Showing posts with label Mental health. Show all posts
Showing posts with label Mental health. Show all posts

Friday, October 14, 2011

நம்பிக்கை நோய்களைக் குணமாக்குமா?

அறிவியல் வளராத காலகட்ட்த்தில் மக்கள் நோய்களைத் தீர்த்துக்கொண்ட விதம் தெரிந்த விஷயம்.உணவு,தானியங்கள்,பழங்கள்,தாவரங்கள் வழி அவர்கள் தீர்வை அடைந்தார்கள்.பேய் ஓட்டுவது என்பதை நடைமுறையில் வைத்திருந்தார்கள்.மனநோய்களை பேய்,பிசாசு என்று நம்பி கடவுளை துணைக்கு அழைத்தார்கள்.
                                                                      அப்படி பேய் ஓட்டுவதன் மூலமாகவும் பிரச்சினைகள் தீர்ந்திருக்கிறதே? ஆமாம்,நம்பிக்கை தான் காரணம்.ஒரு விஷயத்தை உறுதியாக நம்பினால் அதற்கேற்ப மனமும் செயல்படுகிறது.பாதிக்கப்பட்டவர் மனதில் நம்பிக்கை ஏற்பட்டால் இத்தகைய விளைவுகள் சாத்தியம்தான்.

                                 கிராமத்தில் காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவால் இயல்பாக இருப்பவர்களும் படுத்துவிடுவார்கள்.நாள் முழுக்க உழைத்துக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.நோய் ஏற்பட்டால் ஏதும் புரியாது திணறுவார்கள்.பயத்திலும் கலக்கத்திலும் எரிச்சலான மன நிலைக்கு போய்விடுவார்கள்.
                                                                    வீட்டில் இருப்பவர்கள் குறி கேட்க போவார்கள்.எங்கோ பயந்திருக்கிறார்.ஆடு வெட்ட வேண்டும்,கோழி வெட்ட வேண்டும் என்று சாமி சொல்லும்.எனக்கு ஒரு ஆச்சர்யம்.அதிக நாட்கள் உடல் நலமில்லாமல் இருப்பவர்களுக்கு குறி கேட்கப் போனால் பயந்திருப்பதாக சொல்வதையே அதிகம் கேட்டிருக்கிறேன்.

                                 ஒரு குறிப்பிட்ட புளியமரத்தை அடையாளம் கண்டு வைத்திருப்பார்கள்.அங்கே போய் பூசை செய்து ஆடோ,கோழியோ வெட்டுவார்கள்.சிலருக்கு வசதி இருக்காது.நாலுகால் பிராணி பலி கொடுக்கவேண்டும் என்று சாமி சொல்லிவிடும்.ஆடு வாங்குவது கஷ்டம்.
                                                                       இரண்டு கோழிகளை வெட்டி பலி கொடுத்து விடுவார்கள்.நாலுகால் ஆகிவிட்ட்து! அநேகமாக அடுத்த நாளே படுக்கையில் இருப்பவர் சம நிலைக்கு வந்து வேலைக்குப் போக ஆரம்பித்து விடுவார்.நோய்வாய்ப்பட்டவரின் நம்பிக்கைதான் காரணமே தவிர பேய் அல்ல!

                                மருத்துவமனைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை.யாராவது அட்மிட் ஆகிவிட்டால் உறவினர்கள் படையெடுப்பார்கள்.அரசு மருத்துவமனைகளில் நேரம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கிறார்கள்.கிராமத்தை சார்ந்தவர்கள் என்றால் பார்வையாளர்கள் அதிகம் இருக்கும்.நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.
                                                                    இது வேண்டாத வேலை என்றுதான் பலர் கருதுகிறார்கள்.நம்முடைய முக்கிய கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று.பகையாக இருந்த உறவினர்கள்கூட ஒன்று சேர்வதும் உண்டு.ஆனால் நோயாளியை பொருத்தவரை குணமடைவதற்கு இது உதவும் என்பதே நிஜம்.
                                உடல்,மனம் இரண்டிலும் ஏற்படும் பிரச்சினைகள் ஒன்றையொன்று பாதிக்கவே செய்யும்.மோசமான மனநிலையையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அன்பினால் மட்டுமே முடியும்.உறவினர்கள் வருகை நோயாளியிட்த்தில் நம்மை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.மனதிற்கு மிகப்பெரிய தெம்பு இது.விரைவாக குணமடைய உதவும் ஒரு விஷயம்தான்.
-

Friday, August 19, 2011

ஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா? இல்லையா?

