Sunday, November 24, 2013

தங்கநகை வாங்கப்போகிறீர்களா?ஹால்மார்க் என்பது ஆபரணத்தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை.நகைகளின் தரத்தை உறுதிசெய்யும்பொருட்டு இந்திய தரநிர்ணய அமைவனம்(BIS) 2000 ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் வாங்குவதன் மூலம் மாற்றுக்குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்கலாம்.
 • ஹால்மார்க் தரமுத்திரைத்திட்டம் கட்டாயம் இல்லை.விண்ணப்பிக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.(BIS Act 1986)

 • சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள்தான்.நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.

 • ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் சிறியதாக இருந்தாலும் அதில் ஐந்து முத்திரைகள் இருக்கும்.1.பி.ஐ.எஸ் முத்திரை,2.நேர்த்தித்தன்மை முத்திரை,3.அஸேயிங்& ஹால்மார்க் மையத்தின் முத்திரை,4.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு.5.நகை விற்பனையாளர் முத்திரை.

 • ஹால்மார்க் உரிமம் பெற்ற விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி வைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.நாம் நகை வாங்கும்போது பூதக்கண்ணாடி கேட்டுவாங்கி 5 முத்திரைகளையும் சரிபார்த்து வாங்கவேண்டும்.

 • நகைகளில் 916 அல்லது 916&KDM அல்லது 916&BIS முத்திரை மட்டுமே இருந்தால் அது உண்மையான ஹால்மார்க் முத்திரை அல்ல!5 முத்திரைகள் இருக்கவேண்டும்.

 • கேரட் மீட்டர்கள் மேற்புற சுத்தத்தனமையை மட்டுமே சோதித்துக்காட்டும்.(20 மைக்ரான் அளவு மட்டுமே).இதை முழுமையாக நம்பவேண்டாம்.

 • 916(22காரட்) மட்டுமே ஹால்மார்க் என்பதில்லை.958-23காரட்,916-22காரட்,875-21காரட்,750-18காரட்,708-17காரட்,585-14காரட்,375-9காரட் இவ்வாறு அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை உண்டு.

 • கேடியம்(KDM) என்பது கேட்மியம் மோனாக்ஸைடு உலோகத்தைக்குறிக்கிறது.சுத்தமானது என்றோ நேர்த்தியானது என்றோ பொருள் அல்ல.

 • நகை செய்யும்போது எளிதாக தங்கத்தை பற்றவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொடிதான் கேட்மியம்.

 • கேட்மியம் பயன்படுத்துவது புற்றுநோய்வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் சேர்க்க அனுமதி இல்லை.கேடியம் சுத்தமானது என்று எண்ணி ஏமாறவேண்டாம்.


 • ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் விலை அதிகம் என்பது உண்மையல்ல!எவ்வளவு எடை கொண்ட நகையானாலும் ஹால்மார்க் முத்திரை பெற 18 ரூபாய் மட்டுமே செலவாகிறது.

 • தங்கநகை வாங்கும்போது வியாபாரி தரும் எஸ்டிமேட் மட்டுமே வாங்காமல் முறையான பில்வாங்கவேண்டும்.
ஹால்மார்க் நகைகளில் குறை இருந்தால் பி.ஐ.எஸ் நிறுவனத்தில் புகார் தெரிவிக்கலாம்.
 -தர்மபுரி நுகர்வோர் உரிமை பாதுகாப்புசங்கத்தின் உதவியுடன்
-

Friday, November 15, 2013

மருத்துவமுறைகளில் சிறந்தது எது?அடிச்சுப்போட்ட மாதிரி வலிக்கிறது என்பார்கள்.குறிப்பிட்ட இடம் என்றில்லாமல் உடல் முழுக்க வலி இருக்கும்.சோர்வாக உணர்வார்கள்.விசாரித்துப்பார்த்தால் சரியான தூக்கம் இருக்காது,பசி இல்லை என்று சொல்வார்கள்.மேலும்பேசும்போது வீட்டில்,அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கும்.எதிர்மறையான எண்ணங்களில் சிக்கியிருப்பார்கள்.

மனம் அமைதியற்று இருக்கும் நிலையில் சுவாசம் சீராக இருப்பதில்லை.செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது முழுமையாக இருக்காது.பசியின்மை காரணமாக சரியாக சாப்பிட்டிருக்கமாட்டார்.அதனால் ஊட்டச்சத்துக்களும் உடலுக்குக் கிடைத்திருக்காது.அவருக்குப்பிரச்சினை தீர்ந்தால் சரியாகிவிடும்.நேர்மறையாக சிந்திக்கத்துவங்கினால் வலிகள் மறைந்துவிடக்கூடும்.

