Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Sunday, December 8, 2013

இரத்தப்பரிசோதனை-அறியாத உண்மைகள்.


உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் இரத்தப்பரிசோதனைக்கு பரிந்துரைப்பதுண்டு.சில தினங்களாக காய்ச்சல் எனும்போது டைபாய்டு பரிசோதனை அவசியம்.மலேரியா பரிசோதனைக்கும் எழுதிக்கொடுக்கலாம்.நாம் சொல்லும் அறிகுறிகளை வைத்து தீர்மானிப்பார்கள்.சில இடங்களில் மருத்துவர்களைவிட இரத்தப்பரிசோதனை மையங்கள் அதிகமாக இருக்கின்றன.

நீரிழிவு நோயாளிகள் காலையிலேயே வரிசையில் நிற்பார்கள்.அவர்களுக்கு சாப்பிடும்முன்பும் பின்பும் சோதனை செய்யவேண்டும்.வீடுகளுக்கே நேரில் வந்து இரத்தமாதிரி சேகரித்துச்செல்லும் மையங்களும் இருக்கின்றன.பொதுவாக பணத்திற்காக (கமிஷன்) டெஸ்டுகளை எழுதுகிறார்கள் என்று குற்றச்சாட்டும் இருக்கிறது.ஆனால் எதிர்பாராவிதமாக அறிகுறியற்ற நோயோ,குறைபாடோ கண்டறியப்பட்டதும் உண்டு.

ஒருவர் இரத்தப்பரிசோதனை மையம் வைத்திருந்தார்.அவர் கொடுக்கும் சம்பளத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை.வசதியில்லாத ஒரு பையனைப் பிடித்து இரத்தம் எடுக்கக் கற்றுக்கொடுத்துவிட்டார்.பரிசோதனை செய்ய யாராவது வந்தால் போன் வரும்.வந்தவருக்கு என்ன அறிகுறி இருக்கிறதென்று கேட்கச் சொல்வார்.இரத்தம் மட்டும் எடுப்பானே தவிர சோதனை செய்யத்தெரியாது.

முதலாளி போனிலேயே சொல்லிவிடுவார்.ஒருமணிநேரம் கழித்து வரச்சொல்லி பையன் முடிவை எழுதிக்கொடுத்துவிடுவான்.இருக்கவேண்டிய அளவு தெரிந்தால் போதுமானது.சில இடங்களில் பரிசோதனை செய்ய சோம்பேறித்தனம் வந்துவிடும்.நார்மலாக இருப்பதாக எழுதிக் கொடுப்பார்கள்.பரிசோதனை செய்ய வசதி இருக்காது.இருந்தாலும் அதற்கான பணம் மிச்சமாகிவிடும்.

ஒருவருக்கு கடுமையான இரத்தசோகை அறிகுறி கண்டு மருத்துவர் பரிந்துரை செய்தார்.ஹீமோகுளோபின் பரிசோதனைக்கு அனுப்பினால் நார்மல் என்று முடிவு கொடுத்தார்கள்.மருத்துவரால் நம்ப முடியவில்லை.அவரே நேரில் சென்று தன் முன்னால் பரிசோதனை செய்யுமாறு சொன்னார்.மூன்று கிராம் க்கு கீழேஇருந்தது.அவசியம் இரத்தம் ஏற்றாவிட்டால் ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும்.

தைராய்டு உள்ளிட்ட சில பரிசோதனைகள் உள்ளூரில் இருக்காது.வெளியில் நகரங்களுக்கு அனுப்பி முடிவைப்பெறவேண்டும்.அதற்கான பரிசோதனை செலவும் அதிகம்.சில நாட்கள் கழித்து இவர்களாகவே முடிவைக்கொடுப்பார்கள்.மின்னஞ்சலில் பெற்றதாக சொல்லிக் கொள்வார்கள்.பெயரளவில் உபகரணங்களை வைத்து செயல்படும் மையங்கள் இருக்கின்றன.காலாவதியான ரசாயனங்களைத் தூக்கி எறிய மனமில்லாமல் பயன்படுத்துபவர்கள் உண்டு.