  நகைச்சுவை  ஒன்றை படித்தால் சிரிப்பு வரத்தானே வேண்டும்.ஆமாம் ,அது மனிதனுக்கு கிடைத்த முக்கியமான விஷயம்.அது சுமாராக இருந்தால் கூட! அவ்வளவாக ரசிக்க முடியாமல் போனால் யோசிக்க வேண்டும்.கீழே உள்ளதையும் படியுங்கள்.

  ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

  மாணவி:கரண்ட் இல்ல !

  ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?

   மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!

   ஆசிரியர் :ஏன்?

  மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!

  ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?

  மாணவி: லூசா நீங்க? அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


                                                          இப்படி சாதரணமாக இருந்தாலே ஓஹோவென ரசிப்பவர்கள் உண்டு.வெடி ஜோக் சொன்னாலும் சிரிப்பு வரவில்லையா? நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.சிலர் ஏதேனும் கவலையாக இருந்தாலும் உற்சாகமில்லாமல் இருப்பார்கள்.மனச்சோர்வு என்பது சாதாரண கவலையிலிருந்து அதன் கால அளவுகளில் வேறுபடுகிறது.பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.

                                                           மனதில் ஏற்படும் சோர்வு என்பது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியது.உறவுகளை பேணுவதில்,சிந்திப்பதில் செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.தூங்குவதிலும் பாதிப்பு இருக்கும்.காலம் காயங்களை ஆற்றும் என்பார்கள்.நமக்கு ஏற்படும் எந்த துயரமும் காலம் செல்ல செல்ல குறைந்து விடும்.சிலரால் மீண்டு வரமுடியாமல் போய்விடுகிறது.


                                                          இன்றைய நவீன வாழ்க்கையில் எதைஎதையோ யோசித்து குழப்பிக்கொள்கிறோம்.அழுத்தங்கள் அதிகமாகிவிட்டது.பரம்பரை முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் சூழ்நிலைகள்,மருத்துவ காரணங்கள்,வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன.நாம் சிந்திக்கும் முறையும் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.

                                                          அதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது கூடி வருகிறது .இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாண்டிச்சேரியில் சுற்றித்திரிந்தது பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்.


                                                              கௌரவம்,மதிப்பு ,நல்ல வருமானம் இத்தனை இருந்தும் ஏன் பாதிக்கப்படவேண்டும்? மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்.சுற்றி உள்ள நண்பர்கள்,உறவினர்கள் யாராவது ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் ,அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கவும் முடியும்.

                                                               மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனச்சோர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது மன அழுத்தம்.


                                                                எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது,சுகாதாரத்தில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது,மிதமிஞ்சிய மதுப்பழக்கம்,சரியாக சாப்பிடாமல் இருப்பது,அல்லது அதிகம் உண்பது,தூக்கமின்மை கோளாறுகள் இருந்தால்,கவனிப்பவர்கள் உதவுவது அவசியம்.

                                                                 மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.மன அழுத்தம் மிதமாக இருந்தால் ஆலோசனைகள் மூலமாகவே தீர்வு காண முடியும்.அதிகமாக இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும்.கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.
-

Wednesday, June 22, 2011

மற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா?

                                 பாலிடெக்னிக் ஒன்றில் விழாவுக்கு போயிருந்தேன்.பார்வையாளராகத்தான்.நண்பர் அக்கல்லூரியின் முதல்வர் என்பதால் அழைத்திருந்தார்.ஒரு பெரிய மனிதர் பேசிக்கொண்டிருந்தார்.”எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க்க்கூடாது! பெண்கள் தான் அப்படி இருப்பார்கள்.’’மாணவர்களுக்கு அறிவுரைகள் தந்தவாறு இருந்தார்.

                                  பெண்கள்தான் மற்றவரை குற்றம் சாட்டுவார்களா? ஆண்கள் குற்றம் சாட்டமாட்டார்களா? தனது தவறுகளுக்கும்,தோல்விக்கும் தன்னை விடுத்து இன்னொருவர் மீது பழி போடுவது மனிதர்களுக்கு பழக்கமான விஷயம்தான்.தான் மிகச்சிறந்தவன்,அதி புத்திசாலி ,எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை! அடுத்தவர்கள்தான் காரணம் என்பவர்களை பார்த்திருக்கிறோம்.



