Showing posts with label stress. Show all posts
Showing posts with label stress. Show all posts

Thursday, September 19, 2013

பெண்ணுக்குத் தோல்வியென்றால் என்ன நடக்கும்?



பதிவைப்படித்த பின்பு ஒருவர் தொடர்பு கொண்டிருக்கிறார்.பெண்களுக்குக் காதல் தோல்வியென்றால் பிரச்சினை இல்லை.உடனே யாரையாவது பிடித்துவிடுகிறார்கள்.தற்கொலையெல்லாம் செய்து கொள்ளமாட்டார்கள்.இது என்னுடைய அனுபவம். என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும் அவர் விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஒருவேளை மீண்டும் அவர் முயற்சி செய்து வெற்றிக்காதலாக மாற்றியுமிருக்கலாம்.


காதல் தோல்வியில் உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகள் இருவருக்கும் இருக்கிறது.ஆனால் எதிர்கொள்ளும் விதம் இருவருக்கும் மாறுபடும்.காதல் தோல்வியென்பது பெண்ணுக்குக் குறைவுதான்.காதல் தோல்வியால் திருமணத்தை மறுத்து வாழும் பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.உண்மையில் ஆண் இன்னொரு காதலை உருவாக்குவது கொஞ்சம் கஷ்டம். பெண் உடனே இன்னொரு ஆணுடன் பழகுவது சாத்தியம்தான்.அதை உறுதியாக காதல் என்று சொல்லிவிடமுடியாது.

இன்னமும் நம் சமூகத்தில் அழகு ஒரு முக்கியமான விஷயம்.தோழிகளிடம் தன்னுடைய இமேஜ் குறையும்.சிலர் கேலியாகப் பார்க்கக்கூடும்.இன்னொரு ஆணுடன் நெருக்கமாக்க் காட்டிக்கொள்வதன் மூலம் பொறாமையை தூண்டலாம் என்பதும் ஒரு காரணம்.தான் ஒரு ஆணால் விரும்பப்படுகிறோம் என்ற எண்ணமே பெரும் ஆறுதலாகவும் இருக்கும்.இன்னும் காதலனுக்கு ஆகாதவனாக இருந்தால் சிறப்பு.

காதலன் சரியாக கவனிக்காத நிலையில் கூட இப்படி நடந்துகொள்வதுண்டு.அப்புறம் ஆண் அடித்துக்கொண்டு ஓடுவான்.பொறாமையால் உந்தப்பட்டு காதலை உறுதிப்படுத்துவான்.இம்மாதிரியான விஷயங்கள் கல்யாணத்துக்குப் பின்னர் பிரச்சினை ஆகிப்போனதும் உண்டு.இருவருக்கும் ஏதாவது பிரச்சினை என்றால் மனைவி அவனுக்கு போன் செய்து பேச ஆரம்பிப்பார்.அடிக்கடி தொடர்ந்து பிரச்சினையாக உருவெடுப்பதும் நடக்கும்.

நண்பர்களையே எதிரியாக்கவும் பெண்ணால் முடியும்.எதிரியாக இருப்பவர்களை நெருக்கமாக்கிக் கொள்ளலாம்.தோற்றுப்போகும் சூழ்நிலை வரும்போது அல்லது தோல்விக்குப்பிறகு இது நடக்கலாம்.மனதின் தற்காப்பு பற்றி முந்தைய பதிவொன்றில் சொல்லியிருந்தேன்.அவனுக்கு ஆகாதவனுடன் பழகுவதால்தான் தன்னைப்பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம்.உடனிருப்பவர்களை நம்பவைத்து தனது சுயமதிப்பை அதிகரித்துக்கொள்ள இது ஒரு வழி.


அதிகாரி ஒருவர் அந்தப்பெண்ணிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்.அவர் காதல் பற்றி எதுவும் பேசவில்லை.ஆனால் தோழிகளிடம் அது காதல்தான் என்று சொல்லிக்கொண்டார்.வேறு என்னத்துக்கு அடிக்கடி வந்து பேசவேண்டும்? ஆனால் காலங்கள் கழிந்த பிறகும் அவர் எதுவும் சொல்லவில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் சிரித்துசிரித்து பேச ஆரம்பித்தார். அவர் அடிக்கடி சரியாக பணிபுரியாமல் அதிகாரியால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்.