சிலர் மருத்துவரிடம் செல்லாமலே இரத்தப்பரிசோதனைக்கு போய் நிற்பார்கள்.எச்.ஐ.வி போன்ற பரிசோதனைக்கு இது சரியான முடிவு.ஆனால் அரசு மருத்துவமனைக்குச்செல்லவேண்டும்.முறையற்ற வணிக நடைமுறைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.உயிர் காக்கும் விஷயமும் இதில் விதிவிலக்கல்ல! கொடுக்கும் பணத்திற்கு ரசீது கேட்டுப்பெறவேண்டும்.சில நிகழ்வுகளில் வழக்குத்தொடர கட்டாயம் தேவைப்படும்.யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் மிகவும் நல்லது.
-

Sunday, September 30, 2012

சோளம் –உணவும் ஊட்டச்சத்தும்


ஆனந்த விகடனில் ஆறாம்திணை படித்துக்கொண்டிருந்தேன்.சோளம் பற்றி படித்தவுடன் திடீரென்று நான் சிறுவனாகி விட்டேன்.சோளக்காட்டுக்கு பொம்மையை செய்து கொண்டிருக்கிறோம்.காய்ந்த புற்களை மனித உருவம் போல செய்து சட்டையையும்,முழுக்கால் சட்டையையும் அணிவிக்கிறோம்.காக்கை,குருவியெல்லாம் மனிதன் நிற்பதாக கருதி சோளம் தின்ன உள்ளே வராது.பறவைகளிலும் சில புத்திசாலிகள் இருக்கத்தானே செய்யும்? பொம்மை என்று தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து விடும்.மண்,கல் போன்றவற்றை வாரி இறைத்து துரத்தவேண்டும்.இந்த வேலையைச்செய்தால் சோளம் காய்ச்சி தருவதாக அம்மாவோ அப்பாவோ சொல்வார்கள்.

                      பால் ஏறிய பின்பு பச்சை சோளத்தை காயவைத்து உதிர்ப்பார்கள்.வெல்லமும் ஏலக்காயும் சேர்த்து காய்ச்சுவார்கள்.எப்போது வெந்துமுடியும் என்று மனம் தவிக்கும்.இருப்பதிலே கம்பீரமாக உயரமாக நிற்பது சோளப்பயிர்தான்.ஐப்பசி மாத அடைமழைக்குப் பிறகு அதிகமான வளர்ச்சி இருக்கும்.அதிக எரு போட்ட வயலாக இருந்தால் பத்தடி உயரத்தைத் தொடும்.ஆட்கள் தனியாக உள்ளே போக அஞ்சுவார்கள்.சரியாக வளராத சோளப்பயிர் கால்நடைகளுக்கு நல்ல தீவனம்.சோளத்தை அறுத்து மாட்டை பூட்டி மிதிக்கவிடுவார்கள்.களத்தில் வேலை செய்பவர்களுக்கு உடலெங்கும் அரிப்பெடுத்துவிடும்.இரவு குளிக்காமல் தூங்கப்போக முடியாது.
                       கிராமத்தில் மளிகை கடை வைத்திருந்தோம்.உடனே அளந்து போடுகிறமாதிரி கைக்கெட்டும் தூரத்தில் கேழ்வரகும் சோளமும் இருக்கும்.அதிகம் விற்பனையாவதும் இதுதான்.இவையிரண்டும் ஏழைகளின் முக்கிய உணவான கூழில் இருக்கும்.பெரும்பாலும் கேழ்வரகுக் கூழ் என்பது சோளமும் சேர்ந்த உணவுதான்.மாலையில் சோளத்தை உரலில் இடித்து சட்டியில் நொதிக்க வைப்பார்கள்.காலையில் கேழ்வரகு மாவுடன் சேர்த்துக்காய்ச்சினால் கூழ் தயாராகி விடும்.இன்றைய டீ,காபிக்கு பதிலாக இதைத்தான் குடித்து வந்தார்கள்.தண்ணீர் ஊற்றி கரைத்து குடிப்பார்கள்.மோரில் கலக்கியும் குடிப்பதுண்டு.கெட்டியான கூழுடன் குழம்பு சேர்த்து உண்பார்கள்.கீரை,சுண்டைக்காய் குழம்புகள் என்றால் கொஞ்சம் அதிகமாக உள்ளே போகும்.