                                  ஒரு பெண் தீவிரமாக காதலித்து வந்தார்.பையன் வெளியூரில் இருந்தான்.அடிக்கடி ஏதோ ஒரு பிளாக்மெயில்.இந்த மாத்த்துக்குள் கல்யாணம் செய்யாவிட்டால் எனக்கு வேறொருவருடன் நிச்சயமாகிவிடும் என்பார்.தோழி ஒருவரை விட்டு அவளுக்கு உன்னை பிடிக்கவில்லையாம் மறந்து விடுங்கள் என்றிருக்கிறார்.அப்புறம் அந்த காதல் தோல்வியடைந்து விட்ட்து.அப்பெண் தோழியை பார்த்து சொன்னது “எல்லாம் உன்னால்தான்!”

                              இருத்தைந்து வயது பையனுக்கும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கும் கள்ளக்காதல்.பெண்ணின் மகனுக்கு விஷயம் தெரியவே வீட்டில் சண்டை.கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவமனைக்கு சென்று காதலன் பார்த்தவுடன் அப்பெண் சொன்னது” எல்லாம் உன்னால்தான்”

                             கல்யாணமான பின்னர் கணவன் புதியதாக தொழில் தொடங்கினார்.கொஞ்சமாக குடிக்கும் பழக்கம்.ஒவ்வொரு ஆர்டருக்கும் நண்பர்களுக்கு பார்ட்டி.சந்தோஷத்தை கொண்டாட வேண்டுமில்லையா? சில மாதங்களிலேயே தொழில் படுத்துவிட்ட்து.கணவன் மனைவியை பார்த்து சொன்னது”எல்லாம் உன்னால்தான்!”

                              ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.தோல்வியோ தவறோ நிகழ்ந்து விட்டால் மனம் தப்பித்துக்கொள்கிறது.என்னால் இல்லை.அடுத்தவர்தான் காரணம் என்று.முதலில் காதலில் தோற்ற பெண்ணின் மோசமான அணுகுமுறையே தோல்விக்கு காரணம்.அவர் சொல்லித்தான் தோழி போன் செய்தார்.

                              இரண்டாவதான கள்ளக்காதலில் பையனை குறை சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை.அப்பெண்ணுக்கு திருமணமான மகன் இருக்கிறான்.கணவனின் தொழில் நஷ்டமடைய காரணம் திறமையின்மையும்,முறையற்ற பழக்கங்களும்தான்.இன்னும் சிலர் நீ வந்த நேரம்தான் இப்படி ஆகிவிட்ட்து என்பார்கள்.இதைப்போல மனித்த் தன்மையற்ற செயல் வேறில்லை.

                               ஒழுக்கம் சாராத ஆளுமை(personality) கொண்டவர்கள் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வது அதிகம்.குடிக்கு அடிமையானவனை கேட்டுப்பாருங்கள்.தவறு செய்பவனை கேட்டுப்பாருங்கள்.எதையாவது,யாரையாவது குறை சொல்வார்கள்.இப்படிப்பட்டவர்கள் முன்னேறுவது கஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

                                  இன்னொருவரை குற்றம் சாட்டுவது ஒரு தோல்விக்குள்ள நிஜமான காரணத்தை கண்டறியும் முயற்சியில் தடை உண்டாக்கும்.நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியாது.

                                  முதல் பத்திக்கு வருவோம்.அந்த பெரிய மனிதர் ஏன் அப்படி சொன்னார்? அவர் காலத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிகம் வெளி விவகாரங்களீல் ஈடுபடுவதில்லை.இப்போதும் குறைவுதான்.சம்பாதிப்பது,முடிவெடுப்பது எல்லாமும் ஆணிடம் இருந்தன.அவர்கள் ஆண்களை குற்றம் சொல்லாமல் யாரை சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில் இருந்து பேசியிருக்கவேண்டும்.உண்மையில் இது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஒன்றுதான்.
-

Thursday, May 26, 2011

உங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா? தெரிந்து கொள்வது எப்படி?

உள்ளம்.கிட்ட்த்தட்ட உங்கள் வாழ்க்கை அதுதான்.மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே வாழ்வும் இனிதாக இருக்கும்.இது பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.பலருக்கும் உள்ளம் பிரச்சினையாக இருப்பது வெளியில் தெரிவதில்லை.மனம் என்றவுடன் அதன் சீர்கேடு மன நோய்தான் என்று  நினைப்பது தவறு.