அதிகாரி அவரை பாராட்டுவது எப்போதும் சாத்தியமில்லை.அவரைத்திட்டும்போது அந்தப்பெண் தனக்குள் சிரித்துக்கொள்வார்.அவரது தோழிகளில் சிலரும்தான்.உண்மையில்லாவிட்டாலும் தன்னுடன் பழகுவதால்தான் அதிகாரி திட்டுகிறார் என்று சொல்லிக்கொள்வார்.ஆமாம், மனம் அதிக துயரத்தால் பாதிப்புக்குள்ளாகும் சமயங்களில் தன்னிச்சையாக எண்ணங்களை உருவாக்குகிறது.
-

Monday, September 2, 2013

உறவுகளை சிதைக்கும் பெட்ரோல்குண்டு .

சிறு வயது முதலே அவர்கள் நண்பர்கள்.இப்போது  வேறுவேறு ஊர்களில் இருக்கிறார்கள்.நேரில் சந்திப்பது தொடர்பாக ஒருவர் தொலைபேசியில்  தொடர்பு கொண்டார்.அழைப்பை எடுக்கவேயில்லை.தொடர்ந்து முயற்சி செய்ய எரிச்சலாக இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்து விட்டார்.நண்பர்கள் என்றில்லை,தம்பதிகள்,உறவினர்கள் என்று பலருக்கும் இத்தகைய அனுபவம் நிகழமுடியும்.அலுவலகப் பிரச்சினைகள் வீட்டில்,நண்பர்களிடம் எதிரொலிப்பது,வீட்டுப்பிரச்சினைகள் வெளியிடங்களில் கொட்டப்படுவது சாதாரணமாக நிகழ்கிறது.

மன அழுத்தம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயம்.பல்வேறு சூழலில் மனதுக்கு விரும்பாத செயல்களை செய்ய நேரிடுகிறது.எதிர்பார்ப்புக்கு மாறான சம்பவங்கள்,வாழ்வில் ஏற்படும் மாற்றம்,திட்டமிடாத வாழ்க்கைமுறை,புரிதலற்ற  டென்சன் உள்ள மனிதர்கள் என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன்.காரணங்கள்  ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதைப் போலவே அவற்றை சமாளிக்கும் விதத்திலும் வேற்றுமை இருக்கும்.சமாளிக்கும் திறனற்ற நிலையில் பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

உடலில்,மனதில்,நடத்தையில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.உடலில் வலிகள்,இதயம் பாதிக்கபபடுதல்,சர்க்கரை அளவில் மாற்றம்,வயிற்றுப்பிரச்சினைகள்(உணவு செரித்தலில் பிரச்சினை,இரைப்பைப் புண்,பசியின்மை போன்றவை),பாலியல் வாழ்க்கையில் ஆர்வமில்லாத நிலை போன்றவை இருக்கும்.ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலும் பலவீனமடைகிறது.

எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை,கவலை ஒத்துழைக்க மறுப்பது,எரிச்சலான மனநிலை,தூக்கமின்மை,அதிக அளவு மது,புகை பிடித்தல் என்று நடத்தையிலும் விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்துகின்றன.தம்பதிகளிடையே பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.உறவுகளை சிதைக்கும் பெட்ரோல் குண்டாக மன இறுக்கம் அமைந்துவிடுகிறது.

மனதளவில் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்வதுதான் முதல்படி.பலர் இதை உணராமல் நடந்து கொள்வதே பிரச்சினையைக் கூட்டிவிடுகிறது.மற்றவர்கள் நம்மிடம் எரிச்சலாக நடந்து கொள்ளும்போதும் இப்படி நாம் புரிந்து கொள்ள முடியும்.மனம் அமைதியிழக்கும் நேரங்களில் யோகா,தியானம்,பிரணாயாமம் போன்றவை பெருமளவு உதவும்.ஆனால் முறையாகக்  கற்றுக்கொள்ளாமல் முயற்சி செய்யக்கூடாது.