                                 உடனடியாக உணவு தயார் செய்யவேண்டிய நிலை வருவதுண்டு.சோள மாவோ கேழ்வரகு மாவோ இருக்கும்.வெங்காயத்தையும்,மிளகாயையும் அரிந்து கொட்டி நீர் ஊற்றி பிசைந்து தோசைக்கல்லில் போட்டால் சுவையான உணவு தயார்.இட்லி தோசைக்கு அரிசி,உளுத்தம்பருப்புடன் சோளத்தையும் உடன் சேர்த்துக்கொள்வார்கள்.கேழ்வரகு மாவு இல்லாதபோது சோளமாவு மட்டுமே கொண்டு களி தயாரிப்பார்கள்.கீரைக்குழம்பு சேர்த்தால் சரிவிகித உணவு கிடைத்து விடாதா?
                                   சோளத்தில் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்புடன்,நார்ச்சத்து போன்றவற்றுடன் கால்சியம்,இரும்பு,உயிர்ச்சத்து பி (தயமின்,ரிஃபோபிளேவின்,நயாசின்) போன்றவை அடங்கியிருக்கிறது.இந்த ஆய்வெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து சொன்னதை நாம் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.நொதிக்க வைத்த சோளத்திலும் இதே சத்துக்கள்தான் இருக்குமா? லேசாக புளிக்கும் கூழில் வேறென்ன சத்துக்கள் தோன்றியிருக்கும்.இப்படித்தயாரித்த கூழை மட்டுமே தினமும் குடித்து வளர்ந்தவர்களும் ஆரோக்கியமாகவே இருந்தார்கள்.

                                    நம்முடைய பாரம்பர்ய உணவுகளில் அதன் தயாரிப்பு முறைகளுக்குப் பிறகு என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? யாராவது ஆய்வு செய்து சொன்னால் அதன் முக்கியத்துவம் கூடலாம்.மலிவான விலையில் ஆரோக்கியத்தை தரும் உணவுகளை இழந்து விட்டு அதிக விலை கொடுத்து குப்பையை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.ஒரு எலுமிச்சை பழரசம் தரும் குளிர்ச்சியும்,உடல்நலமும் கோக்,பெப்ஸியால் தரமுடியுமா? அப்புறம் ஏன் இந்த நிலை?
                                   விலை மலிவானதெல்லாம் தரமற்றது என்று ஒரு மனப்போக்கு இருந்து வருகிறது.விவசாய கூலிக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.எல்லோரும் படித்துவிட்டால் யார் விவசாயம் செய்வது? என்று ஒருவர் கேட்டார்.படித்துவிட்டால் விவசாயம் செய்யக்கூடாது என்று நாமே உருவாக்கிக் கொண்டோம்.தானியங்கள் விளைவித்து வீடு கொண்டுவர போதுமான கூலி ஆட்கள் தேவை.அதனால் விளைவிப்பதும் குறைந்து வருகிறது.நாம் வேர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.அதன் விளைவுதான் மருந்துக்கடைகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்.
-

Thursday, January 12, 2012

சோர்வாக இருக்கிறதா?