                                ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.தான் வளர்ந்து வந்த சூழல்,பழகிய உறவுகள்,கற்றுக்கொண்ட விஷயத்துக்கேற்ப எண்ணங்கள் உருவாகின்றன.வெற்றியையும்,தோல்வியையும் தீர்மானித்து உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்வது இவைதான்.


                                                                      சிலர் எப்போதும் எதைப்பற்றியாவது புலம்பிக்கொண்டிருப்பார்கள்.இவர்கள் மனம் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள் அல்ல.ஒருவர் தன்னைப்பற்றி நல்லவிதமாக உணர்ந்தால் அவர் மனம் நலமாக இருப்பதாக கொள்ளலாம்.நன்றாக சிந்தித்து வெற்றிகரமான செயல்களை செய்யக்கூடியவராகவும் இருப்பார்.புலம்புபவர் பைத்தியம் என்று அர்த்தமல்ல!அவருக்கு ஆலோசனை தேவை.

                               தன்னை சார்ந்த அனைவருடனும் நல்ல உறவுகளை பேணுவது நலமான மனதிற்கு இன்னொரு அடையாளம்.இனிய உறவுகளில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.பொறாமை,கோபம் போன்ற உணர்ச்சிகளை கையாளத்தெரியாதவர்கள் உறவுகளை இழந்து விடுகிறார்கள்.

                                 ஆரோக்கியமான மனதுள்ள ஒருவர் மாற்றங்களுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்கிறார்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க! என்பது இதுதான்.ஆனால் புரிந்து கொண்டு மாற்றிக்கொள்ளவேண்டும்.வேறு வழியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டால் அது மனதில் தங்கி பிரச்சினையை ஏற்படுத்தும்.

                                 வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள்,கஷ்டங்கள் இயல்பானவை.தவிர்க்க முடியாதவை.இழப்புகள்,தோல்விகள் அனைவருக்கும் பொதுவானது.நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை.ஆனால் நலமான உள்ளத்தை பெற்றிருக்கும் ஒருவர் அதை வெற்றிகரமாக சமாளிக்கிறார்.முடியாதவர் மனச்சோர்வுக்கு ஆளாகி,தூக்கமிழந்து துன்பங்களில் வீழ்கிறார்.

                                  தன்னம்பிக்கையுடன் ஒருவர் தன்னைப்பற்றி நல்ல விதமாக நினைத்தால் அவர் நல்ல மன நலம் பெற்றவர் என்று சொல்ல்லாம்.தன்னம்பிக்கை உள்ளவர் எல்லவற்றிலும் வெற்றியடைகிறார்.தோல்விகளும்,கடந்தகால கசப்பான அனுபவங்களுமே ஒருவரது தன்னம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விடுவதுண்டு.ஆரோக்கியமான உள்ளம் படைத்தவர் மாட்டிக்கொள்வதில்லை.

                                  ஒருவருடைய கஷ்டங்களில்தான் அவரது உண்மையான மன நலத்தை அறிய முடியும்.அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொருத்து அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பது,படுத்தவுடன் தூங்கிவிடுவது போன்றவை மனம் ஆரோக்கியமாக இருப்பதன் அடையாளம்.மற்றவர்களுக்கு ஆலோசனையோ,சிகிச்சையோ தேவைப்படும்.
-

Monday, February 28, 2011

கன்னிப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வாலிப பேய்.




                               வயசுப் பெண் என்றால் தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.திருத்தமாக உடை உடுத்தி,யாராவது பார்த்தால் மனைவியாகவோ,மருமகளாகவோ கொள்ள மனம் வரவேண்டும்.அந்த பெண் அப்படியில்லை.சமீப காலமாக சரியாக சாப்பிடுவதில்லை.தூங்குவதில்லை.எந்த வேலை சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை.

                              அப் பெண்ணின் தாய்க்கு பாட்டி யோசனை கூறினாள்.’’போய் அந்த சாமியிடம் குறி கேட்டுவிட்டு வா”.அம்மா குறி கேட்டு விட்டு வந்து சொன்னது:’’அவளுக்கு பேய் பிடித்திருக்கிறதாம்” இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தார்கள்.பேய் ஓட்டுபவனை அழைத்து வர வேண்டும்.அண்ணனுக்கு தெரியும்.

