாக பதட்டமின்றி,என்ன நினைப்பார்களோ?என்ற எண்ணமின்றி இயங்கலாம்.
வேறு என்னதான் செய்வது?
பண்டிகை என்று சொல்கிறார்கள்,விழா என்று சொல்கிறார்கள்.இனிப்பும்,விருந்தும் சாப்பிட்டு விட்டால் போதுமா?மன எழுச்சி குறையவேயில்லை.நண்பர்கள் இலவசமாக வாங்கித்தருவதாக அழைக்கிறார்கள்.வேறு என்னதான் செய்வது?
மாறிவரும் மதிப்பீடுகள்:
அலுவல் தொடர்பான கூட்டங்களில் ,விருந்துகளில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.மிதமான போதையில் பேசிக்கொண்டிருப்பதுதான்பலருக்கு மகிழ்ச்சியாக ,உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்த உதவுவதாக இருக்கிறது.மதுவால் ஏற்படும் சமூகக்கேடுகள்,சீரழிவுகள்,தனிமனிதனுக்கு உடலநல பாதிப்புகள் எல்லாமும் பின்தள்ளப்பட்டு இன்றைய நாகரீகமாக மாறுவதற்கு நுகர்பொருள் கலாச்சாரமும்,அதன் விளைவாக ஏற்பட்ட அடையாள சிக்கல்களும் ஒரு காரணம்.தவிர,இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியும் இல்லை.
-

Thursday, October 28, 2010

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது எப்படி?

காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.
மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரை உற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உண்மையை உணர்த்தும் உடல்மொழி !
படிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரது கைகள்,கால்கள்,முகபாவம் என்னசொல்கிறது என்பதை பொறுமையாக கவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதை நம்மால் சொல்லமுடியும்தானே!அசட்டுச்சிரிப்பா?சந்தோஷ சிரிப்பா?சோக சிரிப்பா?என்பதை உணர உங்களால் முடியும்.சில நேரங்களில்யாரையோ ஏன் டென்ஷனாக இருக்கிறீர்கள்?என்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்தது?இன்னும் இன்னும் கவனம் செலுத்துங்கள்.ஒருவரது உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்.
கவனமாக கேளுங்கள் :
உடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரது வார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது.காது கொடுத்து கேளுங்கள் கடவுள் ஆகலாம் -தலைப்பிட்ட எனது பதிவைஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்.வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியை அடையாளம் காணுங்கள்.அதற்கு ஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போது நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா?
ஒருவர் எப்படி உணர்கிறார்?
ஒரே சம்பவம் உங்களிடத்திலும்,உங்கள் நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பது நிச்சயமல்ல!இருவருக்கும் வேறுவேறு நம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளை கவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு சொல் இருக்கிறது.நீங்கள் உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம் அக்கறையும்,மனிதநேயமும் இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால் குழப்பத்துக்கும்,பிளவுக்கும் அங்கே என்ன வேலை?
மேலும் சில துளிகள் ..............
 • ஆம்.கண்களை கவனிக்கவும்.
 • கவனமாக கேட்கவும்
 • அவரும் உங்களைப்போல மனிதர்தான்.
 • ஒவ்வொருவருக்கும் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
 • உணர்வுகளை கண்டறியுங்கள்
 • ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிலை பெறும். -

Monday, October 25, 2010

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய எனது பதிவை படித்துவிட்டு ஒருவர் கேட்டார்.ஆண்களுக்கு இவையெல்லாம் ஏற்படாதா?.விதி விலக்குகள் விதிகள் ஆகுமா என்று தெரியவில்லை.சில ஆண்களுக்கு பெண்கள் மீது தீராத ஆத்திரம் உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.எங்கேயாவது ஆணுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்தால் அவன் பாவம்.அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த சந்தோஷமும் இல்லை.பெண்களைப்போல அவனால் வெளியே சொல்லவும் முடியாது.அடேயப்பா என்று மேலும் கீழும் பார்ப்பார்கள்.
ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுதான் நல்லது.
எனக்கொரு நண்பன் இருந்தான்.அவனுக்கு திருமணமாகவில்லை.அவனுடைய அலுவலகத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு -திருமணமானவர்-அவனை பிடித்துப்போனது.சாப்பாடு எடுத்து வரத்தொடங்கினார்.கணவர் பற்றி தொடர்ந்து குறை கூறுவது,கணவர் வீட்டில் இல்லைஎன்பதை அழுத்தமாக தெரிவிப்பது.அடிக்கடி போனில் பேசுவது என்று ஆரம்பித்தார்.அவனுக்கு பிடிக்கவில்லை.நேரில் பார்ப்பதை தவிர்த்தான்.போனை எடுக்கவில்லை.யாரிடமும் வெளியே சொல்லாமல் எனக்கு போன் செய்தான்.அந்த பெண்,நிறுவன தலைமையிடம் நெருக்கமாக இருந்தார்.அமைதி காக்குமாறு கூறினேன்.மற்ற பெண்களும் இவனை பார்த்தாலே குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.அப்பெண்ணின் திட்டமிட்ட அணுகுமுறையால் அலுவலக நண்பர்கள் இவனை விட்டுவிட்டு பெண்களிடமே அதிகம் பேசிக்கொண்டிருக்க தனிமைப்படுத்தப்பட்டான்.ஒரு கட்டத்தில் மாறுதல் பெற்று வெளியேறினான்.
பெண் என்னதான் செய்வாள் ?
 • நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
 • செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
 • அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
 • மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
 • பணியில் ஒத்துழைக்க மறுப்பது
 • நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
 • தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
 • செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.
பொதுவாக ஆணுக்கு நடப்பதெல்லாம் அபூர்வமாக நடப்பதுதான் .விபத்துபோல.ஆனால் பெண்ணுக்கு நடக்கும் தொல்லைகள் வாழ்க்கை முறையாக உள்ளது.ஆணுக்கு நஷ்டஈடு கொடுக்கலாம்.ஆனால் ஆண்களால் நேரும் பெண்களின் தொல்லைகளுக்கு சட்டமும்,இயக்கமும் தேவை.இது பாலியல் தொல்லைகள் என்றில்லாமல் அனைத்து பிரச்சினைகளுக்கும் பொருந்தும். -

