Sunday, November 10, 2013

ஆங்கிலப்புத்தகம் எதிர் தமிழ்ப்புத்தகம்



அவர் ஆங்கிலப்பத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார்.மூன்று பாகங்கள் அடங்கிய நாவலில் இரண்டாவது பாகம் படித்துக்கொண்டிருந்தார்.அவருடைய அலுவலர் அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.அவருடைய பையனும் ஆங்கில நாவல்களை படிக்க ஆரம்பித்திருக்கிறான்.தமிழ்ப்புத்தகங்கள் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.


சுஜாதா,பாலகுமாரன் ஜெயகாந்தன் போன்றவர்களைப் படித்திருப்பதாக சொன்னார்.இப்போது ஆங்கிலப்பத்தகங்களை விரும்பிப்படிக்கிறார்.அவருக்கும் பையனுக்கும்  நண்பர்கள் அந்தப்புத்தகங்களை பரிந்துரைத்தார்கள்.வாசிப்புப்பழக்கம் அப்படித்தான்உருவாகிவிடுகிறது.குடும்பத்திலோ,நண்பர்களிடமிருந்தோ தொற்றிக்கொள்கிறது.



பத்தாம்வகுப்பு படிக்கும்போது எனக்கு தினமணி அறிமுகமானது.பொதுத்தேர்வு விடுமுறையில் நண்பன் வீட்டுக்குப்போயிருந்தபோது கல்கி இதழைப்படித்தேன்.நண்பனின் அண்ணன் தொடராக வரும் கல்கியின் நாவலைக்கிழித்து பைண்டிங் செய்து வைத்திருந்தார்.நான் ஆனந்தவிகடன் வாங்க ஆரம்பித்தேன்.எனக்கும் தொடர்களைக் கிழித்துவைக்கும் பழக்கம் உருவாகிவிட்டது.


ஆனந்தவிகடனில் கிரா வின் கோபல்லபுரத்துமக்கள் தொடராக வந்தது.கிழித்துவைத்து தைத்துவிட்டேனே தவிர என் வயதுக்குப் புரியவில்லை.சில பக்கங்களுக்குமேல் படிக்கவில்லை.சுஜாதா,பாலகுமாரன் நாவல்களை படித்துக்கொண்டிருந்தேன்.சுபமங்களா இதழுக்கு அனுராதாரமணன் ஆசிரியராக இருந்தார்.எப்போதாவது வாங்கிப்படிக்கும் பழக்கம் இருந்தது.


கோமல்சுவாமிநாதன் ஆசிரியராக வந்தபிறகு சுபமங்களாவின் உருவம்,உள்ளடக்கம் என்று மாறிவிட்டது.எனக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது என்று சொல்லவேண்டும்.நல்ல எழுத்தாளர்களை,புத்தகங்களை நான் அறிந்துகொண்டேன்.சுபமங்களாவில் சுந்தரராமசாமியின் கேள்விபதில் வருவதாக இருந்தது.ஆனால் என்ன காரணத்தினாலோ வரவில்லை.


சுபமங்களாவில் சுராவின் நாடகம் ஒன்று வந்திருந்தது.படித்துவிட்டு அவருக்கு கடிதம் போட்டுவிட்டேன்.அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழ்கள் இரண்டை அனுப்பியிருந்தார்.வரிவரியாக படித்துமுடித்தபிறகு பொக்கிஷங்களை கண்டுகொண்டது போலத்தான் இருந்தது.கணையாழி இதழ் தர்மபுரியில் கிடைக்கவில்லை.சேலத்தில் வேலைசெய்யும் நண்பன் ஒருவனை வாங்கிவரச்சொல்லிப் படித்தேன்.


நல்ல எழுத்துக்களைச் சென்றடைய பாலம் தேவைப்படுகிறது.சுஜாதா அப்படியொரு பாலமாக இருந்தார்.தனது வாசகர்களை சில நேரம் கணையாழி போன்ற இதழ்களுக்குத்திசை காட்டினார்.பிரபல பத்திரிகைகள் தீபாவளி,பொங்கலுக்கு சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவார்கள்.இந்த ஆண்டு ஆனந்தவிகடனில் மறக்காமல் செய்திருக்கிறார்கள்.


ஆங்கிலப்புத்தகமோ,தமிழ்ப்புத்தகமோ பரிந்துரைக்கப்பட்டு படிக்கப்படுகின்றன.பணிச்சூழலில்,கல்லூரிகளில் மற்ற மாநிலத்தவர் நட்பு சாதாரணமாகிவிட்டது.ஆங்கிலப்புத்தகம் அதிக அளவு பரிந்துரைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.இதுதவிர நம்முடைய ஆங்கில மோகமும் ஒரு காரணம்.ஆங்கிலமொழிதான் அறிவை நிர்ணயிப்பதாகக் கருதுபவர்கள் நம்மிடையே இன்னமும் உண்டு.


வாசிப்புப்பழக்கம் நம்முடைய பண்பாடாக மாறவேண்டும்.யாராவது ஒரு இயக்கம் ஆரம்பித்தால்கூட நல்லதுதான்.நாவலைசிறுகதையை படிப்பதால் என்ன நன்மை என்று நாம் சொல்லவேண்டும்.இன்று நேரடியாக பயனை எதிர்பார்க்கிறார்கள்.படிப்பது மனநலத்தைக்கூட்டும் என்று சொல்லலாமா? தியானத்தின் பலனைத்தரும் என்று விளக்கம்தரலாமா?மன அழுத்தத்தைக்குறைக்க புத்தகம் படிப்பதை பரிந்துரைப்பதுண்டு.மன அழுத்தம் குறைந்தாலே சில நோய்கள் தடுக்கப்பட்டுவிடும்.



வளர்ந்தநாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சிகள் நடக்கின்றன.வாசிப்புப்பழக்கம் உள்ளவர்களை ஆராய்ச்சி செய்யலாம்.வாசிப்பவர்களிடத்தில் சிலநோய்கள் ஏற்படும் விகிதம் குறைவு என்று ஆய்வுமுடிவுகள் சொல்லக்கூடும்.நினைவாற்றல்,படிக்கும்வேகம்,கூர்ந்துநோக்கும்திறன் அதிகமாக இருப்பதாகத் தெரியவரலாம்.சக மனிதனை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.அறிவைப்பெறுவதால் சுயமதிப்பு அதிகரித்து மற்றவர்களிடம் மரியாதையும் கிடைக்கும்.


என்ன லாபம் என்று கேட்பவர்களுக்கு இப்படி ஏதாவது செய்தால்தான் உண்டு.கலை,இலக்கியமெல்லாம் நம்முடைய பண்பாட்டின் பகுதி.ஏற்றம் இறைக்கவும் பாட்டு,நாற்றுநடவும் பாட்டுதான்.துக்கத்திலும் பாடித்தான் அழுதார்கள்.பாட்டிகள் கதைசொல்லிகளாக இருந்தார்கள்.சாதியின் கடவுளை மையமாக வைத்து அவர்களுக்கென்று மட்டும் தெருக்கூத்துக் கதையைக் கொண்ட சாதியும் உண்டு.நாம் குழந்தைகளிடமிருந்து வாசிக்கும்பழக்கத்தைத் துவங்கவேண்டும்.
-

No comments: