Tuesday, December 23, 2014

நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு

நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக பணம் கொடுக்க ஆள் வேண்டும்.பெண் கொடுப்போர் எடுப்போர் எல்லாம் நாலு பேரை விசாரிக்காமல் முடிவு செய்ய மாட்டார்கள்.யாரும் எனக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்து  விட முடியாது.


பணக்காரர்களுக்கு பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் வரும்.தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம்.அலுவலகத்தில் சம நிலையில் உள்ளவர்கள்,கீழ்நிலையில் உள்ளவர்களைத்தான் தனிமைப்படுத்த முடியும்.அதிகாரியை தனிமைப்படுத்த  முடியாது.பணமும் அதிகாரமும் எல்லாவற்றையும் கொண்டுவந்து விடுகிறது. 

நடுத்தர வர்க்கத்துக்கு உறவுகள் வேண்டும்.அவர்களுடைய பலமும் அதுதான்.என் நண்பன் ஒருவனுக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது.அவனுக்கு வேறு  கனவுகள் இருந்தன.சொந்தக்காரப் பெண்ணை கல்யாணம் முடிக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே இரண்டு வீட்டிலும் முடிவு செய்து விட்டிருந்தார்கள்.அவன் தீர்மானமாக மறுத்துப் பார்த்தான்.


ஒரு நாள் அவனுடைய உறவினர்கள் அத்தனைபேரும் கூடி விட்டார்கள்." நாங்களெல்லாம் உனக்கு வேண்டாம் என்றால் உன் விருப்பம் போல செய்!'' என்றார்கள்.சொத்து பத்து கிடைக்காது என்றார்கள்.அடுத்து என்ன வேலை செய்ய வேண்டுமென்று அவர்களே முடிவு செய்தார்கள்.அவனது திறமைகளையும் கனவுகளையும் அந்த சமூகம் தின்று விட்டது.

மனிதன் சமூக விலங்கு என்று அரிஸ்டாட்டில் சொன்னார்.மனிதன் இயல்பு தவறும்போது இடித்துரைப்பது சமூகம்தான்.சமூகக் கட்டுப்பாடுகளுக்குப்  பொருந்திப் போக வேண்டும். திட்டுவது,கேவலமாகப் பேசுவது,தனிமைப்படுத்துவது என்று தண்டனைகள் கிடைக்கும்.சட்டம் தன் கடமையைச் செய்யக்கூடும். 


எப்போதோ படித்த கதை ஒன்று .விட்டில் பூச்சிகள் விளக்கைத் தேடிச்சென்று சிக்கி மடிந்து போகும்.ஒரு விட்டில் பூச்சி மட்டும் வானத்தில் உள்ள நிலாவை நோக்கி பறக்க ஆரம்பித்தது.உடனிருக்கும் அத்தனை பூச்சிகளும் தடுத்தன.அந்த நாலுபேரை(?) மதிக்காமல் பறக்க ஆரம்பித்தது.மேலேமேலே உற்சாகத்துடன் பறந்து சென்றது.நிலவை அடைய முடியாவிட்டாலும் அதிக சந்தோஷத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தது.

பூச்சிக்கு சரி மனிதனுக்கு சாத்தியமா?நாலு பேரை ஒதுக்கிவிட்டு முன்னேறிச்செல்வது அத்தனை எளிதா?
-

Monday, December 22, 2014

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க

நண்பனைப்பார்க்கப் பாவமாக இருந்தது.கிட்டத்தட்ட முழு உடல்நலப் பரிசோதனை செய்துவிட்டிருந்தான்.அவனுக்கு எந்த நோயும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.ஆனால் இன்னமும் அவன் அமைதியடையவில்லை." இன்னொரு மருத்துவரிடம் பரிசோதனை செய்யலாமா? என்று கேட்டான்."என்ன ஆள் ரொம்ப டல்லா இருக்கீங்க" என்று சிலர் கேட்ட பின்பு ஏற்பட்ட பிரச்சினை இது.

பார்க்கிற நாலு பேர் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.வீடு கட்டும் அலைச்சலில் சரியாக சவரம் கூட செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.அந்த நான்கு பேருக்கு டல்லாக இருப்பதாகத் தோன்றுவது சாத்தியம்தான்.நம்மைச் சுற்றி உள்ள நான்கு பேர் தான் பலரது வாழ்க்கையையே தீர்மானிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

நடுத்தரக் குடும்பங்கள் எப்போதும் அந்த நான்கு பேரை நெஞ்சில் இருத்தியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.''பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க?'' நாலு பேர் என்ன நினைப்பாங்க?'' என்பது பிரபலமான வார்த்தைகள்.ஒருவர்  அணியும் உடையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.சாப்பிடும் சாப்பாடு,நடத்தை எல்லாவற்றிலும் சமூகத்தின் பங்கு இருக்கிறது.

ஒருவரது மகனோ,மகளோ என்ன படிக்கவேண்டும் என்பதை அண்டை வீட்டினரோ உறவினர்களோ தீர்மானிக்கிறார்கள்.சுயமாக சிந்திப்பவனை சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.ஒரு செயலைத்தொடங்கும் முன்பு இதற்காகவே பலரிடம் கருத்துக்கேட்பவர்களைப் பார்க்கலாம்.யாராவது ஒருவர் எதிராக பேசிவிட்டாலே நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இன்னும் சிலர் வசதியாக மற்றவர்கள் செயது கொண்டிருப்பதை நகல் எடுப்பார்கள்.ஈயடிச்சான் காப்பி என்பது போல! நண்பர் ஒருவர் விலை உயர்ந்த துணி எடுத்து வந்தார்.இதுவரை அவ்வளவு விலையில் உடை எடுத்து அவருக்குப் பழக்கமில்லை.அலுவலகத்தில் ஒருவர் '' உங்களுக்கு இது நல்லா இல்ல சார்!'' என்று சொல்லிவிட்டார்.ஆசையாக எடுத்த உடையை அவரது தம்பிக்குக் கொடுத்து விட்டார்.

அவர் பொறாமையால் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நான்கு பேரை நினைத்து நினைத்து நல்ல வாழ்க்கையை இழந்தவர்கள் இருக்கிறார்கள்.உடன் இருக்கும் நண்பர்களின் பொறாமையால் நல்ல காதலியை இழந்த ஆண்கள் இருக்கிறார்கள்.காதலனை விட்டுவிட்டுப் புலம்புபவர்கள் இருக்கிறார்கள்.

நம்மை மற்றவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு இல்லாமலே சிக்கிக் கொண்டிருக்கிறோம்.நாம் நான்கு பேர் சொல்வதை புறக்கணிக்க வேண்டுமா? மற்றவர்களை ஒதுக்கிவிட்டு தனியாக வாழ முடியுமா? இறுதியில் சுமந்து செல்லக்கூட நாலுபேர் வேண்டுமே? -தொடர்ச்சி அடுத்த பதிவில்.
-

Wednesday, September 10, 2014

யார்கிட்டேயாவது பேசுனாவே சந்தேகப்படறார்ஆத்திரமும் வேதனையும் தொனிக்கும் குரலில் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.அவர் அனுபவித்துக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் உணர்ச்சிகள் நிஜம். ``அவருக்கு சந்தேகப்புத்தி சார்!யார்கிட்டயாவது பேசுனாவே சந்தேகப்படறார்``.நான் புன்னகைத்திருக்கவேண்டும்!.இருவரும் திருமணமாகாதவர்கள்.ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.

என்னுடைய கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ``அவர் அப்படி நினைப்பதாக உங்களுக்கு யார் சொன்னது?``.அவர் எதுவும் பேசாமல் கிளம்பிப் போய்விட்டார்.ஆண் பெண் நட்பு பற்றிய எண்ணங்கள் உருவானாலும் அந்தப்பெண்ணின் கதை கொஞ்சம் சிக்கலான விஷயம்.அந்தப்பையனை அவர் விரும்புகிறார்.பையனிடமிருந்து எதிர்பார்த்த எதிர்வினை இல்லை.