                              அண்ணன் காலையிலேயே பேய் ஓட்டுபவனை காண கிளம்பிச் சென்றார்.திரும்பி வந்து,”பேய் ஓட்ட பவுர்ணமிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.இதுல இருக்கிற பொருளெல்லாம் தயார் செய்ய வேண்டும்.எலுமிச்சம்பழம்,விபூதி,குங்கும்ம்,வேம்பு இலை,ஆணி,சாட்டை,போன்ற பொருட்கள் முக்கியமாக அதில் இருந்த்து.

                               இதெல்லாம் என் வீட்டிலிருந்து பத்தடி தூரம் உள்ள ஒரு வீட்டில் நடந்தவை.எங்கள் வீட்டிலும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பேய் ஓட்டுவதை பார்க்கவேண்டுமென்று ஆசை.அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அம்மாவிடம் அனுமதி கேட்டேன்.உடனே மறுக்கப்பட்டுவிட்ட்து.

                              பவுர்ணமி வந்து விட்ட்து.காலையிலிருந்து எனக்கு பரபரப்பு.எப்படியாவது அதை பார்க்கவேண்டும்.அப்பாவிடம் போய் கேட்டேன்.”அது இரவு பத்து மணிக்கு மேல்தான்!அவ்வளவு நேரத்துக்கு நீ அங்கெல்லாம் போக முடியாது”.என் முகம் போன போக்கை அம்மா கவனித்து விட்டாள்.இன்னொரு அண்ணனை பாதுகாப்புக்கு துணை சேர்த்து அனுமதி கிடைத்து விட்ட்து.

                             இரவு பத்து மணிக்கு மேல் முழு நிலவு இரவென்ற எண்ணத்தை தராமல் போய்க் கொண்டிருந்த்து.சாமியாருடன் சேர்த்து ஏழெட்டு பேர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.”நீ எதுக்கு வர?” என்றார்கள் யாரோ என்னைப் பார்த்து!குடியிருப்பிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல்போய் விட்டோம்.

                              கல்லுக்கு நீர் தெளித்து சாமியாக்கி பூசைகள் ஆரம்பமானது.பேய் ஓட்ட வந்திருந்தவர் பாட்டொன்றை பாட ஆரம்பித்தார்.அந்த அக்கா தலையை வேகமாக ஆட்டி ஆட ஆரம்பித்த்து.”யார் நீ? சொல்? என்று உறுமினார் வேப்ப இலையை தலை மீது அடித்தார்.வேம்பு சக்தி.கடவுள்.பேய் அலறி ஏதோ ஒரு பெயரை கூறியது.

                              ”நான் நினைத்தேன்’ என்றார் ஒருவர்.”கல்யாணமாகாமல் தூக்கு போட்டுக் கொண்டு செத்துப் போனானே அவன் தான்”.கடவுளின் அருள் தாங்காமல் பேய்,”நான் போய் விடுகிறேன் என்று ஒப்புக் கொண்ட்து.எழுந்து ஓடு என்று சாமி உறும அந்த அக்கா எழுந்து ஓட ஆரம்பித்த்து.

                                  இருவர் இரு புறமும் பிடித்துக் கொண்டு ஓட,என்னால் முடியவில்லை.துணைக்கு வந்தவரின் பெயரை சத்தமாக்க் கூறிக்கொண்டே நானும் ஓடிக் கொண்டிருந்தேன்.முடிந்த பிறகுதான் போய் சேர்ந்தேன்.புளிய மரமொன்றில் அக்காவின் தலை முடி கொஞ்சம் இருக்குமாறு ஆணி அடித்திருந்தார்கள். முடிகள் தொங்கிக் கொண்டிருந்த்து.

                                 புளிய மரம் பேய் குடியிருக்குமிடம் என்பது கிராமப்புற நம்பிக்கை.புளிய மரத்தின் கீழே உறங்க்க் கூடாது.அக்கா அமைதியாக காணப்பட்டார்.அவரது தந்தை கனிவுடன் விசாரித்தார்.”இப்போ நல்லா இருக்காம்மா? பேயை புளிய மரத்தில் விட்டு விட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.பேய் பிடித்தல் மன நல பாதிப்புதான் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்.


-

Saturday, January 1, 2011

நெருப்பில்லாமல் புகையும் குடும்பங்கள்


நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்.ஆதாரமின்றி ஒருவரை பற்றிய செய்தி வெளி வராது என்பது இதன் பொருள்.ஆனால், நடைமுறையில் நெருப்பில்லாமலும் புகைந்து,ஏன் எரிந்து சாம்பலாகிவிடுவதைக் கூட பார்க்கிறோம்.எல்லா குழப்பங்களுக்கும் மனமே முழுமுதற் காரணம்.தவறான எண்ணங்கள்,குழப்பங்கள்,கற்பனைகள் தனி மனிதனையும்,குடும்பங்களையும் பொசுக்கி விடுகிறது.கணவன் மனைவி பிரச்சினை ஒன்றை கவனியுங்கள்.