நான் சந்தித்த ஒருவர் வலிக்காக கடையில் மருந்துவாங்கி சாப்பிட்டிருந்தார்.வலி நிவாரணிகள் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பது அவருக்குத்தெரியாது.தூக்கத்தை வரவழைக்க தூக்க மாத்திரைகளும் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.படித்த மருத்துவர் ஒருவரும் வலி நிவாரணியைத்தான் பரிந்துரைத்தார்.கூடவே கொஞ்சம அமிலத்தைக்குறைக்கும் மருந்துகளையும் சேர்த்திருந்தார்.

படித்த மருத்துவர்களை விட போலிமருத்துவர்கள் அதிகம் இருக்கக்கூடும்.மருந்துக்கடையில் மாத்திரை கொடுத்து நோய்தீர்ப்பவர்கள் அதைவிட அதிகம்.இந்நிலையில் எந்த மருத்துவமுறை சிறந்தது என்று விவாதங்கள்இருக்கின்றன.ஆயுர்வேதம்,சித்தமருத்துவம்,யுனானி,ஹோமியோபதி ஆகியவை முக்கியமானவை.ஒவ்வொருவரும் அவரவர் துறையை ஆதரித்து பேசக்கூடும்.

பாட்டிவைத்தியம் என்பதை நாம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.ஜலதோஷம் பிடித்துக்கொண்டால் பாலில் மஞ்சள்தூள் போட்டுக்குடிக்கக் கொடுப்பார்கள்.இருமல் என்றால் கடுக்காயை நசுக்கி வாயில் வைத்து எச்சிலை விழுங்கச்சொல்வார்கள்.சளிக்கு ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிடவேண்டிய அவசியமில்லைதான்.அதிலும் மோசமான பிரச்சினை இருக்கிறது.பச்சைநிற வாந்திக்கு கொத்தமல்லியும் பனைவெல்லமும் சேர்த்து வேகவைத்த நீர்தான் கொடுப்பார்கள்.

என்னுடைய நண்பன் ஒருவன் திரிபலாவை பரிந்துரைப்பவனாக மாறிவிட்டான்.பலர் அவனைப் பின்பற்றி பலன் கண்டிருக்கிறார்கள்.அடிக்கடி வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டுவந்தவர் அவனுக்கு நன்றி சொன்னதை நேரில் பார்த்தேன்.சன்பர்ன் என்று தோலில் ஏற்படும் பிரச்சினை ஒன்று உண்டு.ஆங்கில மருத்துவத்தில் தீர்வு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.ஹோமியோபதி பார்த்தபிறகு பரவாயில்லை என்று ஒருவர் சொன்னார்.

மனநலம் குறித்த பிரச்சினைகளில் தெளிவு இல்லை.இன்னமும் பேய் ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.லாட்ஜ் வைத்தியர்கள் நாடுமுழுக்க சுற்றி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.மலர்மருத்துவம்,நீர்மருத்துவம்,காந்தமருத்துவம் என்று என்னென்னவோ இருக்கின்றன.உயிர்காக்கும் விஷயத்தில் இங்கே சுரண்டல்கள் அதிகம்.

தொடர்ந்து இருமல் இருக்கும்போது கடுக்காய்ரசத்தையே விழுங்கிக்கொண்டிருக்கலாமா? காசநோயாக இருந்தால் என்ன நடக்கும்? சுமார் பதினைந்து பேருக்குப் பரப்பிவிட்டு நோய் முற்றி மரணத்தை நோக்கி செல்லவேண்டியிருக்கும்.சளி  பரிசோதனை,எக்ஸ்ரே பரிசோதனை செய்துகண்டுபிடித்தால் நோய்தீர வழி இருக்கிறது.மருந்துகள் இலவசமாகக் கிடைக்கின்றன.