இவற்றைத்தவிர எளிய மூச்சுப்பயிற்சியும் பெருமளவு பலனளிக்கிறது.பிரச்சினையான நேரங்களில்  நரம்பு மண்டல செயல்பாடு காரணமாக சரியான சுவாசம் இருக்காது.வேகமாக,உடல் முழுக்க ஆக்சிஜனை பெற முடியாத நிலை இருக்கும்.இந்நிலையை மாற்ற மூச்சுப்பயிற்சி உதவும்.எந்த இடத்திலும் இளைப்பாறிக் கொள்ள முடியும்.இடது மூக்கை மூடிக்கொண்டு வலது மூக்கில் பத்து எண்ணிக்கை வரை மூச்சை உள்ளிழுக்கவேண்டும்.இடது மூக்கு வழியாக பத்து எண்ணிக்கை வரை எண்ணி வெளியே விட வேண்டும்.இதே போல மாறிமாறி பதினைந்து நிமிடம் செய்யலாம்.

அமர்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ வசதியான நிலையில் மேற்கொள்ளலாம்.நல்ல விஷயங்களை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும்.ஆட்டோ சஜஷன்  என்று சொல்வார்களே அந்த மாதிரிதான்.சீரான சுவாசம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.சமாளிக்கும் திறனை அதிகப்படுத்தும்.உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்.
-

Friday, June 14, 2013

உணர்ச்சிகளை வெளியே கொட்டுங்கள் .

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும்."படபடவென்று பேசுபவனை நம்பலாம்,உம்மென்று இருப்பவனை நம்பமுடியாது."ஆமாம்.படபடவென்று பேசுபவர் வெளியே கொட்டிவிடுகிறார்.அங்கே எதுவுமில்லை.அவர் தனது கருத்தை ஒளித்துவைக்கவில்லை.அவர் யார் என்று நமக்கு புரிந்துவிடுகிறது.நமக்கு அவர்மீது சந்தேகமோ கலக்கமோ இல்லை.அவரை நம்புவதில் சிரமம் இல்லை.அங்கே உள்ளே எதுவும் இல்லை!?என்பது நமக்குத்  தெரிந்துவிடுகிறது.பேசாமல் இருப்பவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரிவதில்லை.நம்மைப் பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.அவர் ஒரு புதிராக தெரிகிறார்.ஒருவேளை காத்திருந்து தாக்கவும் செய்யலாம்.நாம் சஞ்சலப்படுகிறோம்.புறக்கணிக்கத் தயாராகிறோம்.

குட்டீஸ் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சி சன் டி.வி.யில் வந்து கொண்டிருக்கிறது.இமான் அண்ணாச்சி தொகுத்து வசங்குகிறார்.பையன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறான்.மட்டுமரியாதை இல்லாமல் பேசுவது என்று சொல்வோமில்லையா? அப்படி பேசுகிறான்.பக்கத்தில் இருக்கும் பாப்பா பெரியவர்களை அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறாள்.அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி விட்டாள்.மற்ற இரண்டு சிறுமிகள் எதையும் பேசவில்லை.அடுத்து இமான் அண்ணாச்சி கேட்கிறார்.அந்தப் பையனுக்கு கிப்ட் தரலாமா? வேண்டாமா? பேசாமல் இருந்த சிறுமிகள் தரவேண்டாம் என்கிறார்கள்.கண்டித்துப் பேசிய சிறுமி கிப்ட் தரலாம் என்கிறார்.ஏனெனில் அந்தச் சிறுமியின் கோபம் வெளியேறிவிட்டது.உணர்ச்சி உள்ளே தங்கவில்லை.