Saturday, October 23, 2010

உங்களை உலுக்கும் பிரச்சினைகள் குறித்து .......

வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன.நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?மர
மரபு சார்ந்த வழிகளில் .................
நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை.
 • கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம்
 • மத குருமார்களை சந்திக்கிறோம்:நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம்.
 • ஜோதிடர்களை சந்திக்கிறோம்:எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை கேட்கிறோம்.சிலர் வெளிப்படையாக பேசுகிறார்கள்.குரு மாறினால் ,சனிப்பெயர்ச்சி அடுத்து அல்லது திசை மாறியவுடன் உங்கள் தொல்லைகள் தீரும் என்கிறார். நம்பிக்கையுடன் திரும்புகிறீர்கள்.
 • நல்ல நண்பர்கள் ,உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்.
 • டாஸ்மாக்கை தேடிப்போகிறோம்.
 • எதுவும் செய்யாமல் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சிக்கலாக்குகிறோம்.
தற்கொலையை தேர்ந்தெடுப்பது,மற்றவர்களை துன்புறுத்துவது என்ற அளவில் ஆளுமைகளுக்கு தகுந்தவாறு பிரச்சினைகளை அணுகி வந்திருக்கிறோம்.
நவீன வழிமுறைகள் என்ன?
சமீபத்தில் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை திரையரங்கத்தில் பார்த்தேன்.உங்கள் பிரச்சினைகளுக்கு குறுந்தகவல் மூலம் தீர்வு தரப்படும் என்று தெரிவித்தது.அந்நிறுவன சந்தாதாரர் ராகுலை எல்லோரும் தேடுகிறார்கள்,விரும்புகிறார்கள்.SMS COUNSELLING சிலருக்கு தீர்வை தரலாம்.பொதுவாக counselling எனப்படுவது நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது.சில இடங்களில் மன நல ஆலோசனை.உளவியலில் பயிற்சி பெற்ற ஒருவரிடம் நிகழ்வுகளையும்,உங்கள் உணர்வுகளையும் தெரிவித்தால் அவர் பிரச்சினை தீர்க்க வாய்ப்புகளை வழங்குவார்.நீங்கள் சரியான முடிவை தேர்ந்தெடுக்கலாம்.யாரிடமும் சொல்ல முடியாத தனிநபர் பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வு.அயல் நாடுகளில் பிரபலமடைந்த போதிலும் நம்மிடையே இன்னும் போதுமான வாய்ப்புகள் இல்லை.உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் பயன்படுத்தலாம்.இல்லையெனில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
சுயமாகவே தீர்வை அணுகும் முயற்சி .......
அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.புதிய தகவல்களை கொண்டு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை எழுதவும்.தீர்வுக்குள்ள சாதகமான,பாதகமான விசயங்களையும் எழுதுங்கள்.அதிக நன்மையுள்ள தீர்வை தேர்ந்தெடுக்கவும்.வழக்கமாக,பிரச்சினைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மை சிந்திக்கவிடாது.இன்னொருவருடன்(ஆலோசகர்,நண்பர்,உறவினர்,குருமார்கள்)
பேசி தீர்ப்பதே சிறந்தது என்றபோதிலும் முயற்சி செய்யுங்கள்.உரிய தீர்வுகளை கண்டடைந்தால் நாளை வாழ்வு நலமாகும். -