இன்னொரு பையனுடன் நெருங்கிப் பழகுவதன் மூலம் அவனது எண்ணத்தை அறிய முயற்சி செய்தார்.அவன் சாதாரணமாக பேசுவதை,நடப்பதை, நிற்பதையெல்லாம் தனக்கு சாதகமான விஷயங்களாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வார்.பல மாதங்கள் இப்படிச்செய்து பார்த்துவிட்டு ``அவன் சந்தேகப்படுவதாக அவருக்குத் தோன்றியது.இந்த எண்ணத்தை மனம் தன்னிச்சையாக உருவாக்குகிறது.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அணுகுவதில் இது எதிர்மறை அணுகுமுறை.நிறைய திரைப்படங்களில் இந்தக்காட்சியைப் பார்த்திருக்கலாம்.காதலி வேறொருவனுடன் பழகும்போது காதலன் பொங்குவான்.ஆனால் இந்த அணுகுமுறை தவறானது.ஒருவரை புரிந்து கொள்வதைத் தவிர்த்து பொறாமை உணர்ச்சியைத்தூண்டி கீழே விழச்செய்கிறது.இது வலைவீசிப் பிடிப்பதற்குச் சமமானது.மனித உயிரை உடலாக மட்டுமே காண்பதுதான் காரணம்.

ஆணும் பெண்ணும் பேசினாலே சந்தேகம் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பெண்ணை உடலாகக் கருதும் வரை இந்த எண்ணங்களைத் தவிர்த்துவிட முடியாது.ஆணும் பெண்ணும் பேசித்தான் ஆகவேண்டும்.இன்றையப் பணிச்சூழலில் இதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்று.ஆனாலும் உற்றுப்பார்ப்பவர்கள்தான் அதிகம்.பெண் வதந்திகளையும்,விமர்சனங்களையும் கடந்தாகவேண்டும்.

ஆண்,பெண் நட்பை ஆரோக்கியமாகக் கருதுபவர்கள் குறைவு.ஆரோக்கியமான உறவை அவர்களது ஆளுமையே தீர்மானிக்கிறது.ஒரு பெண் சிரித்துப்பேசினாலே கற்பனையில் மிதப்பவர்கள் இருக்கிறார்கள்.அந்தப்பெண்ணுடன் இணைத்து வதந்தி பரப்புபவர்கள் இருக்கிறார்கள்.பெண்கள் தங்களது பணிச்சூழலில் நோக்கம் தெரிந்தும் கவனிக்காதது போலக் கடந்து செல்பவர்கள் அதிகம்.பலவீனத்தைப்பயன்படுத்தி ஆதாயம் அடைபவர்களும் உண்டு.

ஒருவரது பலவீனங்கள் உறவைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.எதைக்கொடுத்து சரிக்கட்டலாம்? எப்படி விழ வைக்கலாம் என்று அணுகுபவர்களே அதிகம்.அறியாமை,ஏழ்மை போன்றவை ஒருவரை வீழ்த்தப் பயன்படுத்தப்படுகின்றன.நாம் சொல்லும் பொய்யை நம்புபவர் நமக்குப் பிடித்தமானவராக இருக்கக்கூடும்.நாம் சொல்வதையெல்லாம் நம்புபவர் நமது தன்முனைப்பைத் திருப்தி செய்கிறார்.அவரது அறியாமை நமக்குப் பலம்.

மேலே சொல்லப்பட்டபெண் விஷயத்தில் அவரது நோக்கம் நிறைவேறியிருந்தால் என்ன நடக்கும்? ஆணின் பலவீனத்தைப் பிடித்தாகி விட்டது.தான் காரியம் சாதிக்க நினைக்கும் போதெல்லாம் இந்த உத்தியை பயன்படுத்தக்கூடும்.திருமணத்திற்குப்பின் தம்பதிகள் வாழ்வில் பெரும்பாதிப்பைக் கொண்டுவரலாம்.பலவீனத்தைப்பயன்படுத்தி வெற்றி கொள்வது தற்காலிகமானது.இந்த அணுகுமுறை இன்றைய உறவுச்சிக்கல்களில் பெரும்பங்கு வகிக்கிறது.
-