கோபம்,கவலை உள்ளிட்ட உணர்ச்சிகளை உள்ளேயே தங்க விடுவது நோய்க்கு வழிவகுக்கும்.இம்மாதிரி சூழ்நிலைகளில் யாரிடமாவது பகிர்ந்து கொள்வதே சரியானது.நம்மீது அக்கறை உள்ள நண்பர்கள் இருந்தால் நல்லது.அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் நேரமில்லை.அவரவர் குடும்பத்தை கவனிக்கவும்,குழந்தை களிடம்  பேசுவதற்கும் கூட முடியவில்லை.சலித்துக் கொள்ளும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன்.மேலும் இது மன அழுத்த யுகம்.அதனால் நாம் காமெடியை மட்டுமே வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.வலிகளை,புலம்பலை காது கொடுத்துக் கேட்க பலரும் விரும்ப மாட்டார்கள்.

நாம் 'ரிசர்வ் டைப்' என்று சிலரை சொல்லிக் கொண்டிருப்போம்.அதிகம் பேச மாட்டார்கள்.அவசியம் இல்லை என்பதாலோ அல்லது கூச்சத்தின் காரணமாகவோ பேசாமல் இருக்கலாம்.மேலே சொன்ன உம்மென்று இருப்பவர்கள் வகையைச் சார்ந்தவர்கள்.தவிர எல்லா சூழ்நிலைகளிலும் நம்மால் நமது உணர்ச்சியை வெளிப்படுத்திவிட முடியாது.உதாரணமாக அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் வெளிப்படுத்திவிட முடியாது.சில நேரங்களில்?! வீட்டிலும் கூட பேசிவிடமுடியாது.உணர்ச்சிகளை காகிதத்தில் கொட்டுவது நல்ல வழி.எழுதிவிட்டு கிழித்துப் போட்டுவிட்டால் கூட மனம் லேசாவதை உணர முடியும்.நாட்குறிப்பு எழுதலாம்.இப்போது வலைப்பதிவு ஆரம்பித்து எழுதிவிட முடியும்.

-

Monday, November 28, 2011

டென்ஷனைக்குறைக்கலாம் வாருங்கள்


                                                                  டென்ஷனா இருக்கு சார்! பெரும்பாலும் குறித்த நேரத்தில் எதிர்பார்த்த ஒன்று நடக்காதபோது,பணியை முடிக்க முடியாத நிலையில் புலம்புவார்கள்.எனக்கு ஒருவரை தெரியும்.அலுவலகம் செல்லும் வழியில் யாரைப்பார்த்தாலும் விடமாட்டார்.மனிதருக்கு பேசுவதில் அப்படி ஒரு பைத்தியம்.தெரிந்தவர்கள் தவிர்க்கப் பார்த்தாலும் விடமாட்டார்.எதிரில் வந்தவர் நேரம் ஆகிறதென்று கிளம்பிப் போன பின்னர் மணி பார்த்து வண்டியை முறுக்குவார்.
                                                                                               இதுவரை மனிதர்கள் பாதிக்கபடவில்லை.ஆனால் ஒருமுறை நாய்மீது மோதி விபத்து.எப்போதும் கொஞ்ச நேரம் தாமதமாக பணிக்கு வருவது அவருக்கு வழக்கமாகிவிட்ட்து.மதியம் சாப்பிட உட்கார்ந்தாலும் பேசிக்கொண்டே இருப்பார்.மாலை வீடு திரும்பவும் நேரமாகும்.குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது.
                              நேர நிர்வாகம் என்பது உற்பத்தி துறையில் முக்கியமான விஷயம்.நாம் தனிமனிதன் நேரத்தை விழுங்கும் பழக்கங்களை மட்டும் பேசலாம்.மேலே குறிப்பிட்டுள்ள மனிதரைப்போல பலரும் சிக்கிக் கொள்கிறார்கள்.மிக அவசியமில்லாத விஷயங்களில் நேரத்தை செலவழிப்பதே பெரும்பாலான தொல்லைகளுக்கு காரணமாக இருக்கிறது.
                               வழியில் தெரிந்தவர்களை பார்த்தால் குறைவான பேச்சோ அல்லது புன்னகை மட்டுமோ போதுமானதாக இருக்கலாம்.இதனால் வேகமாக செல்வது தவிர்க்கப்பட்டு விபத்துகளை தவிர்க்கலாம்.மேலதிகாரியிடம் திட்டு வாங்கத் தேவையில்லை.டென்ஷன் இல்லை.வேலையையும் சீக்கிரம் தொடங்கி நேரத்துக்கு முடிக்க முடியும்.
                               மனைவி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் உண்டு.அவர்களில் அதிகம் இந்த மாதிரி முக்கியமில்லாதவை நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்.சிலர் உண்மையில் கடுமையான வேலைச்சுமையில் இருப்பார்கள்.அவர்கள் பல வேலைகளையும் பட்டியல் போட்டு செயல்படலாம்.முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை தரலாம்.
                                                                     மின் கட்டணம் செலுத்த இறுதி தேதிக்கு நான்கு நாட்கள் இருக்கும்.ஒரு வேலையை இன்று மாலையுடன் முடிக்கவேண்டி இருக்கும்.சிலர் மின் கட்டணம் செலுத்த போய்விட்டு டென்ஷனுடன் இரவுவரை வேலை செய்து கொண்டிருப்பார்கள்.எதை முன்னர் செய்யவேண்டும் என்று வரிசைப்படுத்தி வைத்து செய்யலாம்.
                              குறித்த நேரத்தில் ஒரு வேலையை செய்யமுடியாவிட்டால் எரிச்சல்,கோபம்,சலிப்பு என்று மனநிலையில் மாற்றம் வந்துவிடுகிறது.நாம் சரியாக திட்டமிடாவிட்டால் சரியாக செய்பவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதும் நடக்கும்.மற்றவர்கள் வந்து உதவ வேண்டுமென்று நினைப்போம்.தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் வழி இது.
                               சரியாக நேரத்தை திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கையும் எளிது.டென்ஷனும் குறைவு.குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற குறைபாடும் நீங்கும்.போனால் கிடைக்காது,பொழுது விடிஞ்சால் சிக்காதுஎன்பார்கள்.அவசியமற்ற பேச்சுகளுக்கு நேரத்தை குறைத்து,திட்டமிட்டு செயல்பட்டால் டென்ஷன் போயே போச்சு!பெரும்பாலான டென்ஷன் நம்மால் தடுக்கமுடியும்.நேரத்தை சரியாக மேலாண்மை செய்வதும் ஒரு முக்கிய வழி.
-

Sunday, November 27, 2011

முடி கொட்டுகிறதா?


  எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!"  " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை.

வழுக்கை என்பது பெரும்பாலும்  பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம்.



இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்டை கொண்டு வருகிறது.ஏதேதோ நெருக்கடிகளால் சரியாகத் தூங்க முடியாத இரவுகளுக்கு அடுத்த நாள்களில் அதிகம் முடி கொட்டுவதை நீங்கள் பார்க்க முடியும்.


அடுத்ததாக அவரவர் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை உபயோகிப்பது.மருத்துவர் பரிந்துரையாக இருந்தால் நல்லது.அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதும்,நாம் பயன்படுத்துவது அப்போதைக்கு இல்லாவிட்டால் ஏதோவொன்றை வாங்கி பயன்படுத்துவதும் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இவற்றைப் போக்க நல்ல மருந்துகள் இருக்கின்றன.சில மருந்துகளும் முடியை பாதிக்கும்.

ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பு.இதெல்லாம் மருத்துவக் காரணங்கள்.நம்முடைய தவறுகளால் முடியை இழப்பது என்பது போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.


இரும்புச்சத்து பற்றாக்குறை முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.
-

Wednesday, November 16, 2011

மனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?

   எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம்.ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது.எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும்.மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும்.இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும்.சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது.இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.இவர்களுக்கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன.அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள்.அவை 


எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)



நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறார்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள்.

சுய மதிப்பு .(self esteem)


நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.