இரத்தப்பரிசோதனை,சளி,சிறுநீர் சோதனைகளை ஆங்கிலமருத்துவம்தான் தந்திருக்கிறது.சித்தா,ஆயுர்வேத மருத்துவர்களும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தோடு நிலவேம்புக்குடிநீரும் வழங்கப்படுகிறது.நெஞ்சுசளிக்கு பாட்டிவைத்தியம் ஒன்றிருக்கிறது.பச்சைக்கொள்ளை ஊறவைத்து அரைத்து,தனியா,இஞ்சி,பூண்டு போட்டு சாம்பார் வைப்பார்கள்.நல்லபலன் இருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

இந்திய மருத்துவமுறைகளை நாம் ஒதுக்கிவிட முடியாது.போதுமான அளவு ஆராய்ச்சிகள் இல்லை என்று தோன்றுகிறது.நம்முடைய பிரச்சினை எந்த மருத்துவமுறையை பின்பற்றலாம் என்பதல்ல! மனிதநேயமிக்க நல்ல மருத்துவரைக் கண்டுபிடிப்பதுதான்.பணத்தைக்குறிக்கோளாகக் கொள்ளாவிட்டால் ஆயுர்வேத மருத்துவரும் சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்துக்கு பரிந்துரைப்பார்.

எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவரும் இந்திய மருத்துவமுறையை பயன்படுத்துவதுண்டு.வலிக்காக தைலம் வாங்கிச்செல்லும் மருத்துவரை நான் பார்த்திருக்கிறேன்.வலிநிவாரணிகளைவிட தைலம் பாதுகாப்பானது.காசநோய்க்கு ஆங்கிலமருத்துவத்தை நாடவேண்டும்.குடல்புண்ணுக்கு திரிபலா வரம்.ஏற்கனவே சொன்னதுபோல சகமனிதன் மீது அக்கறை உள்ள நல்ல மருத்துவர் கிடைக்கவேண்டும்.
-

Tuesday, November 12, 2013

ஆரோக்கியம் காத்த நிலக்கடலைபலகாரம் செய்வதெல்லாம் கடலைஎண்ணெயில்தான் இருக்கும்.தினசரி சமையலுக்கும் தாளிக்கவும் தான்.தலைக்குவைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய்,தலைதேய்த்துக்குளிக்க நல்லெண்ணெய்.வேறு எண்ணெய்யைப்பற்றி கேள்விப்பட்ட்தில்லை.நிறைமாத கர்ப்பிணிகள் இருந்தால் ஆமணக்கு எண்ணெய் தயாராக இருக்கும்.அதிலும் சிற்றாமணக்கு என்றால் கொஞ்சம் சிறப்பு.


செக்குவைத்து எண்ணெய் எடுத்துத்தர ஒரு சாதி உண்டு.பெரும்பாலும் கிராமத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெய்தான்.என்னுடைய சிறுவயதிலேயே செக்கெல்லாம் காணாமல் போய்விட்டது.அப்புறம் எந்திரம் வந்துவிட்டது.பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தபோது கடலைஎண்ணெய் தவிர மற்றவை பிரபலமாக இருந்தது.அது ஆரோக்கியத்திற்கு கேடாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
தோலை நீக்காமல் சாப்பிடுங்கள்

தர்மபுரி பகுதியில் கடலைக்காய் என்று சொல்வோம்.பாதையோரம் நிலம் இருந்தால் காவல் இருந்தேதீரவேண்டும்.வழியில் போகும்போது செடியைப்பிடுங்கி விடுவார்கள்.நிலக்கடலை விளைச்சல்தான் அந்த ஆண்டின் வளத்தைத் தீர்மானிக்கும்.மூட்டையை அடுக்கிவைத்துக்கொண்டு விலையைக்கவனித்துக் கொண்டிருப்பார்கள்.செடியைப்பிடுங்கி எத்தனை காய் இருக்கிறதென்று பார்த்தே ஓரளவு தீர்மானித்து விடுவார்கள்.


கடலையை எத்தனை விதங்களில் சுவைக்கமுடியும்? செடியைப்பிடுங்கி பச்சைக்கடலையை உரித்துத் தின்பதில் ஆரம்பிக்கும்.மிகத்தனித்துவமான சுவை கொண்டிருக்கும்.அறுவடை செய்த கடலைக்காயை வயலிலேயே சுட்டுத்தின்பது அடுத்து நடக்கும்.அடுத்தநாள் தண்ணீரில் கழுவி வேகவைப்பார்கள்.காயவைத்த பிறகு வறுத்தகடலையும் அதை  நீரில் மிளகாய்ப்பொடி குழைத்து பிரட்டி எடுப்பதும் இன்னொரு சுவை.