Monday, July 14, 2014

குடும்பங்களில் பழிவாங்கும் உணர்வுபாம்பு பழிவாங்கும் கட்டுக்கதையைக் கிராமத்தில் சொல்வார்கள்.பாம்பை உயிர்போகும்வரை அடிக்காமல் விட்டுவிட்டால் தேடிவந்து பழிதீர்க்கும் என்பார்கள்.அதுவும் கொம்பேறிமூக்கன் என்ற பாம்பு தன்னை அடித்த மனிதனை கடித்து உயிரைப்போக்கிய பிறகு சுடுகாட்டு மரத்தின் மீது ஏறி இறுதிச்சடங்கை பார்த்தபின்னர்தான் ஆத்திரம் தீரும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பழிதீர்க்கும் மனிதர்களைப் பாம்பு என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அரிஸ்டாடில் மனிதன் சமூக விலங்கு என்று சொன்னார்.அரசியல் மிருகம் என்று குறிப்பிட்டார்.சமூக வாழ்விலும் அரசியலிலும் பழி வாங்கும் உணர்வே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.எப்போதும் மனிதன் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறான்.திரைப்படங்களில் பழிவாங்கும் கதைகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.வஞ்சம் தீர்ப்பது அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது.மனிதன் பழிதீர்க்கும் மிருகம் என்று சொல்லலாம்.

சிறுவயதில் நடந்த அந்த சம்பவம் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.போதையேறிய ஆசாமி ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை தரக்குறைவாகப் பேசிவிட்டார்.அப்படிப்பேசிய இடம் அவர் வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.அவருக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் வீட்டு வாசலில் இருந்தே பேசியிருக்கலாம்.ஆனால் ஒருகிலோமீட்டர் தூரம் சென்று அவர் பேசிய இடத்திலேயே பேசி விட்டுவந்தார்.நம்முடைய இதிகாசங்களிலும் இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன.ராமன் காட்டுக்குப்போக நேர்ந்தது கூனியின் பழிதீர்த்தல்தான்.பாஞ்சாலியும் பழிதீர்த்துக்கொண்டார். நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.``இந்த மாவட்டத்துக்கு உயரதிகாரியாக வரவேண்டுமென்று`` ஒருவர் விருப்பப்பட்டதாகச்சொன்னார்.அவர் குறிப்பிட்ட மாவட்டத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மானம் போய்விட்டது.அதே இடத்தில் உயர் அதிகாரியாக வருவதன் மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்
.
தம்பதிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.திருமண வாழ்வில் ஆறாண்டுகள் கடந்துவிட்டார்கள்.ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள்.திருமணத்தின்போது தனது தந்தையை விமர்சனம் செய்தது முதல் மனைவி சொல்ல ஆரம்பித்தார்.அவமானம்,தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை விவரிக்க ஆரம்பித்தார்.

குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளிலும் பழிவாங்கும் உணர்வு வலிமையாக இருக்கிறது.அண்டை அயலார்கள்,இரத்த சம்பந்தமான உறவுகளுக்கும் இது பொருந்தும்.கணவன்,மனைவி என்றில்லாமல் அனைவரும் பழி உணர்வை கையாளக்கற்றுக்கொள்வது அமைதிக்கு வழிவகுக்கும்.அவனை ஏதாவதுசெய்தே தீருவேன் என்று சிந்திக்கும் நேரத்தில் வளர்ச்சி குறித்த எண்ணங்களை உருவாக்கலாம்.

உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்குப்போகவேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் அழைத்திருந்தார்கள்.``நம்முடைய நிகழ்வுகளுக்கு வராமல் அவர்கள் புறக்கணித்தார்கள்.அதனால் நாம் அவர்களைப் புறக்கணிக்கவேண்டும்`` என்பது வீட்டில் உள்ளவர்களது வாதம்.நான் சொன்னேன்,``நான் அவர்களைப் பின்பற்ற முடியாது.`` ஆமாம்,நாமும் அவர்களைப்போலத் தரமின்றி நடந்து கொள்ளவேண்டாம்.
-

Monday, July 7, 2014

உயிரற்ற உறவுகள்விலைமாதர் உறவைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும்போது``இருட்டறையில் பிணத்தை அணைப்பது போல`` என்கிறார்.பெண்ணை உடலாக மட்டுமே கருதும் அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.சக மனிதர்களுக்கிடையேயான அன்பு,அக்கறை,பரிவு போன்றவை இங்கே இல்லை.ஆதாயத்துக்காக மட்டுமேயான உறவுகள் இன்று அதிகரித்து வருகின்றன.