கணவர் தனியார் நிறுவனமொன்றில் நிரந்தர வேலை.மிக சாதாரண குடும்பம்.சொந்தவீடு இல்லை.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு பெண் குழந்தை.தொடர்ந்து கணவன் மனைவிக்குள் புகைச்சல்கள்.பிறகு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் தினமும் காட்டமான வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.

கணவர் தனது நண்பர் ஒருவரை உதவிக்கு நாடினார்.அவர், பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு நேரில் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.கணவனின் நண்பன் மீது அந்த பெண்ணுக்கு ஓரளவு மரியாதை இருக்கவே,தனது தாயுடன் நேரில் சந்தித்தார்.பிரச்சினை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.

பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு துணி எடுத்தால்,சினிமாவுக்கு போனால் தானும் அதை உடனே செய்தாகவேண்டும் என்பது.சேமிப்பாக கணவர் சீட்டு கட்ட ஆரம்பிக்க,மனைவியோ பெரும் தொகைக்கு நகை சீட்டு கட்ட வேண்டும் என்கிறார்.இறுதியாக,நான் எது சொன்னாலும் இவர் கேட்பதில்லை.அதனால் அவருக்கு என்மீது அன்போ பாசமோ கிடையாது.

மனைவியின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.அலுவலக பணிபோதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை.நம்முடைய மிகப்பெரிய பிரச்சினை இதுதான்.நாம் சொல்கிறபடி நடந்தால்,பேசுவதற்கெல்லாம் தலையாட்டினால் மட்டுமே ஒருவரை நம்புகிறோம்.அவர்தான் நம்மை நேசிப்பதாக நினைக்கிறோம்.மனம் புகைந்து எரிய ஆரம்பிக்கிறது.குடும்பங்களும் உறவுகளும் கருகிப்போய் விடுகின்றன. -

Saturday, October 23, 2010

உங்களை உலுக்கும் பிரச்சினைகள் குறித்து .......

வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன.நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?மர
மரபு சார்ந்த வழிகளில் .................
நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை.
  • கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம்
  • மத குருமார்களை சந்திக்கிறோம்:நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம்.
  • ஜோதிடர்களை சந்திக்கிறோம்:எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை கேட்கிறோம்.சிலர் வெளிப்படையாக பேசுகிறார்கள்.குரு மாறினால் ,சனிப்பெயர்ச்சி அடுத்து அல்லது திசை மாறியவுடன் உங்கள் தொல்லைகள் தீரும் என்கிறார். நம்பிக்கையுடன் திரும்புகிறீர்கள்.
  • நல்ல நண்பர்கள் ,உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்.
  • டாஸ்மாக்கை தேடிப்போகிறோம்.
  • எதுவும் செய்யாமல் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சிக்கலாக்குகிறோம்.
தற்கொலையை தேர்ந்தெடுப்பது,மற்றவர்களை துன்புறுத்துவது என்ற அளவில் ஆளுமைகளுக்கு தகுந்தவாறு பிரச்சினைகளை அணுகி வந்திருக்கிறோம்.
நவீன வழிமுறைகள் என்ன?
சமீபத்தில் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை திரையரங்கத்தில் பார்த்தேன்.உங்கள் பிரச்சினைகளுக்கு குறுந்தகவல் மூலம் தீர்வு தரப்படும் என்று தெரிவித்தது.அந்நிறுவன சந்தாதாரர் ராகுலை எல்லோரும் தேடுகிறார்கள்,விரும்புகிறார்கள்.SMS COUNSELLING சிலருக்கு தீர்வை தரலாம்.பொதுவாக counselling எனப்படுவது நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது.சில இடங்களில் மன நல ஆலோசனை.உளவியலில் பயிற்சி பெற்ற ஒருவரிடம் நிகழ்வுகளையும்,உங்கள் உணர்வுகளையும் தெரிவித்தால் அவர் பிரச்சினை தீர்க்க வாய்ப்புகளை வழங்குவார்.நீங்கள் சரியான முடிவை தேர்ந்தெடுக்கலாம்.யாரிடமும் சொல்ல முடியாத தனிநபர் பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வு.அயல் நாடுகளில் பிரபலமடைந்த போதிலும் நம்மிடையே இன்னும் போதுமான வாய்ப்புகள் இல்லை.உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் பயன்படுத்தலாம்.இல்லையெனில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
சுயமாகவே தீர்வை அணுகும் முயற்சி .......
அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.புதிய தகவல்களை கொண்டு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை எழுதவும்.தீர்வுக்குள்ள சாதகமான,பாதகமான விசயங்களையும் எழுதுங்கள்.அதிக நன்மையுள்ள தீர்வை தேர்ந்தெடுக்கவும்.வழக்கமாக,பிரச்சினைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மை சிந்திக்கவிடாது.இன்னொருவருடன்(ஆலோசகர்,நண்பர்,உறவினர்,குருமார்கள்)
பேசி தீர்ப்பதே சிறந்தது என்றபோதிலும் முயற்சி செய்யுங்கள்.உரிய தீர்வுகளை கண்டடைந்தால் நாளை வாழ்வு நலமாகும். -

