அடிச்சுப்போட்ட மாதிரி வலிக்கிறது என்பார்கள்.குறிப்பிட்ட இடம்
என்றில்லாமல் உடல் முழுக்க வலி இருக்கும்.சோர்வாக
உணர்வார்கள்.விசாரித்துப்பார்த்தால் சரியான தூக்கம் இருக்காது,பசி இல்லை என்று
சொல்வார்கள்.மேலும்பேசும்போது வீட்டில்,அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கும்.எதிர்மறையான
எண்ணங்களில் சிக்கியிருப்பார்கள்.
மனம் அமைதியற்று இருக்கும் நிலையில் சுவாசம் சீராக இருப்பதில்லை.செல்களுக்கு
ஆக்ஸிஜன் கிடைப்பது முழுமையாக இருக்காது.பசியின்மை காரணமாக சரியாக
சாப்பிட்டிருக்கமாட்டார்.அதனால் ஊட்டச்சத்துக்களும் உடலுக்குக் கிடைத்திருக்காது.அவருக்குப்பிரச்சினை
தீர்ந்தால் சரியாகிவிடும்.நேர்மறையாக சிந்திக்கத்துவங்கினால் வலிகள்
மறைந்துவிடக்கூடும்.
நான் சந்தித்த ஒருவர் வலிக்காக கடையில் மருந்துவாங்கி
சாப்பிட்டிருந்தார்.வலி நிவாரணிகள் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பது
அவருக்குத்தெரியாது.தூக்கத்தை வரவழைக்க தூக்க மாத்திரைகளும் வாங்கி
சாப்பிட்டிருக்கிறார்.படித்த மருத்துவர் ஒருவரும் வலி நிவாரணியைத்தான்
பரிந்துரைத்தார்.கூடவே கொஞ்சம அமிலத்தைக்குறைக்கும் மருந்துகளையும்
சேர்த்திருந்தார்.
படித்த மருத்துவர்களை விட போலிமருத்துவர்கள் அதிகம் இருக்கக்கூடும்.மருந்துக்கடையில்
மாத்திரை கொடுத்து நோய்தீர்ப்பவர்கள் அதைவிட அதிகம்.இந்நிலையில் எந்த மருத்துவமுறை
சிறந்தது என்று விவாதங்கள்இருக்கின்றன.ஆயுர்வேதம்,சித்தமருத்துவம்,யுனானி,ஹோமியோபதி
ஆகியவை முக்கியமானவை.ஒவ்வொருவரும் அவரவர் துறையை ஆதரித்து பேசக்கூடும்.
பாட்டிவைத்தியம் என்பதை நாம் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.ஜலதோஷம்
பிடித்துக்கொண்டால் பாலில் மஞ்சள்தூள் போட்டுக்குடிக்கக் கொடுப்பார்கள்.இருமல்
என்றால் கடுக்காயை நசுக்கி வாயில் வைத்து எச்சிலை விழுங்கச்சொல்வார்கள்.சளிக்கு
ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிடவேண்டிய அவசியமில்லைதான்.அதிலும் மோசமான பிரச்சினை
இருக்கிறது.பச்சைநிற வாந்திக்கு கொத்தமல்லியும் பனைவெல்லமும் சேர்த்து வேகவைத்த
நீர்தான் கொடுப்பார்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் திரிபலாவை பரிந்துரைப்பவனாக மாறிவிட்டான்.பலர்
அவனைப் பின்பற்றி பலன் கண்டிருக்கிறார்கள்.அடிக்கடி வயிற்றுப்புண்ணால்
அவதிப்பட்டுவந்தவர் அவனுக்கு நன்றி சொன்னதை நேரில் பார்த்தேன்.சன்பர்ன் என்று
தோலில் ஏற்படும் பிரச்சினை ஒன்று உண்டு.ஆங்கில மருத்துவத்தில் தீர்வு இல்லை என்று
சொல்லிவிட்டார்கள்.ஹோமியோபதி பார்த்தபிறகு பரவாயில்லை என்று ஒருவர் சொன்னார்.
மனநலம் குறித்த பிரச்சினைகளில் தெளிவு இல்லை.இன்னமும் பேய் ஓட்டிக்கொண்டுதான்
இருக்கிறார்கள்.லாட்ஜ் வைத்தியர்கள் நாடுமுழுக்க சுற்றி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.மலர்மருத்துவம்,நீர்மருத்துவம்,காந்தமருத்துவம்
என்று என்னென்னவோ இருக்கின்றன.உயிர்காக்கும் விஷயத்தில் இங்கே சுரண்டல்கள் அதிகம்.
தொடர்ந்து இருமல் இருக்கும்போது கடுக்காய்ரசத்தையே
விழுங்கிக்கொண்டிருக்கலாமா? காசநோயாக இருந்தால் என்ன நடக்கும்? சுமார் பதினைந்து
பேருக்குப் பரப்பிவிட்டு நோய் முற்றி மரணத்தை நோக்கி
செல்லவேண்டியிருக்கும்.சளி பரிசோதனை,எக்ஸ்ரே பரிசோதனை
செய்துகண்டுபிடித்தால் நோய்தீர வழி இருக்கிறது.மருந்துகள் இலவசமாகக் கிடைக்கின்றன.
இரத்தப்பரிசோதனை,சளி,சிறுநீர் சோதனைகளை ஆங்கிலமருத்துவம்தான்
தந்திருக்கிறது.சித்தா,ஆயுர்வேத மருத்துவர்களும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.டெங்கு
காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தோடு நிலவேம்புக்குடிநீரும்
வழங்கப்படுகிறது.நெஞ்சுசளிக்கு பாட்டிவைத்தியம் ஒன்றிருக்கிறது.பச்சைக்கொள்ளை ஊறவைத்து
அரைத்து,தனியா,இஞ்சி,பூண்டு போட்டு சாம்பார் வைப்பார்கள்.நல்லபலன் இருப்பதை
அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
இந்திய மருத்துவமுறைகளை நாம் ஒதுக்கிவிட முடியாது.போதுமான அளவு
ஆராய்ச்சிகள் இல்லை என்று தோன்றுகிறது.நம்முடைய பிரச்சினை எந்த மருத்துவமுறையை
பின்பற்றலாம் என்பதல்ல! மனிதநேயமிக்க நல்ல மருத்துவரைக் கண்டுபிடிப்பதுதான்.பணத்தைக்குறிக்கோளாகக்
கொள்ளாவிட்டால் ஆயுர்வேத மருத்துவரும் சில நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்துக்கு
பரிந்துரைப்பார்.
எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவரும் இந்திய மருத்துவமுறையை
பயன்படுத்துவதுண்டு.வலிக்காக தைலம் வாங்கிச்செல்லும் மருத்துவரை நான்
பார்த்திருக்கிறேன்.வலிநிவாரணிகளைவிட தைலம் பாதுகாப்பானது.காசநோய்க்கு
ஆங்கிலமருத்துவத்தை நாடவேண்டும்.குடல்புண்ணுக்கு திரிபலா வரம்.ஏற்கனவே சொன்னதுபோல
சகமனிதன் மீது அக்கறை உள்ள நல்ல மருத்துவர் கிடைக்கவேண்டும்.
3 comments:
பாரம்பரிய இந்திய வைத்தியங்களை ஒதுக்கிவிட முடியாது, ஆனால் அவற்றில் போலிகள் எத்தனை என்பதைத் தான் அறிய முடிவதில்லை. லாட்ஜ் வைத்தியர்கள் தொடங்கி டிவி வரை பல போலிகள் மக்களை ஏமாற்றி பணம் பண்ணுகின்றன, மறுமுனையில் அலோபதி வைத்தியத்தில் அநாவசிய அச்சங்கள் செலவினங்களை கொடுத்து பணம் செய்கின்றனர். நாட்டு வைத்தியம் என்பது இன்று கற்று பயின்று தேர்ச்சி பெற்று நடத்தப்படும் சூழலிலும் செவி வழி பயிற்சி என்ற பேரில் ஏமாற்றுவோர் பலர் உள்ளனர். பாரம்பரிய மருந்துகள் குறித்து விரிவான ஆய்வு வேண்டும், அவற்றை தரப்படுத்தி போலிகளை களைய வேண்டும், மருந்தகங்கள் மக்களுக்கு மருத்துவ ஆலோசணையின்றி மருந்துகள் விற்பதை தடுக்க வேண்டும். எந்த வைத்தியமும் நன்மை தீமை உண்டு நோய் நாடி குணம் நாடி அறிவோடு அணுகி பயன்படுத்த வேண்டும்.
மருத்துவர்கள் தெய்வமாக காட்சியளித்த காலமுண்டு. இன்றைய மருத்துவர்கள் வியாபாரிகளாகவும் வியாபாரிகளுக்கு (மருந்து தயாரிப்பு, விற்பனை) துணை போகிறவர்களாகவும் பெரும்பாலும் மாறிப் போனதால் மக்கள் பயத்துடனே அவர்களை அணுக வேண்டியுள்ளது (பண மூட்டையுடனும்)
நம் உடம்புக்கு ஒத்து வரும் முறையை நாம் தான் ஆராய்ந்தறிய வேண்டியுள்ளது.
உணவை மருந்தாக உட்கொண்ட நம் முன்னோர்கள் புத்திசாலிகள்... மருந்தை உணவாக (உணவுப் பொருளாகவும்) உண்ணும் துரதிருஷ்ட சாலிகளான நம்மை விட.
nice post
Post a Comment