Thursday, October 21, 2010

நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமம்

காமம் அடிப்படை உணர்வு.உயிர்களின் இனப்பெருக்கத்திற்காக இயற்கையால் வழங்கப்பட்ட காமம் மனிதனின் பரிணாமத்தால் திசை மாறிவிட்டது.நோக்கத்தை தாண்டி தலைமை இன்பமாக (பிளேட்டோ),அங்கீகாரத்தின் முதல்படியாக,உறவுகளை நிர்ணயிப்பதாக,எல்லாமுமாக மாறிப்போனது.உள்ளத்தின் உயிராக உள்ள காமம் இன்று பெருங்குழப்பத்தையும்,கொலைகளையும்,தற்கொலைகளையும்,இன்னபிற சிக்கல்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.கட்டுப்பாடுகள் ஏற்பட்டகாலம் குறித்து விவாதங்கள் இருக்கின்றன.இன்னமும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தில் காமத்தில் கட்டுப்பாடுகள் இல்லை.வெளியே செருப்பு இருந்தால் கணவன்கூட உள்ளே நுழையக்கூடாது.பாலுறவின் மீது கொண்ட அளவற்ற மரியாதையே காரணம்.இப்போது பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வின் காரணமாக எல்லாமும் மாறிவிட்டது.காமத்தால் கடவுள்கள் உள்பட விதிவிலக்கின்றி அனைவரும் பாதிக்கப்பட்டார்கள் என்பது நீங்கள் அறிந்ததே.
ஒரு கிராமத்தில் தொடர்ந்து சுமார் ஒருமாத காலத்திற்குள்ளாக ஆறு மரணங்களுக்கு மேல் நிகழ்ந்துவிட்டது.தற்கொலைகளும் உண்டு.அதில் நான்கு பேர் இளம்வயதினர்.காதல்,கள்ளக்காதல் போன்றவை காரணமாக இருந்தன.வயது முதிர்ந்த பெரியவர்கள் சிலர் கூடி பேசிக்கொண்டிருந்தார்கள்.விவாதத்தின் இறுதியில் மன்மதன் தெருக்கூத்து நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.எனக்கும் குழப்பமாக இருந்தது.தெருக்கூத்து எப்படி மரணத்தை தடுக்க முடியும்? மன்மதன் கதையை தெரிந்தவர்களிடம் கேட்டபோது,
சாம்பலாக்கப்பட்டு உயிர்த்தெழுந்த மன்மதன்.
மன்மதன் காமத்தின் கடவுள் என்பது தெரியும்.சிவபெருமானின் தவத்தை கலைக்க தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறான்.சிவனுக்கு கோபம் மேலிடவே தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்குகிறார்.ரதி அழுது தவிக்க,ரதிமீதான பாசத்தில் இறந்துபோன காமன் மீண்டும் உயிர்பெறுகிறான்.ஆனால் முழுமையாக,முன்பிருந்தது போலல்ல! கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.குறிப்பிட்ட காலங்கள் இடைவெளியில்தான் இருவரும் ஒன்று சேரவேண்டும்.உங்களைப்போலவே நான்குவரி கதைகேட்ட பின் எனக்கும் புரிந்தது.கட்டுப்பாடற்ற காமம்தான் மரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றும்,மன்மதன் தெருக்கூத்து கட்டுப்பாடுகளை உருவாக்கும் என்பது நாட்டுப்புற நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.காமனுக்கு விழா எடுத்தார்கள்.
தெருக்கூத்தையும்,அதையொட்டிய சடங்குகளையும் நான் பார்த்தேன்.நெற்றிக்கு நேராகவைத்து தீ வைத்த அம்பை தேரின்மீது எரிய,தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.மன்மதன் தேரிலிருந்து குதித்துவிட்டார்.மூன்றாவது நாளில் பால் காரியம் செய்தார்கள்.மன்மதனை எழுப்பும் நாள்,பஞ்சாங்கம் பார்த்து முடிவு செய்யப்பட்டது.அன்றைய தெருக்கூத்தில் சிவனும்,ரதியும்தான்.ரதியின் விதவைக்கோலம் பார்ப்பவர்களை கலங்கவைத்தது.களிமண்ணால் பெரிய அளவில் மன்மதன் உருவாக்கப்பட்டது. காலையில் அனைத்து வீடுகளிலிருந்தும் பூசை பொருட்களுடன் பொதுமக்கள் மன்மதன் சிலையருகே கூடினார்கள்.சிவனால் மன்மதன் உயிர்ப்பிக்கப்பட,ரதிக்கு பூவும்,பொட்டும் வழங்கினார்கள்.பொதுமக்கள் பூசை செய்து வணங்கினார்கள்.
நெற்றிக்கண் பற்றி..............................................................
காமம் வலிமையான உணர்வு.ரிஷிகளையும்,கடவுள்களையும் பதம் பார்த்து குழப்பும் ஆற்றல் மிக்க உணர்வு. அதன் குறியீடாக மன்மதன் இருக்கிறார்.சிவனையும் விட்டுவைக்காததால் நெற்றிக்கண்ணால் எரிக்கிறார்.ஏன் நெற்றிக்கண்? மன்மதன் காமத்தின் குறியீடு என்பதுபோல நெற்றிக்கண் ஞானத்தின் குறியீடு.அறிவாற்றல் கொண்டு உணர்வுகளை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே இதில் உள்ள செய்தி.சிந்திக்க துவங்கும்போது உணர்வுகள் இரண்டாம்பட்சமாகிவிடுகின்றன.அதே சமயம் உணர்வுகள் கொதிக்கும்போது சிந்திக்கும் ஆற்றல் இருப்பதில்லை.உணர்வுகளை ஒழுங்குபடுத்தி அறிவு சார்ந்து வாழ்வது நன்மையைத்தரும்.
-

