பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாதாம்.பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆணைப்போல பெண்ணும் ஒரு உயிர்.பிறகு ஏன் அதிகமான ஆண்களும் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள்? திறமை குறைவாக இருப்பதாக கருதலாமா? அதே சமயம் பெண் எளிதில் ஆணை புரிந்து கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.அதுவும் உணமைதான்.அதிக வெளிவிவகாரங்களில் ஈடுபடாத அதிகம் படிக்காத பெண்ணும் கூட ஆணை “ உன்னைப்பற்றி எனக்கு தெரியாதா?” என்று சாதாரணமாக சொல்லி விடுகிறார்.உலகில் உள்ள அத்தனை ஆண் பெண்ணுக்கும் இது பொருந்துமா? என்று யாரும் விவாதம் செய்ய வரவேண்டாம்.என்னால் பெண்ணை புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
குறிப்பிட்ட ஒன்றை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்ன பொருள்? நாம் சரியாக கவனிக்கவில்லை.அதன் இயல்புகளை புரிந்துகொள்ள வில்லை.நாம் சிந்திக்கவில்லை.சுருக்கமாக சொன்னால் நாம் தவறாக அணுகியிருக்கிறோம்.பெண்ணைப் புரிந்துகொள்ள முடியாத நிலையும் இப்படித்தான்.அவரைப் பற்றி தவறான பார்வை நமக்கு இருக்கிறது.ஆமாம்.பெண்ணை உடலாக மட்டும் பார்க்கிறோம்.நமக்கு சந்தோஷம் அளிக்க படைக்கப்பட்ட பொருளாக,ஒரு இயந்திரமாக நாம் பெண்ணை பார்க்கிறோம்.நம்மைப்போலவே படைக்கப்பட்ட உயிரை சக மனித உயிராக கருதுவதேயில்லை.ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.ஆணைப்போலவே பெண்ணும் சம தகுதிநிலையுடன் இருக்கிறார்.கோணல் பார்வைதான் பிரச்சினை.
பெண்ணை உடலாக மட்டும் கருதும் கோணல் பார்வை காலந்தோறும் இருந்துவருகிறது.சினிமா,விளம்பரம் எல்லாம் பெண் என்றால் உடல்தான் என்று உறுதியாக நம்புகிறது.சமூகத்திற்கு பரப்புகிறது.இங்கே உடல் பாகங்களை படம் பிடித்துக்காட்டுவதே ஆகச் சிறந்த கலை.செக்ஸ்பாம்,செக்ஸ்குயின் என்கிறார்கள்.ஆணுக்கு அப்படி பெயரிடுவதில்லை.உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு ஏற்ப பெண்ணும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.பெண்ணுக்கு திறமையோ,அறிவோ இருந்தால் அதற்கு பெரிய மரியாதை கிடைப்பதில்லை.எத்தனை படித்த போதிலும் பெண் மட்டும்தான்.சிரித்துப்பேசினாலே கற்பனையை ஆண் வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்.பிறகு திட்ட ஆரம்பிக்கிறான்.
பெண் ஆணை எளிதில் புரிந்து கொள்கிறார்.ஆண் எதற்காக தன்னிடம் வலிய வந்து பேசுகிறான்,உதவி செய்வது போல நடிக்கிறான்,அவனுடைய நோக்கம் என்ன என்பது பெண்ணுக்கு நன்றாக தெரிகிறது.என்ன பெரிய நோக்கம்? அங்கீகாரத்திற்காக ஏங்குபவனையும்,நல்லவனையும் தெரிந்து கொள்ள முடிகிறது.ஆக மொத்தம் இரண்டு வகைதான் இருக்க முடியும். அவருக்கு எந்த சிக்கலும் இல்லை.உள்ளுக்குள் ஒரு ஆணை,அவர் கணவனாக இருந்தாலும் மதிக்கும் பெண்கள் குறைவு.அது யோக்கியதையை பொருத்த விஷயம்.பெண் ஆணை உயிராக பார்க்கிறார்.ஆண் உடலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பெண் அவனுடைய முகத்தை கவனிக்கிறார்.
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.