கடலையை வறுத்து தூளாக்கித்தூவாத பொரியல் இல்லவே இல்லை.பூசணி,சுண்டைக்காய்,பாகற்காய்க்கு இந்தத்தூள் கட்டாயம்.கடலையின் மேல்தோலை எடுத்துவிடுவார்கள்.தோலில் உள்ள தயமின் எடுக்கப்பட்டுவிடுகிறது.மழைபெய்யும்போது இதமானது வறுத்த கடலைக்காய்தான்.சில நேரங்களில் சட்னியாக வடிவெடுக்கும்.கேழ்வரகுக்களிக்கு இந்தச் சட்னி தனிச்சுவை.

காய்ந்த காயை உரித்து தேவைப்பட்டபோது எண்ணெய் தயாரித்துக்கொள்வார்கள்.நம்முடைய பாரம்பரிய சமையலைவிட இன்று எண்ணெய் பயன்பாடு அதிகரித்துவிட்டது.சிலர் எண்ணெய்யை கண்டாலே அஞ்சுகிறார்கள்.நாம் காலம்காலமாக பயன்படுத்திவந்த கடலைஎண்ணெய் ஆரோக்கியமானது.உணவியல் நிபுணர்களால் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.நிலக்கடலை உயிர்ச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கிறது.நம்முடைய தினசரி பயன்பாட்டில் ஏதோவொருவிதத்தில் இருந்துவந்திருக்கிறது.சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதும் சாத்தியம்தான்.அலர்ஜி இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும்.உடலுக்கு அவசியமான தாதுக்களும்,பி வைட்டமினும்,நோயை எதிர்க்கும் புரதங்களும் இதன் தனிச்சிறப்பு.தினசரி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்தை உறுதிசெய்யும்.
-

Sunday, November 10, 2013

ஆங்கிலப்புத்தகம் எதிர் தமிழ்ப்புத்தகம்அவர் ஆங்கிலப்பத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.மூன்று பாகங்கள் அடங்கிய நாவலில் இரண்டாவது பாகம் படித்துக்கொண்டிருந்தார்.அவருடைய அலுவலர் அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.அவருடைய பையனும் ஆங்கில நாவல்களை படிக்க ஆரம்பித்திருக்கிறான்.தமிழ்ப்புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.


சுஜாதா,பாலகுமாரன் ஜெயகாந்தன் போன்றவர்களைப் படித்திருப்பதாக சொன்னார்.இப்போது ஆங்கிலப்பத்தகங்களை விரும்பிப்படிக்கிறார்.அவருக்கும் பையனுக்கும்  நண்பர்கள் அந்தப்புத்தகங்களை பரிந்துரைத்தார்கள்.வாசிப்புப்பழக்கம் அப்படித்தான்உருவாகிவிடுகிறது.குடும்பத்திலோ,நண்பர்களிடமிருந்தோ தொற்றிக்கொள்கிறது.பத்தாம்வகுப்பு படிக்கும்போது எனக்கு தினமணி அறிமுகமானது.பொதுத்தேர்வு விடுமுறையில் நண்பன் வீட்டுக்குப்போயிருந்தபோது கல்கி இதழைப்படித்தேன்.நண்பனின் அண்ணன் தொடராக வரும் கல்கியின் நாவலைக்கிழித்து பைண்டிங் செய்து வைத்திருந்தார்.நான் ஆனந்தவிகடன் வாங்க ஆரம்பித்தேன்.எனக்கும் தொடர்களைக் கிழித்துவைக்கும் பழக்கம் உருவாகிவிட்டது.


ஆனந்தவிகடனில் கிரா வின் கோபல்லபுரத்துமக்கள் தொடராக வந்தது.கிழித்துவைத்து தைத்துவிட்டேனே தவிர என் வயதுக்குப் புரியவில்லை.சில பக்கங்களுக்குமேல் படிக்கவில்லை.சுஜாதா,பாலகுமாரன் நாவல்களை படித்துக்கொண்டிருந்தேன்.சுபமங்களா இதழுக்கு அனுராதாரமணன் ஆசிரியராக இருந்தார்.எப்போதாவது வாங்கிப்படிக்கும் பழக்கம் இருந்தது.


கோமல்சுவாமிநாதன் ஆசிரியராக வந்தபிறகு சுபமங்களாவின் உருவம்,உள்ளடக்கம் என்று மாறிவிட்டது.எனக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது என்று சொல்லவேண்டும்.நல்ல எழுத்தாளர்களை,புத்தகங்களை நான் அறிந்துகொண்டேன்.சுபமங்களாவில் சுந்தரராமசாமியின் கேள்விபதில் வருவதாக இருந்தது.ஆனால் என்ன காரணத்தினாலோ வரவில்லை.