Saturday, October 16, 2010

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் உடன் இருப்பவர்களால்,அலுவலர்களால் தரப்படும் பாலியல் தொல்லைகள் அமிலம் போல அவர்களது உள்ளத்தை சிதைக்கிறது.இரண்டு நிகழ்வுகளையும் அதன் எதிர்வினையையும் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி.அந்நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தான் .அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது முறையற்ற பாலியல் வேட்கையை வெளிப்படுத்தியவாறு இருந்தான்.அந்தப்பெண் திருமணமானவர்.முடியாமல் போகவேஅந்த பெண்ணைப்பற்றி தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான் ."ஒழுங்காக பணிபுரிவதில்லை.நேரத்துக்கு வேலையில்இருப்பதில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்."
மத்திய அரசு திட்டமொன்றின் மேலாளராக சமூக சேவை வந்தவன் அவன்.திருமணமாகாத ஒரு பணியாளர் மீது வெறி கொண்டான்.அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவனிடம் பணிபுரியும் பணியாளன் ஒருவனும் சேர்ந்து அந்தப்பெண் உடன் பணிபுரியும் பணியாளருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்வதை செல்போன் கேமராவில் படம்பிடிக்ககளப்பணியாளர் ஒருவரை பணித்தார்கள்.களப்பணியாளர் மறுத்து விட்டார்.தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த பெண்ணை தொடர்ந்து சுற்றி சுற்றி கழுகுகளை போல கவனிக்கத்துவங்கினார்கள்.அந்த அயோக்கியர்களின் தொல்லைகளுக்கு பயந்து ஐந்து மணிநேரம் பயணம் செய்து தினமும் பணிக்கு வர ஆரம்பித்தார் .அவர்களது கீழ்த்தரமான் நடவடிக்கைகள் வெளியே தெரியவரவே அந்தப்பெண்ணை பற்றி தரமற்ற செய்திகளை பரப்ப ஆரம்பித்தார்கள்.
பெண்ணின் மீதான அவதூறுகளின் பின்னணி
இரண்டு நிகழ்வுகளிலும் முடிவு ஒரே மாதிரிதான் இருந்தது. தனது வெட்கக்கேடான முயற்சிகள் பலிக்கவில்லை என்ற உடன் பெண்களைப்பற்றி மோசமான அவதூறுகளை பரப்பத்துவங்கினார்கள்.தங்களைப்பற்றிய பிம்பம் உடைந்துவிடும் என்று அஞ்சி அப்பெண்களின் மீது சேற்றையிரைத்தார்கள்.பல்வேறு நிகழ்வுகளில் அவனுடன் தொடர்பு ,இவனுடன் தொடர்பு என்று பெண்களை பற்றி ஆண்களின் வார்த்தைகள் இது போன்றவை தான்.
பெண்களின் பதிலுரைகள் என்ன?
அதே குழுவில் பணிபுரிந்ததால் உடன் பணிபுரியும் மற்ற பெண்களிடம் மேற்கண்ட பாலியல் தொல்லைகளைப்பற்றி பேசினேன்.அவர்களது கருத்துரைகள் என்னை சிந்திக்கத்தூண்டியது.பத்து பெண்களிடம் இதைப்பற்றி கருத்துகேட்டபோது அவர்களது கருத்துக்கள்.
 1. ஐயோ!என்னென்னமோ நடக்குதுடா சாமி!
 2. உங்களுக்கு யார் சொன்னது ?
 3. அழகாக வட்டமுகமாக இருக்குமே அந்த பெண்தானே ?
 4. அவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்
 5. பேசாமல் அவருடைய சொந்த ஊரிலேயே மாற்றி விடவேண்டும் (குடும்பத்தை பிரிந்து இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறான் )
 6. தலைமை அலுவலகத்தில் புகார் செய்யவேண்டும்.
 7. அவன் நிறையபேரிடம் அப்படி நடந்துகொள்கிறான்
 8. நம்முடன் பணிபுரியும் பெண்களே அவனுக்கு சாதகமாக இருக்கிறார்கள்.
 9. பொம்பளையா பொறந்தாவே அப்படித்தான்.
 10. அவனுங்கள நிக்க வச்சி சுடணும்.
பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் குறித்துநிவாரணம் பெற சட்டம் தொடர்பாக இப்போது இருப்பது 1997-ல் விசாகா எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மட்டுமே. சட்டம் வருவது இழுத்துக்கொண்டிருக்கிறது.ஆனால் சிலர் பட்டதாரிகளாக இருந்தும் அவர்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெண்ணின் வாழ்க்கை முறையாக இருப்பதாக கருதினார்கள்.அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
என்ன செய்யலாம்...........................?
பள்ளி,கல்லூரிகளில் தற்போது நுகர்வோர்சங்கங்கள்,செஞ்சுருள் சங்கங்கள்,போன்றவை உள்ளன.அதேபோல பெண்ணுரிமை சங்கங்களை ஏற்படுத்தலாம்.அடிப்படை உரிமைகள்,தீர்வு காண்பது,பாதிக்கப்படும்போது சரியாக இயங்குதல் குறித்து பயிற்சி தரலாம்.அடுத்ததாக,மகளிர் சங்கங்களுக்கும் விழிப்புணர்வும் பயிற்சியும் தரலாம். -