                               சில நேரங்களில் சோர்வாக இருக்கிறது.இரவு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் கூட சோர்வு ஏற்படும்.கடுமையான உடல் உழைப்பு,அலைச்சலுக்கு பின்பு சோர்வு வர வாய்ப்பிருக்கிறது.உடல் நலக்குறைபாடுகளில் இப்படி இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து உடல் சோர்வு,மூச்சு வாங்குதல்,தோல் வெளுத்து காணப்படுதல் போன்றவை இருந்தால் ரத்த சோகையாக இருக்கலாம்.இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இப்பிரச்சினைக்கு ஆளாகி சிரமப் படுகிறார்கள்.பிரசவம் தொடர்பான சிக்கல்களுக்கு ரத்த சோகை முக்கிய காரணமாக இருக்கிறது.
                                சுவாசித்தல் பணியில் பங்கேற்பது ஹீமோகுளோபின்.ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பதும்,கழிவை கொண்டுவருவதும் இதன் முக்கிய பணி.ஹீமோகுளோபின் குறைவையே ரத்தசோகை என்கிறோம்.உடல் இயக்கம் சீராக நடைபெறாமல் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறது.ஆண்களுக்கு 13.5 கிராமிற்கு மேலும்,பெண்களுக்கு 11.5 கிராமிற்கு மேலும் இருப்பது ஆரோக்கியமானது.ஆனால் பலருக்கு குறைவாகவே இருக்கிறது.குறிப்பாக பெண்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் கூட 10க்கு கீழ்தான் இருக்கிறது.
                                பரம்பரை உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும் சத்துக்குறைவு ஒரு முக்கிய காரணம்.இரும்புச்சத்து குறைபாடு,பி வைட்டமின் குறைபாடு போன்றவையே ரத்த சோகைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மட்டும் இரும்புச்சத்து,வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.மற்றவர்கள் இதைப்பற்றி தெரியாமலேயே இருந்துவிடுகிறார்கள்.அடிக்கடி சோர்ந்து போவதும்,உணவு காரணமாக கொஞ்சம் ஹீமோகுளோபின் கூடியதும் ஆறுதலாக உணர்வார்கள்.
                                  விழிப்புணர்வு இல்லாத நிலையே பெரும்பிரச்சினையாக இருக்கிறது.சரிவிகித உணவு இல்லாமல் இருப்பது நம்மிடையே சாதாரணம்.உணவை தேர்ந்தெடுக்க தெரியாமல் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்.இக்குறைபாட்டுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்.பலருக்கு இப்படி குறைபாடு இருப்பதே தெரியாது.இரும்புச்சத்தின் ,,வைட்டமின்களின் அவசியம் தெரிந்தவர்கள்,எந்தெந்த உணவு வகைகளில் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.தெரிந்தவர்கள் உணவு தயார் செய்யும் நபராக இருப்பதில்லை.
                                                                                  கிடைக்கும் உணவை சாப்பிடும் பழக்கம்தான் நமக்கு உண்டு.அதிக சதவீத வறுமையும்,சத்துக்குறைவும் இன்னும் இந்தியாவில் பிரச்சினையாக இருக்கிறது.பெண்களின் கல்வியறிவு,ஊட்டச்சத்து பற்றிய அறிவும் குறைவாக இருக்கிறது.தனக்கு இப்படி ஒரு குறைபாடு இருக்கிறது என்பதே பலர் அறிவதில்லை.நல்ல உடல்நலத்திற்கு ஹீமோகுளோபின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும்.நாள்தோறும் உணவு,சமையல் பட்டியலில் இரும்புச்சத்து,ஃபோலிக் அமிலம்,வைட்டமின்  போன்றவை நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

                                                                     பேரீச்சம்பழம்,வெல்லம்,இறைச்சி,பச்சை காய்கறிகள்,கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.சரியாக உடலில் சேர அஸ்கார்பிக் அமிலம் கொண்ட (விட்டமின்  சி) உணவுப்பொருள்களையும் சாப்பிடவேண்டும்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு ,கொய்யா போன்றவை.சைவ உணவுப் பழக்கம் உடையவர்ளுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.ஆறு மாதம் ஒருமுறையாவது குடல்புழுக்களை அகற்ற சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை காபி,தேநீர் அருந்துவது தவிர்க்க வேண்டும்.இவை இரும்புச்சத்து உள்ளிட்டவற்றை உடலில் சேர்வதை தடுக்கின்றன.