கடுமையாக உணர்வதில்லை.(sense of control)


பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை.கடிவாளத்தை கையில் வைத்திருக்கிறார்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக்கழிக்கப் படுவதில்லை.


நல்லதே நடக்கும் (optimism)


தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோக்குகிறார்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.



நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)


அவர் நேர்மறையாக சிந்திக்கிறார்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார்.


                                                                                                                மேலே சொல்லப்பட்டவை நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள சொல்லப்பட்டவைதான்.இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க்கவும்,இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

-

Friday, October 28, 2011

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

நமக்கு பழக்கமில்லாத எதையாவது செய்யவேண்டிய நிலை வந்தால் பலருக்கு படபடக்கும்.சில நேரங்களில் நான்கு பேர் முன்னால் பேசுவது கூட நெஞ்சு அடித்துக்கொள்ளும்.நேர்முகத்தேர்வுக்கு செல்வது போன்றவற்றைக்கூட உதாரணமாக சொல்ல்லாம்.மனதில் இறுக்கம் ஏற்பட்டு உடலிலும் விளைவுகள் தெரியும்.சிலருக்கு கை நடுங்கும்.மனசு போராடும்.குறிப்பிட்ட நேரத்தில் சில சரியாகப்போய்விடும்.ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டும் என்றால் அறைகுறையாக பேசிவிட்ட கொஞ்ச நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும்.
                                 தொடர்ந்து சில காலங்கள் மனமும் உடலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் உண்டு.சில விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய பழகிவிடும்.நம்மை மிரட்டும் விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் மனம் அமைதியாகிவிடும்.கிராமத்தில் படித்த பலருக்கு ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய பிரச்சினை.அது ஒரு பெரிய அறிவாளியை காட்டுவது போல நினைத்துக் கொள்பவர்கள் உண்டு.
                                இன்றும் அரசாங்க கடிதங்கள் பலவும் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள்.வீட்டில் புத்தகம் வாங்கி படிப்பார்கள்.ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள்.ஆனால் வேறுவழியே இல்லை.ஒருவருடன் உரையாட வேண்டும்,அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த மொழியிலேயே சிந்திப்பது எளிதாக இருக்கும்.
                                இம்மாதிரி சூழ்நிலைகளில் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலைதான் பிரச்சினை.சரியாக செய்யத் தெரிந்தாலும் முடியாமல் போய்விடுகிறது.தவறாக போய்விட்டால் நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே ஒட்டு மொத்தமாக வாய்ப்புகளை தவற விடுபவர்கள் அதிகம்.சமாளிக்கும் திறன் மனதுக்கே இருந்தாலும் சிலரால் முடியாமல் போய்விடுகிறது.தன்னம்பிக்கை குறைவும் ஒரு காரணம்.
                                 எப்போதும் எல்லோராலும் உயர்வாகவே கருதப்படவேண்டும்.அத்தனை பேரும் தன்னை பெருமையாக நினைக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிரச்சினை.அதிகம் அடிபடாதவர்களுக்கு மனதில் இறுக்கம் அதிகமாகும்.வெளியே தலைகாட்டாமல் உள்ளே இழுத்துக்கொள்ளவே விரும்புவார்கள்.ஆனால் ஆசையும் இருக்கும்.ஆங்கிலம் பேசும் ஆசை இருக்கிறது.ஆனால் முடியவில்லை.
                                 தேவை தன்னம்பிக்கைதான்.அது மட்டுமில்லாமல் நல்ல எண்ணங்களும்கூட! பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும்.உளவியலாளர்கள் பலரும் இதை உறுதி செய்கிறார்கள்.நல்ல எண்ணங்களுடன் இருக்கும்போது நமக்கே நம் மீது மதிப்பும் இருக்கும்.
                                 சுய மதிப்பு இருக்கும்போது நாம் செயல்களை செய்ய தயங்குவதில்லை.தயக்கத்தை விட்டுவிட்டாலே நமக்கு வெற்றி எளிது.ஆங்கிலம் என்ன எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்.பேசலாம்.அறிவு பெறலாம்.வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இவை முக்கியமானவை.தயக்கமும்,கலக்கமும்தான் நம்மை தோற்கடிக்கின்றன.
-

Saturday, July 23, 2011

காபி குடிப்பீங்களா?