Sunday, October 10, 2010

நல்ல தூக்கம் இல்லையா?

இன்றுஅக்டோபர் 10 உலக மனநல நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.தூக்கமின்மை குறித்து ஒருவர் ஈமெயில் அனுப்பி கேட்டிருந்தார்.சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் போரிலோ,சதியாலோ தாக்கப்பட்டபின் மறைவிடத்தில் தாக்கப்பட்டவரை பார்க்கச்செல்வார்கள்.அவர் தூங்கிக்கொண்டிருப்பார்."நன்றாக தூங்குகிறார் அவருக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை".ஆம்.நல்ல தூக்கம் ஒருவருக்கு உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருப்பதை குறிக்கிறது.உடலும்,உள்ளமும் தன்னை புதுப்பித்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் அவசியம்.பொதுவாக எட்டு மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.தொடர்ந்து சிலநாட்கள் சரியாக (எட்டு மணி நேரம் )தூக்கம் இல்லைஎன்றால் எரிச்சல்,சிடுசிடுப்பு,கவனக்குறைவு போன்று ஏற்பட்டு அன்றாட வாழ்வில் உறவுகளிலும்,பணியிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை மன நோய்களின் முக்கிய அறிகுறியாககொள்ளலாம்.
தூக்கமின்மை ஏன்?
அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்கள் கூட நல்ல உறக்கத்தை தடுக்கலாம்.புதியதொரு சூழ்நிலைக்கு தயாராகும்போது,உறவுகளில் ஏற்படும் தற்காலிக சிக்கல்கள் ,பயம்,கலக்கம்,கோபம் போன்ற எதிர் உணர்ச்சிகளுக்கு ஆட்படும்போது அன்றைய தூக்கம் பாதிக்கப்படலாம்.இவை தற்காலிகமானவை.சிலநாள்களில் தானாகவே சரியாகிவிடும்.ஆனால்,தொடர்ந்த தூக்கமின்மை மனம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்லது மூளையில்ஏற்பட்டுள்ள வேதி மாற்றம் காரணமாக இருக்கலாம்.இவர்களுக்கு மனநல மருத்துவத்தின் உதவி தேவை. தயங்காமல் நல்ல மருத்துவரை சந்திப்பது தீர்வுக்கு வழிவகுக்கும்.
இவை தூக்கத்திற்கு மட்டுமல்ல.....
  • அனைத்து சத்துக்களும் சரிவிகிதமாக கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.காய்கறிகளும்,பழங்களும்,கீரைகளும் அதிகமாக இருக்கட்டும்.
  • முட்டைகோஸ்,காலிபிளவர்,வெங்காயம்போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளையும்,அசைவ உணவுகளையும் தவிர்க்கவும்.
  • நிறைய தண்ணீர் குடியுங்கள்.இரவு உணவை எட்டு மணிக்குள்ளாக சாப்பிடுவது நல்லது.
  • போதுமான எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
  • யோகா,மூச்சுப்பயிற்சி போன்றவை நல்லது.
  • வீட்டில் உள்ளவர்களிடையே மனம் விட்டு பேசுங்கள்.
  • வீட்டில் பிரச்சினை என்றால் நண்பர்களிடம் மனம் திறந்து உறவாடுங்கள்.
  • மற்றவர்கள் சொல்வதை கவனமாக கேளுங்கள்.எனது "காது கொடுத்து கேளுங்கள் ,கடவுள் ஆகலாம்"படிக்கவும்.
  • படுக்கையறை சுத்தமாக இருக்கட்டும்.
  • மாலைநேரத்திற்கு பிறகு தேநீர்,காபி,கார்பன்டை ஆக்சைடு கலந்த குளிர்பானங்களை தவிர்க்கவும்.
  • நகைச்சுவை புத்தகம்,டி.வி.சேனல்கள் மனத்தை எளிதாக்கும்.
  • வெதுவெதுப்பான குளியல் நல்லது.
  • இரவில் ஒரு தம்ளர் பால் தூக்கத்திற்கு உதவும்.
  • நேர்மறை சிந்தனைகளை கொண்டிருங்கள்.ஏற்கெனவே நீங்கள் சந்தித்த பலபிரச்சினைகளிலும் நீங்கள் நினைத்த மாதிரியே நடக்கவில்லை.
தொடர்ந்து பிரச்சினை இருந்தால் மனநல ஆலோசகரையோ,மருத்துவரையோ தயக்கமின்றி அணுகவும்.
மனநல நாள் செய்தி!
எனக்கு தெரிந்த ஒரு நண்பர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.பொது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மனநல மருத்துவரை நாடினார்.நண்பர்களிடம் இது பற்றி பேசியபோது நகைச்சுவை என்ற பெயரில் கேலியும்,கிண்டலும் செய்ய ஆரம்பித்தார்கள்.நண்பர்களின் எதிவினைக்கு பின்னர் மாத்திரைகளை தூக்கி எறிந்துவிட்டார்.அடுத்த சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார்.உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போலவே மனதிற்கும் நேரலாம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமான உதவியும்,ஆறுதலும் தேவை.அவர்கள் உங்களின் கீழ்த்தரமான நகைச்சுவைக்கு உரியவர்களல்ல!வழிகாட்டி உதவுங்கள். -