-

Wednesday, December 7, 2011

மாத்திரைகளும் மனிதர்களும்


பலசரக்கு கடைகளில்,காய்கறி கடைகளில் நிற்கும் மக்கள் கூட்ட்த்தை விட அலை மோதுகிறார்கள்.சமீப காலமாக மருந்துக்கடைகள் நிரம்பி வழிகின்றன.முன்பெல்லாம் மருத்துவமனை,மருத்துவர் அருகில் இருந்தால்தான் ஃபார்மஸி விற்பனை இருக்கும் என்று நம்பினார்கள்.இப்போது அப்படியில்லை.
                              தானாகவே மாத்திரை பெயர் சொல்லி வாங்குபவர்களும்,தொந்தரவை சொல்லி வாங்கிக் கொள்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.இது தொடர்பாக எனது முந்தைய பதிவுகள்  மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார் மற்றும் உடல்நலம்-உயிரைக்குடிக்கும் பழக்கங்கள். அலோபதி கடைகள் என்றில்லாமல் சித்தா,ஆயுர்வேத மருந்துகளும் சக்கைப்போடு போடுகின்றன.
                              எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.உறவினர் ஒருவருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை என்று மருத்துவரிடம் போனார்.அவரும் மாத்திரைகள் கொடுத்தார்.அப்புறம் மருத்துவரிடம் போகாமலே கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்.ஒரு கட்ட்த்தில் மாத்திரை இல்லாவிட்டால் தூக்கமில்லை என்ற நிலை வந்து விட்ட்து.
                               வீட்டில் இருப்பவர்கள் மிகத் தாமதமாகவே இதை அறிந்திருக்கிறார்கள்.மீண்டும் மருத்துவரிடம் அழைத்துப்போய் விஷயத்தைச்சொன்னால் பழைய மருந்து சீட்டு அல்லது மாத்திரை அட்டை ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.பரிந்துரை சீட்டு கிடைக்காவிட்டாலும் மாத்திரை அட்டையை கொண்டுபோய் காட்டினார்கள்.
                                மாத்திரையை பார்த்தவுடன் மருத்துவருக்கு புன்னகை.அது தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரை அல்ல! ஆனால் வலி நிவாரணி.உடலில் ஏதோ வலி இருப்பதாக சொன்னதால் இது தூக்கத்திற்கு என்று காட்டி அப்போதைக்கு கொடுத்துவிட்டார்.வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.
                               இப்படி இன்று நிறைய பேர் இருக்கலாம் என்று தோன்றுகிறது.தூக்கத்திற்கு என்றில்லாமல் உடல்வலி,வயிற்றில் அமிலம் சுரத்தல் என்று மாத்திரை போட்டால்தான் ஆகிறது என்று ஆகிவிட முடியும்.மாத்திரைகளுக்கு அடிமையான நிலைதான் இது.சில உடல் நலக்குறைவுகளுக்கு தொடர்ந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மனதளவில் இப்படி ஆகிவிடுவதுண்டு.
                                இம்மாதிரியான நிகழ்வுகளில் மாத்திரைகள்தான் மீண்டும் பரிந்துரைப்பார்கள்.படிக்காத ஆளாக இருந்தால் வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள்.விஷயம் தெரிந்த படித்தவராக இருந்தால் அதற்கும் மாத்திரை இருக்கிறது.சிலரை ஏமாற்ற முடியாது.அவர்களுக்கு ஆலோசனைதான் தீர்வு.
                                மருந்துக்கடைகளில் அலைமோதும் கூட்ட்த்தில் மேலே சொன்னவாறு இருக்கவும் வாய்ப்புள்ளது.நம் குடும்பத்திலோ,தெரிந்தவர்களோ யாரேனும் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.ஒரே மாத்திரையை மீண்டும் மீண்டும் நாமாகவே வாங்கிப் பயன்படுத்துவது பிரச்சினையை வளர்க்கும்.
-

Sunday, November 27, 2011

முடி கொட்டுகிறதா?


  எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!"  " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை.

வழுக்கை என்பது பெரும்பாலும்  பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம்.



இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்டை கொண்டு வருகிறது.ஏதேதோ நெருக்கடிகளால் சரியாகத் தூங்க முடியாத இரவுகளுக்கு அடுத்த நாள்களில் அதிகம் முடி கொட்டுவதை நீங்கள் பார்க்க முடியும்.


அடுத்ததாக அவரவர் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை உபயோகிப்பது.மருத்துவர் பரிந்துரையாக இருந்தால் நல்லது.அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதும்,நாம் பயன்படுத்துவது அப்போதைக்கு இல்லாவிட்டால் ஏதோவொன்றை வாங்கி பயன்படுத்துவதும் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இவற்றைப் போக்க நல்ல மருந்துகள் இருக்கின்றன.சில மருந்துகளும் முடியை பாதிக்கும்.

ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பு.இதெல்லாம் மருத்துவக் காரணங்கள்.நம்முடைய தவறுகளால் முடியை இழப்பது என்பது போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.