கிராமங்களில் வேற்று சாதியாக இருந்தாலும் உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பார்க்கலாம்.ஊரில் பலரை எனக்கு மாமா,அண்ணா,பெரியப்பா,அத்தை என்று சொல்லித்தான் பழக்கம்.உணர்வுப்பூர்வமாக உதவிசெய்வது,ஆபத்தில் உடன் நிற்பது என்று நெருக்கமான உறவுகள் அவை.நுகர்வுக் கலாச்சாரம் இன்று அவற்றையெல்லாம் அழித்துவிட்டது.

பணியிடம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது.செய்யும் வேலை மூலமாக வரும் வருமானம்தான் அத்தனையும் தீர்மானிக்கிறது.விழித்திருக்கும் அதிக நேரங்கள் பணியிடத்தில் இருக்கிறார்கள். அலுவலக சந்தோஷமும்,சங்கடங்களும் வீட்டில் எதிரொலிக்கிறது.பணியாளரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற இடம் அது.

திங்கட்கிழமை காய்ச்சல் என்று சொல்கிறார்கள்.பலருக்கு ஞாயிற்றுக்கிழமை விடுப்பு முடிந்து அடுத்தநாள் வேலைக்குச்செல்ல சங்கடமாக இருக்கிறது.பத்து மணி வேலைக்குச் சரியான நேரத்துக்கு வருவதைப் பலர் விரும்புவதில்லை.தாமதமாக வருவதில் பெருமை கொள்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அடிப்படையில் மனிதமனம் கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை.

பணியிடத்தின் அரசியல்களை இவற்றுக்குக் காரணமாகச் சொல்லலாம்.வேலை தெரியாதவர்களும்,வேலை தெரிந்த சோம்பேறிகளும்,மனக்கோளாறு உள்ளவர்களும் இந்த அரசியலில் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள்.இவர்கள் அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.வீட்டுவேலை செய்கிறார்கள்.போட்டுக்கொடுக்கிறார்கள்.பல நேரங்களில் பொய் பேசுகிறார்கள்.

மிகச் சிரமப்பட்டுப் படித்து பணியில் சேர்ந்த நண்பர் ஒருவரை நீண்டகாலத்துக்குப்பின்சந்தித்தேன்.உருக்குலைந்துப்போயிருந்தார்.வேலையில் திருப்தியில்லை என்று சொன்னார்.தகுதியில்லாதவர்கள் முதன்மை பெறுவது மதிப்பீடுகளைச் சிதைத்து விடுகிறது.எளிய மனிதர்கள் சமாளிக்க முடியாத மன அழுத்தத்தை சுமக்கவேண்டியிருக்கிறது.

அலுவலக அரசியல் குடும்ப உறவுகளில் எதிரொலிக்கிறது.ரத்த அழுத்தம்,நீரிழிவு,இதயநோய் உள்ளிட்ட நோய்களைக் கொண்டுவருகிறது.அலுவலகத்தில் உருவான உணர்ச்சிக்கொந்தளிப்பு மனைவி,குழந்தைகள்,பெற்றோர்களிடம் வீசப்படலாம்.பசி முதல் பாலியல் விருப்பங்கள் வரை மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யாரைத்தான் நம்புவது? என்ற வார்த்தைகளைப் பணிச்சூழலில் அடிக்கடி கேட்கிறேன்.தனிப்பட்ட,குடும்ப விஷயங்களை அலுவலக சூழலில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.பகிர்ந்துகொள்ள உறவுகள் இல்லாத மோசமான சூழல் இன்று உருவாகியிருக்கிறது.முன்னெப்போதையும் விட உளவியல் ஆலோசகர்களின் தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும்.

பணிச்சூழல் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு பெறுவதுதான் முதல்படி.காரணமான எண்ணங்களை அடையாளம் காண்பது அடுத்த நிலை.எண்ணங்களை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.
-