                                 கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அது.பேராசிரியர் ஒருவரது வீட்டில் கூடினார்கள்.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தார்கள்.தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.கிட்ட்த்தட்ட எல்லோரும் முணுமுணுத்தார்கள்.அவர்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்கள்.வாழ்க்கை எளிதாக இல்லை.

                                  வேலை குடும்பம் என்று மனதில் ஏற்படும் இறுக்கத்தையும்,வலியையும் குறிப்பிட்டார்கள்.டென்ஷன்,டென்ஷன் என்று குரல் கொடுத்தார்கள்.கல்லூரி வாழ்க்கை போன்ற வசந்தகாலத்தை அனுபவிக்கவே முடியவில்லை.இன்றைய அவசர வாழ்வின் பரிமாணங்களை பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்த்து.பேராசிரியர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

                                  மனதளவில் பழைய மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு காபி தரவேண்டுமென்று முடிவு செய்து அவரே தயாரிக்க கிளம்பினார்.மற்றவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தார்கள்.பேராசிரியர் காபி தயாரித்து முடித்துவிட்டார்.வந்திருக்கும் அனைவருக்கும் வீட்டிலிருக்கும் காபி கப்,தம்ளர்கள் போதாது.

                                   பேப்பர் கப்போ,பிளாஸ்டிக் கப்போ வாங்கிவரலாமென்றால் கடையும் வெகு தூரம்.வீட்டில் இருப்பதை வைத்தே சமாளித்து விடலாமென்று முடிவு செய்து விட்டார்.பீரோவில் இரண்டு வெள்ளித்தம்ளர்கள் இருந்த்து.சில கண்ணாடி தம்ளர்கள்,சில்வர்,மண் குவளை என்று விதம்விதமான கப்களையும்,தம்ளர்களையும் பிடித்து விட்டார்.ஒரு வழியாக வந்திருக்கும் அனைவருக்கும் ஏற்பாடு செய்தாகிவிட்ட்து.

                                   காபியை கப்களிலும்,தம்ளர்களிலும் அவரே ஊற்றி அனைவரையும் எடுத்துக்கொள்ளச்சொன்னார்.மாணவர்களும் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டார்கள்.சிலர் காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.அதனால் சில கப்களும்,தம்ளர்கள் மட்டும் டேபிளிலேயே இருந்த்து.டேபிளில் மீதமிருக்கும் கப்களை கவனியுங்கள்’’ என்றார் பேராசிரியர்.

                                   யாரும் எடுக்காத மிச்சமிருக்கும் குவளைகள் விலை குறைவானவை மற்றும் அழகில்லாதவை.பேராசிரியர் பேசினார்.நான் கவனித்துக்கொண்டிருந்தேன்,முதலில் எடுக்க வந்தவர்கள் அதிக விலையுள்ள கப்களையும்,அழகானவற்றையும் எடுத்தார்கள்.அனைவரது கையும் அவற்றுக்குத்தான் நீண்டன! ஏன்? நீங்கள் குடிக்கப்போவது காபியத்தானே? கப்பையோ,தம்ளரையோ இல்லையே?

                                  பெரும்பாலானவர்களுக்கு வரும் மன இறுக்கமும்,கவலைகளும் இந்த வகைதான்.காபியை மறந்து விட்டு கப்பை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு வறட்டு கௌவரவத்துக்காக அவசியமில்லாத்தை தேடி டென்ஷன் ஆகிறீர்கள்.தூக்கம்கெட்டு தவிக்கிறீர்கள்.அப்புறம் மன அழுத்தம்,கவலை என்று போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

                                   எளிதாக புரியும் விஷயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நாமும் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம்.கப்பை விட்டுவிட்டு நாம் காபியை கவனிப்போம்.(எனக்கு மெயிலில் வந்த்து)
-