இரும்புச்சத்து பற்றாக்குறை முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.
-

Sunday, May 29, 2011

ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா?


  வாரத்துக்கு ஒருநாளேனும் வெளியில் சென்று சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.குடும்பத்தில் இருவரும் வேலையில் இருப்பவர்கள் என்றால் எல்லா நாளும் சமைப்பது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.இன்னொன்று சுவைக்காக ஒரு சேஞ்சுக்காக சாப்பிடுவது.எப்படியோ இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது.

                                                             நடுத்தரமான ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்த தந்தையிடம் அவரது குழந்தை " அப்பா கையெல்லாம் கருப்பாயிடுச்சி" என்றான் சாதாரணமாக! அப்பாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை."வீட்டில் போய் கழுவிக்கொள்ளலாம் வாடா" என்றார் .


                                                             பையன் கையெல்லாம் கருப்பாக காரணம் அவன் துடைத்த நியுஸ் பேப்பர்.அதில் உள்ள ஆபத்து தந்தைக்கு தெரியவில்லை.கையில் உள்ள காரீயம் மூளை வளர்ச்சியிலிருந்து ,நரம்பு மண்டலம்,உடலியக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது.

                                                             பெரும்பாலான உணவகங்களிலும் பழைய நியூஸ் பேப்பர்களை கையைத்துடைக்க கிழித்து வைத்திருக்கிறார்கள்.அதில் துடப்பவர்களே அதிகம்.சாப்பிட்டுவிட்டு கையை கழுவியவுடன் ஈரக்கையில் துடைப்பதால் வேதிப்பொருட்கள் உடலுக்கு செல்வதை தவிர்க்க முடியாது.

                                                             உணவகங்களில் கையத்துடைக்கத்தான் என்றில்லை.சாலையோரங்களில் ,பலகார கடைகளில் வடை,பஜ்ஜி,போண்டா உள்ளிட்ட உணவுப்போருட்களுக்கும் பழைய செய்தித்தாள்களையும்,சஞ்சிகைகளையுமே பயன்படுத்துகிறார்கள்.எண்ணையுடன் சூடாக இருப்பதால் அதிக காரீயத்தை உறிஞ்சி நம் உடலுக்குள் சேர்க்கிறது.

                                                            போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.கையைக்கழுவி விட்டு துடைக்காமல் உலர்த்துவதே சரியான முறை.பொதுமக்கள் நலன் கருதி அச்சிட்ட தாள்களை உணவு வைத்து வழங்கவும்,கையைத்துடைக்க உணவகங்களில் வைக்கவும் சுகாதாரத்துறை தடை செய்ய வேண்டும்.பல்வேறு உடல் நல பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

                                                             தற்போது மாம்பழ சீசன் .மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதை கண்டறிந்து டன் டன்னாக ஆங்காங்கே கொட்டி அழிக்கப்படுகிறது.விரைவாக பழுக்க வைத்து விற்று பணம் பார்ப்பதற்காக வியாபாரிகள் மக்கள் நலனை மறந்து விடுகிறார்கள்.

                                                            கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்கள் வயிற்றுப் பிரச்சினையை உடனடியாக கொண்டு வரும்.குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.பழங்கள் வாங்குபவர்கள் பழக்கப்பட்ட கடையிலேயே வாங்குவது நல்லது.இயற்கையாக பழுத்த பழங்களில் சீராக மஞ்சள் நிறம் இருக்காது.பலத்தின் சில பகுதிகள் பச்சை நிறத்தில் இருக்கும்.கல் வைத்து பழுக்க வைத்தால் இயல்பான ருசி இருக்காது.தெரியாத இடத்தில் வாங்கினால் முடிந்தவரை தோலை தவிர்த்து விடவும்.

கணவன் மனைவி ஜோக் ஒன்று.மனைவி கேட்டார் ,"டியர் இன்று என்னுடைய பிறந்த நாள் !நான் இதுவரை பார்க்காத இடத்துக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் " 

கணவர்:வா டியர் நாம கிச்சனுக்கு போகலாம்.