சுபமங்களாவில் சுராவின் நாடகம் ஒன்று வந்திருந்தது.படித்துவிட்டு அவருக்கு கடிதம் போட்டுவிட்டேன்.அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழ்கள் இரண்டை அனுப்பியிருந்தார்.வரிவரியாக படித்துமுடித்தபிறகு பொக்கிஷங்களை கண்டுகொண்டது போலத்தான் இருந்தது.கணையாழி இதழ் தர்மபுரியில் கிடைக்கவில்லை.சேலத்தில் வேலைசெய்யும் நண்பன் ஒருவனை வாங்கிவரச்சொல்லிப் படித்தேன்.


நல்ல எழுத்துக்களைச் சென்றடைய பாலம் தேவைப்படுகிறது.சுஜாதா அப்படியொரு பாலமாக இருந்தார்.தனது வாசகர்களை சில நேரம் கணையாழி போன்ற இதழ்களுக்குத்திசை காட்டினார்.பிரபல பத்திரிகைகள் தீபாவளி,பொங்கலுக்கு சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவார்கள்.இந்த ஆண்டு ஆனந்தவிகடனில் மறக்காமல் செய்திருக்கிறார்கள்.


ஆங்கிலப்புத்தகமோ,தமிழ்ப்புத்தகமோ பரிந்துரைக்கப்பட்டு படிக்கப்படுகின்றன.பணிச்சூழலில்,கல்லூரிகளில் மற்ற மாநிலத்தவர் நட்பு சாதாரணமாகிவிட்டது.ஆங்கிலப்புத்தகம் அதிக அளவு பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.இதுதவிர நம்முடைய ஆங்கில மோகமும் ஒரு காரணம்.ஆங்கிலமொழிதான் அறிவை நிர்ணயிப்பதாகக் கருதுபவர்கள் நம்மிடையே இன்னமும் உண்டு.


வாசிப்புப்பழக்கம் நம்முடைய பண்பாடாக மாறவேண்டும்.யாராவது ஒரு இயக்கம் ஆரம்பித்தால்கூட நல்லதுதான்.நாவலைசிறுகதையை படிப்பதால் என்ன நன்மை என்று நாம் சொல்லவேண்டும்.இன்று நேரடியாக பயனை எதிர்பார்க்கிறார்கள்.படிப்பது மனநலத்தைக்கூட்டும் என்று சொல்லலாமா? தியானத்தின் பலனைத்தரும் என்று விளக்கம்தரலாமா?மன அழுத்தத்தைக்குறைக்க புத்தகம் படிப்பதை பரிந்துரைப்பதுண்டு.மன அழுத்தம் குறைந்தாலே சில நோய்கள் தடுக்கப்பட்டுவிடும்.வளர்ந்தநாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன.வாசிப்புப்பழக்கம் உள்ளவர்களை ஆராய்ச்சி செய்யலாம்.வாசிப்பவர்களிடத்தில் சிலநோய்கள் ஏற்படும் விகிதம் குறைவு என்று ஆய்வுமுடிவுகள் சொல்லக்கூடும்.நினைவாற்றல்,படிக்கும்வேகம்,கூர்ந்துநோக்கும்திறன் அதிகமாக இருப்பதாகத் தெரியவரலாம்.சக மனிதனை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.அறிவைப்பெறுவதால் சுயமதிப்பு அதிகரித்து மற்றவர்களிடம் மரியாதையும் கிடைக்கும்.


என்ன லாபம் என்று கேட்பவர்களுக்கு இப்படி ஏதாவது செய்தால்தான் உண்டு.கலை,இலக்கியமெல்லாம் நம்முடைய பண்பாட்டின் பகுதி.ஏற்றம் இறைக்கவும் பாட்டு,நாற்றுநடவும் பாட்டுதான்.துக்கத்திலும் பாடித்தான் அழுதார்கள்.பாட்டிகள் கதைசொல்லிகளாக இருந்தார்கள்.சாதியின் கடவுளை மையமாக வைத்து அவர்களுக்கென்று மட்டும் தெருக்கூத்துக் கதையைக் கொண்ட சாதியும் உண்டு.நாம் குழந்தைகளிடமிருந்து வாசிக்கும்பழக்கத்தைத் துவங்கவேண்டும்.
-