Friday, September 10, 2010

பிச்சைக்காரர்கள் உழைக்கத்தயார்

கோவை மாநகராட்சியில் மன நல ஆலோசனையின் விளைவாக பிச்சைக்காரர்கள் சுமார் ஐம்பது பேர் சுய தொழில் தொடங்க முன்வந்தார்கள்-தினமலர் செய்தி. .உரிய ஆலோசனையின் விளைவாக இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளது. இதன் சாதகபாதகங்களை பார்க்கும் முன்பாக மன நல ஆலோசனை பற்றி சில தகல்வல்கள் . மனிதர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுவது தான் மன நல ஆலோசனையின் நோக்கம் .பயிற்சி பெற்ற ஒருவர் தனி மனிதனுக்கோ குழுக்களுக்கோ ஆலோசனை வழங்கலாம் .நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது. இதே செய்தியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறும்போது ,''யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவத்தில் ஒருவர் கூட இல்லை என்கிறார் ''.மிகச்சரி .ஒருவருக்கு அறிவுரை கூறும்போது நீங்கள் மேலானவர்களாகவும் பெறுபவர்கள் கீழேயும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
மனிதன் எது இல்லையென்றாலும் ஒப்புக்கொள்வான்,உனக்கு அறிவில்லைஎன்றால் வரக்கூடிய கோபத்தை கற்பனை செய்து பாருங்கள் .உண்மையாகவே அறிவில்லாமல் போவதை நீங்கள் காண முடியும் . உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கும்போது இயற்கையாக உள்ள சிந்திக்கும் திறனை இழந்து அறிவிலியாவது தவிர்க்க முடியாது போய்
விடுகிறது. அப்போது மனநலம் பயிற்சி பெற்ற ஒருவர் உதவ முடியும் .தனி மனிதன் ஒருவரை மோசமான வகையில் பாதிக்கச்செய்யும் அச்சம் ,கலக்கம் போன்ற உணர்ச்சிகள் பெருமளவு சிதைக்கும்போது மனநல ஆலோசனை உதவும் . வளர்ந்த நாடுகளில் இத்தகைய ஆலோசனை பிரபலம். சக மனிதனை மனிதனாக பார்ப்பதென்பதுமுக்கியமானது.பிச்சைக்காரர்கள் உழைப்பாளி,முதலாளி என பரிணாமம் பெறுவது தொடர் ஆலோசனை மூலம் சாத்தியமாகலாம்.
-