-

Tuesday, April 26, 2011

உடல் நலம் :உயிரைக் குடிக்கும் பழக்கங்கள்


                                                           படித்தவர்களுக்கு கிராம மக்கள் பரவாயில்லை என்று சில நேரங்களில் தோன்றும். கிராம மக்களிடம் உடல் நலன் குறித்த மூட பழக்கவழக்கங்கள் ஏராளம் இருந்ததுண்டு.சில இடங்களில் இன்னும்கூட இருக்கிறது.உடல்நலம் சரியில்லாவிட்டால் கடவுளிடம் போவது,சடங்குகள் செய்வது என்று ஆரம்பித்து விடுவார்கள்.இல்லாவிட்டால் பாட்டி வைத்தியம்.

                                                                             கல்வி அறிவற்று மரபு சார்ந்து செய்து வந்த விஷயம்.இவர்களை விட படித்தவர்களின் பழக்கங்கள் கொடூரமாக இருக்கிறது.தெரிந்த விஷயம்தான் .இன்னமும் பலர் கைவிடாத ஒன்று.ஒரு புத்திசாலி தனது குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று கடையில் சில மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.

                              காலையில் தூங்கி எழுந்த போது மனைவி அந்த தகவலை சொன்னார்.பையனுக்கு அம்மை போட்டிருக்கிறது.வீட்டில் விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.அம்மன் கோயிலுக்கு சென்றார்கள் .பக்தி அதிகமாகிவிட்டது.வீடெங்கும் பக்தி மணம்.அன்று மாலையே குழந்தை பேச்சுமூச்சில்லாமல் ஆகி விட்டது.மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள் .

                                பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதை அறிவித்தார்.மருத்துவர் அறிகுறிகளை பார்த்துவிட்டு விசாரித்ததில் தெரிய வந்த விஷயம்.- சிறுவனுக்கு உடலில் ஏற்பட்டது அம்மை அல்ல! கடையில் வாங்கி வந்த மாத்திரைகளால் ஏற்பட்ட ஒவ்வாமை (அலர்ஜி ).மாத்திரைகள் சிறுவன் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

                                 சிலருக்கு சில மாத்திரை ,மருந்துகள் உணவுப் பொருட்கள் ஒத்துக் கொள்ளாது.காலாவதியான மருந்துகளாலும் இத்தகைய இழப்புகள் நேரலாம்.உடனே மருந்தை நிறுத்தியிருந்தாலாவது உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.மாத்திரை கொடுப்பதைய்ம் நிறுத்தவில்லை.இன்னமும் பெட்டிக்கடைகளில் மாத்திரைகள் விற்கும் பழக்கமும் ,அதை வாங்கி செல்வோரும் குறையவே இல்லை.

                             தான் பணம் சம்பாதிப்பதற்காக உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.அதிலும் படித்தவர்கள் ஏதோ ஒரு மாத்திரை பெயரை தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.இன்னொரு பழக்கம் இருக்கிறது.சென்றமுறை உடல்வலி ,காய்ச்சலுக்காக மாத்திரை வாங்கி வந்த சீட்டு இருக்கிறது.இப்போது மனைவிக்கு உடல்வலி ,காய்ச்சல் என்றால் அந்த சீட்டை காட்டியே மாத்திரை வாங்கி வந்துவிடுவார்கள்.இதுவும் தவறுதான். 

                              அடுத்ததாக கர்ப்பிணிப்பெண்கள் .எந்த சூழலிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுய மருத்துவம் பேராபத்தில் முடியும்.பலருக்கு கருக்கலைந்து போவதற்கு காரணமே தெரிவதில்லை.கிராமப்புற பெண்கள் பலருக்கு இறந்து பிறத்தல்,முடமாக பிறத்தல் போன்றவற்றிற்கு இப்படிப்பட்ட சுய மருத்துவமும் காரணமாக இருக்கலாம் என்ற அனுமானம் இருக்கிறது.

                               யாருக்குமே இந்த பழக்கம் நல்லதல்ல !சோம்பேறித்தனமும்,சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனமும் ,அதி புத்திசாலித்தனமும் தான் இதற்கெல்லாம் காரணம்.உடல் நலனைத்தவிர முக்கியமானது எதுவும் இல்லை.அதை நாம் உணர்வதும்,மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் நல்லது.

                                                          
-