Friday, October 15, 2010

கை கழுவ சொல்லிக்கொடுங்கள்

அக்டோபர்-15 கை கழுவும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது யாருக்கும் தெரியாதா என்ன? ஆம்.சோப்புடன் சரியாக கை கழுவப்பட்டால் 3.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது.இவ்வாறு உயிரிழக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை சுவாசம் தொடர்பான நோய்களாலும், வயிற்ருப்போக்காலும் பலியாகின்றன.குழந்தைகளை சுகாதாரமாக பாதுகாப்பது பெரும் சவாலாகவே இன்னமும் இருப்பது நம்மிடையே விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது.நுரையீரல்,குடல்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கள் முறையாக கை கழுவாததனால்உடலுக்குள் செல்கின்றன.குழந்தைகளிடையே நெருக்கத்தில் தொடர்ந்து மற்றவர்களிடம் பரவுகின்றன.ஆனால்,இது அவ்வளவு எளிதானதல்ல. பள்ளிகளில்,விளையாடுமிடங்களில்,பொது இடங்களில் கை கழுவுவதை கடைபிடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுமானால் -முயற்சி இருந்தால் முடியாதது என்ன இருக்கிறது.நம்முடைய மிகப்பெரிய பலவீனம் இது போன்ற நோக்கங்களுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளாதது.சிறு வயதில் திரும்பத்திரும்ப சிறுவர்களிடம் ஏற்படுத்தும் பழக்கம் நல்ல விளைவுகளை தரும் என்பது நமக்கு தெரிந்ததே.
குழந்தைகளை சுகாதாரமற்ற நிலையில் பணிபுரிபவர்களை தொடவிடாமல் இருப்பது நல்லது.தங்களது பனி காரணமாக குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்செல்ல நேரும்போது காப்பகத்தில் இத்தைகைய சுகாதார முறைகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவது போன்றவை நோய்களையும் தொடர்ந்து இறப்புகளையும் தடுக்கும்.குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணியாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக இருப்பதும்,சோப்பு வைக்கப்பட்டிருப்பதும் போன்ற சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பள்ளிகளை தேர்ந்தெடுக்கவேண்டும்.
சில வழிமுறைகள் :
கையை குழாயில் நனையுங்கள்.பின்னர் சோப்பு பயன்படுத்தி விரல் இடுக்குகள் உள்பட அனைத்து இடங்களிலும் மணிக்கட்டை தாண்டி நன்றாக தேயுங்கள்.சுமார் இருபது நொடிகள் வரை தேய்த்து பின் குழாயை திறந்து சுத்தமாக கழுவுங்கள்.டவல்,சுத்தமான துணி, பேப்பர் டவல் கொண்டு துடைக்கலாம்.கையை உலர வைப்பதும் நல்லதுதான்.எப்போதெல்லாம்?
 • சாப்பிடுவதற்கு முன்பும்,பின்பும்.
 • வெளியில்,பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய உடன்
 • கழிப்பறை சென்று வந்தவுடன்
 • விளையாடிவிட்டு வந்தவுடன்
குழந்தைகளை தூக்கும் முன்பாக ,மேலும் சிறுவர்களை கையாளும்,ஒவ்வொருமுறையும் இத்தகைய சுகாதாரத்தை கடைப்பிடிப்பது அவர்களது நோயையும்,இறப்பையும் தடுக்கும்.ஆம்.குழந்தைகளே நமது எதிர்காலம்.அவர்களது உயிர் காப்பது நம் கடமை. -

Tuesday, October 12, 2010

பாகவதமும் பைபிளும்

ஸ்ரீமத் பாகவதத்தையும் பைபிளையும் சுமார் இரு வார காலத்திற்குள் படித்தேன்.ஒரு குழந்தையை போல பாகவதம் என் மனதை கவர்ந்தது.பைபிளின் மலைப்பிரசங்கம் திரும்ப திரும்ப என்னை படிக்கத்தூண்டியது.பின்னர் சத்திய சோதனை படிக்கநேரிட்டபோது மகாத்மாவுக்கும் மலைபிரசங்கம் ஈர்த்துவிட்டதை அறிந்து எனக்குள் உற்சாகம்.கிருஷ்ணனும்,இயேசுவும் ஒரு சூப்பர் பவராக அவர்களது இறுதிநிலை என்னை உருக்கியது.இயேசுவின் வியாகூலததுடனே என்ற இடத்தில் எனக்கு தொண்டையை அடைத்தது.கடைசியில் கடவுளுக்கும் ,தூதருக்கும் மரணம் விதிவிலக்கில்லை என்பது ஜீரணிக்க சிரமமாக இருந்தது.ஒரே மாதிரி மனநிலையில் சில நாட்கள் இருந்தேன்.
சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.இதிகாசங்களையும்,பாகவதம்,பைபிளையும் என் அத்தை மூலமாக வாய்மொழி கதைகளாகவே கேட்டிருக்கிறேன்.கிருஷ்ணரையும்,பைபிளையும் படித்த பாதிப்பில் இருந்தபோது பௌர்ணமி நிலவு அன்று என் அண்ணன் மகன் கதை கேட்டான்.நான் அவனுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.அந்த கதை கீழே...
சிங்கராஜா கதை .............................................................................
ஒரு ராஜாவுக்கு வெகு நாட்களாக குழந்தையே இல்லை.அவர்கள் இருவரும் சுற்றாத கோயில் இல்லை.பின்னர் அவர்கள் பார்வதி,பரமசிவனை நோக்கி குழந்தை வரம் கேட்டு தவம் இருந்தார்கள்.தவத்தின் பலனாக மகாராணி கர்ப்பமானார்.அரண்மனை வைத்தியர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்கள்.பத்து மாதம் கழித்து ராணிக்கு வயிற்று வலி உண்டானது.மருத்துவச்சியை கூப்பிட்டு மருத்துவம் பார்த்தார்கள்.மருத்துவச்சி குழந்தை பிறந்தபின் ராஜாவை மட்டும் அழைத்து காதில் கிசுகிசுவென்று ஏதோ சொன்னார்.ராஜா மந்திரியை கூப்பிட்டு "குழந்தை சிங்கமுகம் கொண்டிருக்கிறது.இந்த குழந்தை அரண்மனைக்கு வேண்டாம்.எங்காவது தூக்கிப்போய் போட்டுவிடுங்கள்"என்று கூறிவிட்டார்.மந்திரியும் பக்கத்து நாட்டில் விட்டு விட்டு வந்துவிட்டார்.ராணியிடம் குழந்தை செத்துவிட்டது என்று பொய் சொல்லி விட்டார்கள்.பக்கத்து நாட்டில்ஒரு பாட்டி குழந்தையை கண்டெடுத்து கடவுள் கொடுத்த குழந்தை என்று கூறி வளர்த்து வந்தார். சிங்க ராஜா சிறப்பாக வளர்ந்தார்.அந்த ஊரில் மாதம் மும்மாரி பொழிந்தது.நிலமெல்லாம் நெறைய விளைச்சலாக இருந்தது.யாருக்கும் நோய்நொடி ஏற்படவில்லை.யாரும் சாகவில்லை.சிங்கராஜாவின் சக்திதான் காரணம் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.இதைக்கேள்விப்பட்ட சிங்கராஜாவின் தந்தைக்கு தப்பு செய்துவிட்டோம் என்று உரைத்தது.நாட்டில் வறுமை,பஞ்சம்,பட்டினி,சாவு வேறு துன்புருத்திக்கொண்டிருன்தது.மகனிடம் உண்மையை சொல்லி அழைத்து வருமாறு தளபதியை அனுப்பினான்.சிங்கராஜா ஒப்புக்கொள்ளவில்லை.என்னை பாலூட்டி வளத்த தேசத்திற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறி மறுத்துவிட்டார்.கட்டாயமாக அடித்து இழுத்துவர ஆட்களை அனுப்பினான்.ஆனால் சிங்கராஜாவை மறைந்திருந்து அடித்தால் அடித்தவர்களுக்குதான் வலித்தது.தோற்றுப்போய் திரும்பி விட்டார்கள்.சிங்கராஜாவின் தந்தை பக்கத்து நாட்டின் மீது படையெடுத்து மகனை அழைத்து வருவேன் என்று படைகளுடன் புறப்பட்டார்.இதைக்கேள்விப்பட்ட சிங்கராஜா கண்கலங்கினார்.பார்த்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.இரண்டு நாட்டுக்கும் போர் மூண்டது.போரை தடுக்கப்போவதாக பாட்டியிடம் கூறிவிட்டு காலில் விழுந்து வணங்கினார்.பாட்டி அழுதார்.சிங்கராஜாவின் முகம் இப்படி வாடிப்போய் இருந்து இதற்கு முன் பார்த்ததேயில்லை. போரைத்தடுக்க செல்லும்போது சிங்கராஜாவின் தந்தை எய்த அம்பு மார்பில் பாய்ந்தது.துடித்து கீழே விழுந்தார்.மக்கள் சொன்னார்கள் "சிங்கராஜா வந்தபின் இந்த நாட்டில் யாரும் இறந்ததில்லை!அவருக்கு ஒன்றும் ஆகாது."சிங்கராஜா சொன்னார் "இல்லை ,என்னை உருவாக்கியவனாலேயே என் உயிர் பறிக்கப்பட்டதால் என் காலம் முடிந்துவிட்டது". -

Sunday, October 10, 2010

நல்ல தூக்கம் இல்லையா?

