Sunday, September 30, 2012

சோளம் –உணவும் ஊட்டச்சத்தும்


ஆனந்த விகடனில் ஆறாம்திணை படித்துக்கொண்டிருந்தேன்.சோளம் பற்றி படித்தவுடன் திடீரென்று நான் சிறுவனாகி விட்டேன்.சோளக்காட்டுக்கு பொம்மையை செய்து கொண்டிருக்கிறோம்.காய்ந்த புற்களை மனித உருவம் போல செய்து சட்டையையும்,முழுக்கால் சட்டையையும் அணிவிக்கிறோம்.காக்கை,குருவியெல்லாம் மனிதன் நிற்பதாக கருதி சோளம் தின்ன உள்ளே வராது.பறவைகளிலும் சில புத்திசாலிகள் இருக்கத்தானே செய்யும்? பொம்மை என்று தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து விடும்.மண்,கல் போன்றவற்றை வாரி இறைத்து துரத்தவேண்டும்.இந்த வேலையைச்செய்தால் சோளம் காய்ச்சி தருவதாக அம்மாவோ அப்பாவோ சொல்வார்கள்.

                      பால் ஏறிய பின்பு பச்சை சோளத்தை காயவைத்து உதிர்ப்பார்கள்.வெல்லமும் ஏலக்காயும் சேர்த்து காய்ச்சுவார்கள்.எப்போது வெந்துமுடியும் என்று மனம் தவிக்கும்.இருப்பதிலே கம்பீரமாக உயரமாக நிற்பது சோளப்பயிர்தான்.ஐப்பசி மாத அடைமழைக்குப் பிறகு அதிகமான வளர்ச்சி இருக்கும்.அதிக எரு போட்ட வயலாக இருந்தால் பத்தடி உயரத்தைத் தொடும்.ஆட்கள் தனியாக உள்ளே போக அஞ்சுவார்கள்.சரியாக வளராத சோளப்பயிர் கால்நடைகளுக்கு நல்ல தீவனம்.சோளத்தை அறுத்து மாட்டை பூட்டி மிதிக்கவிடுவார்கள்.களத்தில் வேலை செய்பவர்களுக்கு உடலெங்கும் அரிப்பெடுத்துவிடும்.இரவு குளிக்காமல் தூங்கப்போக முடியாது.
                       கிராமத்தில் மளிகை கடை வைத்திருந்தோம்.உடனே அளந்து போடுகிறமாதிரி கைக்கெட்டும் தூரத்தில் கேழ்வரகும் சோளமும் இருக்கும்.அதிகம் விற்பனையாவதும் இதுதான்.இவையிரண்டும் ஏழைகளின் முக்கிய உணவான கூழில் இருக்கும்.பெரும்பாலும் கேழ்வரகுக் கூழ் என்பது சோளமும் சேர்ந்த உணவுதான்.மாலையில் சோளத்தை உரலில் இடித்து சட்டியில் நொதிக்க வைப்பார்கள்.காலையில் கேழ்வரகு மாவுடன் சேர்த்துக்காய்ச்சினால் கூழ் தயாராகி விடும்.இன்றைய டீ,காபிக்கு பதிலாக இதைத்தான் குடித்து வந்தார்கள்.தண்ணீர் ஊற்றி கரைத்து குடிப்பார்கள்.மோரில் கலக்கியும் குடிப்பதுண்டு.கெட்டியான கூழுடன் குழம்பு சேர்த்து உண்பார்கள்.கீரை,சுண்டைக்காய் குழம்புகள் என்றால் கொஞ்சம் அதிகமாக உள்ளே போகும்.

                                 உடனடியாக உணவு தயார் செய்யவேண்டிய நிலை வருவதுண்டு.சோள மாவோ கேழ்வரகு மாவோ இருக்கும்.வெங்காயத்தையும்,மிளகாயையும் அரிந்து கொட்டி நீர் ஊற்றி பிசைந்து தோசைக்கல்லில் போட்டால் சுவையான உணவு தயார்.இட்லி தோசைக்கு அரிசி,உளுத்தம்பருப்புடன் சோளத்தையும் உடன் சேர்த்துக்கொள்வார்கள்.கேழ்வரகு மாவு இல்லாதபோது சோளமாவு மட்டுமே கொண்டு களி தயாரிப்பார்கள்.கீரைக்குழம்பு சேர்த்தால் சரிவிகித உணவு கிடைத்து விடாதா?
                                   சோளத்தில் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்புடன்,நார்ச்சத்து போன்றவற்றுடன் கால்சியம்,இரும்பு,உயிர்ச்சத்து பி (தயமின்,ரிஃபோபிளேவின்,நயாசின்) போன்றவை அடங்கியிருக்கிறது.இந்த ஆய்வெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து சொன்னதை நாம் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.நொதிக்க வைத்த சோளத்திலும் இதே சத்துக்கள்தான் இருக்குமா? லேசாக புளிக்கும் கூழில் வேறென்ன சத்துக்கள் தோன்றியிருக்கும்.இப்படித்தயாரித்த கூழை மட்டுமே தினமும் குடித்து வளர்ந்தவர்களும் ஆரோக்கியமாகவே இருந்தார்கள்.

                                    நம்முடைய பாரம்பர்ய உணவுகளில் அதன் தயாரிப்பு முறைகளுக்குப் பிறகு என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? யாராவது ஆய்வு செய்து சொன்னால் அதன் முக்கியத்துவம் கூடலாம்.மலிவான விலையில் ஆரோக்கியத்தை தரும் உணவுகளை இழந்து விட்டு அதிக விலை கொடுத்து குப்பையை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.ஒரு எலுமிச்சை பழரசம் தரும் குளிர்ச்சியும்,உடல்நலமும் கோக்,பெப்ஸியால் தரமுடியுமா? அப்புறம் ஏன் இந்த நிலை?
                                   விலை மலிவானதெல்லாம் தரமற்றது என்று ஒரு மனப்போக்கு இருந்து வருகிறது.விவசாய கூலிக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.எல்லோரும் படித்துவிட்டால் யார் விவசாயம் செய்வது? என்று ஒருவர் கேட்டார்.படித்துவிட்டால் விவசாயம் செய்யக்கூடாது என்று நாமே உருவாக்கிக் கொண்டோம்.தானியங்கள் விளைவித்து வீடு கொண்டுவர போதுமான கூலி ஆட்கள் தேவை.அதனால் விளைவிப்பதும் குறைந்து வருகிறது.நாம் வேர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.அதன் விளைவுதான் மருந்துக்கடைகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்.
-