இன்றுஅக்டோபர் 10 உலக மனநல நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.தூக்கமின்மை குறித்து ஒருவர் ஈமெயில் அனுப்பி கேட்டிருந்தார்.சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் போரிலோ,சதியாலோ தாக்கப்பட்டபின் மறைவிடத்தில் தாக்கப்பட்டவரை பார்க்கச்செல்வார்கள்.அவர் தூங்கிக்கொண்டிருப்பார்."நன்றாக தூங்குகிறார் அவருக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை".ஆம்.நல்ல தூக்கம் ஒருவருக்கு உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருப்பதை குறிக்கிறது.உடலும்,உள்ளமும் தன்னை புதுப்பித்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் அவசியம்.பொதுவாக எட்டு மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.தொடர்ந்து சிலநாட்கள் சரியாக (எட்டு மணி நேரம் )தூக்கம் இல்லைஎன்றால் எரிச்சல்,சிடுசிடுப்பு,கவனக்குறைவு போன்று ஏற்பட்டு அன்றாட வாழ்வில் உறவுகளிலும்,பணியிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை மன நோய்களின் முக்கிய அறிகுறியாககொள்ளலாம்.
தூக்கமின்மை ஏன்?
அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்கள் கூட நல்ல உறக்கத்தை தடுக்கலாம்.புதியதொரு சூழ்நிலைக்கு தயாராகும்போது,உறவுகளில் ஏற்படும் தற்காலிக சிக்கல்கள் ,பயம்,கலக்கம்,கோபம் போன்ற எதிர் உணர்ச்சிகளுக்கு ஆட்படும்போது அன்றைய தூக்கம் பாதிக்கப்படலாம்.இவை தற்காலிகமானவை.சிலநாள்களில் தானாகவே சரியாகிவிடும்.ஆனால்,தொடர்ந்த தூக்கமின்மை மனம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்லது மூளையில்ஏற்பட்டுள்ள வேதி மாற்றம் காரணமாக இருக்கலாம்.இவர்களுக்கு மனநல மருத்துவத்தின் உதவி தேவை. தயங்காமல் நல்ல மருத்துவரை சந்திப்பது தீர்வுக்கு வழிவகுக்கும்.
இவை தூக்கத்திற்கு மட்டுமல்ல.....
 • அனைத்து சத்துக்களும் சரிவிகிதமாக கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.காய்கறிகளும்,பழங்களும்,கீரைகளும் அதிகமாக இருக்கட்டும்.
 • முட்டைகோஸ்,காலிபிளவர்,வெங்காயம்போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளையும்,அசைவ உணவுகளையும் தவிர்க்கவும்.
 • நிறைய தண்ணீர் குடியுங்கள்.இரவு உணவை எட்டு மணிக்குள்ளாக சாப்பிடுவது நல்லது.
 • போதுமான எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
 • யோகா,மூச்சுப்பயிற்சி போன்றவை நல்லது.
 • வீட்டில் உள்ளவர்களிடையே மனம் விட்டு பேசுங்கள்.
 • வீட்டில் பிரச்சினை என்றால் நண்பர்களிடம் மனம் திறந்து உறவாடுங்கள்.
 • மற்றவர்கள் சொல்வதை கவனமாக கேளுங்கள்.எனது "காது கொடுத்து கேளுங்கள் ,கடவுள் ஆகலாம்"படிக்கவும்.
 • படுக்கையறை சுத்தமாக இருக்கட்டும்.
 • மாலைநேரத்திற்கு பிறகு தேநீர்,காபி,கார்பன்டை ஆக்சைடு கலந்த குளிர்பானங்களை தவிர்க்கவும்.
 • நகைச்சுவை புத்தகம்,டி.வி.சேனல்கள் மனத்தை எளிதாக்கும்.
 • வெதுவெதுப்பான குளியல் நல்லது.
 • இரவில் ஒரு தம்ளர் பால் தூக்கத்திற்கு உதவும்.
 • நேர்மறை சிந்தனைகளை கொண்டிருங்கள்.ஏற்கெனவே நீங்கள் சந்தித்த பலபிரச்சினைகளிலும் நீங்கள் நினைத்த மாதிரியே நடக்கவில்லை.
தொடர்ந்து பிரச்சினை இருந்தால் மனநல ஆலோசகரையோ,மருத்துவரையோ தயக்கமின்றி அணுகவும்.
மனநல நாள் செய்தி!
எனக்கு தெரிந்த ஒரு நண்பர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.பொது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மனநல மருத்துவரை நாடினார்.நண்பர்களிடம் இது பற்றி பேசியபோது நகைச்சுவை என்ற பெயரில் கேலியும்,கிண்டலும் செய்ய ஆரம்பித்தார்கள்.நண்பர்களின் எதிவினைக்கு பின்னர் மாத்திரைகளை தூக்கி எறிந்துவிட்டார்.அடுத்த சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார்.உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போலவே மனதிற்கும் நேரலாம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமான உதவியும்,ஆறுதலும் தேவை.அவர்கள் உங்களின் கீழ்த்தரமான நகைச்சுவைக்கு உரியவர்களல்ல!வழிகாட்டி உதவுங்கள். -

Tuesday, October 5, 2010

ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும்

சார்,"எனக்குஉடல் பலவீனமாக இருக்கிறது"-என்ன செய்யலாம்?என்று கேட்டான் அவன்.அவனுக்கு திருமணம் ஆகவில்லை.வயது இருபத்தேழு .ஐம்பது கிலோ மூட்டையை தூக்க சொன்னபோது சாதாரணமாக தூக்கிவிட்டான்! உண்மையில் அவனுடைய பிரச்சினை என்ன? பிறகு பேசப்பேச தெரிந்தது இதுதான் -ஆண்மைக்குறைவு,நரம்புத்தளர்ச்சி,உடல் பலஹினம்,விரைவில் விந்து வெளியேறுதல்,கரப்பழக்கம் என்ற விளம்பரம் அவனிடம் ஏற்படுத்திய தாக்கம் அது.பரம்பரை விடுதி வைத்தியர்களின் புகழ்பெற்ற விளம்பரம் அவை.இவ்விளம்பரங்களில் காணப்படும் அறிகுறிகள் மிக பொதுவானவை.பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் காணும் பழக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.இவற்றை பணமாக்குவதுதான் பரம்பரை வைத்தியர்களுக்கு எளிதாக இருக்கிறது.
உண்மையில் ஆண்மைக்குறைவு என்பதுதான் என்ன?
உடலுறவில் பிறப்புறுப்பு விரைப்புத்தன்மை இல்லாமல் போவதும்,விரைவில் விந்து வெளியாவதும்தான் பொதுவாக ஆண்மைக்குறைவு எனப்படுகிறது.இவற்றில் பெரும்பாலானவை மனம் தொடர்புடைய சிக்கல்கள்.தவறான விளம்பரங்கள் மேலும் சிக்கலாக்குகின்றன.நீரிழிவு,மது,அதிகமாக புகை பிடித்தல்,உட்சுரப்பிகள் தொடர்பானவை உள்ளிட்ட வேறு காரணங்கள் இருந்தாலும் உள்ளம்தான் முதலிடம் வகிக்கிறது.மனநல மருத்துவரை நாடுவதே இதற்குதீர்வு .மனநல மருத்துவர் என்றவுடன் பைத்தியங்கள்தான் அங்கே போகவேண்டும் என்று கருதுவது விடுதி வைத்தியர்களுக்கு வசதியாகிவிடுகிறது. இவர்களுக்கு கொடுக்கும் விலை மிக அதிகம்.
நரம்புத்தளர்ச்சி பற்றிய நம்பிக்கைகள்
நரம்புமண்டலநோய்கள் தவிர்த்து பொதுவாக விளம்பரங்கள் குறிப்பிடும் நரம்புத்தளர்ச்சி மனம் தொடர்பான ஒரு குறைபாடு.ஆங்கிலத்தில் Anxiety disorder என்று குறிப்பிடப்படும் இக்குறைபாடு சமூகத்தை எதிர்கொள்வதில் காணப்படும் கலக்கத்தை குறிக்கிறது. தாழ்வு மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்களைப்போல் சாதாரணமாக பழக கூச்சப்படுவது போன்றவற்றால் சரியான தகவல்கள் இவர்களுக்கு எட்டாமல் போய்விடுகிறது. பரம்பரை வைத்தியர்களிடம் அடைக்கலமாவது தவிர்க்கமுடியாமல் பணத்தை இழந்தும்,பிரச்சினை சரியாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
சர்வரோக நிவாரணி -அஸ்வகந்தா
விடுதி வைத்தியர்கள்சர்வரோக நிவாரணியாக பயன்படுத்துவது அஸ்வகந்தா எனும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைதான் என்பது பல இந்திய முறை வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.இம்மூலிகை மன இறுக்கத்தை போக்கிவிடுகிறது என்றும் மனநலத்தை மேம்படச்செய்வதால் ஓரளவு உள்ளம் சார்ந்த ஆண்மைக்குறைவும்,நரம்புத்தளர்ச்சியும் சரியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.இதற்காக பல்லாயிரக்கணக்கில் பணத்தை இழக்கத்தேவையில்லை.நல்ல இந்திய முறை மருத்துவர்களை நாடலாம்.எனினும் இப்பிரச்சனைகள் உள்ளம் சார்ந்ததா,உடல் சார்ந்ததா என்பதிலும் தெளிவு வேண்டும்.

-

Saturday, October 2, 2010

அன்னையன்றி வேறு யார் ?

மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.
அன்னையை போற்றுவோம் என்ற தலைப்பில் நான் சந்தித்த,பாதித்த பெண்களைப்பற்றிய குறிப்புகளை பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.அந்த பெண்கள் எளிமையான பெரும்பாலான பெண்களை பிரதிபலிக்கிறார்கள்.
நாம் சிந்திப்போம் தோழர்களே .....
சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?
அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறுமையில்,மதுவின் போதையில்,பாலியல் தொழிலில்,மனக்கோளாறுநிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?
பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும் ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?
கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம் சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?
-