Friday, June 14, 2013

உணர்ச்சிகளை வெளியே கொட்டுங்கள் .

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும்."படபடவென்று பேசுபவனை நம்பலாம்,உம்மென்று இருப்பவனை நம்பமுடியாது."ஆமாம்.படபடவென்று பேசுபவர் வெளியே கொட்டிவிடுகிறார்.அங்கே எதுவுமில்லை.அவர் தனது கருத்தை ஒளித்துவைக்கவில்லை.அவர் யார் என்று நமக்கு புரிந்துவிடுகிறது.நமக்கு அவர்மீது சந்தேகமோ கலக்கமோ இல்லை.அவரை நம்புவதில் சிரமம் இல்லை.அங்கே உள்ளே எதுவும் இல்லை!?என்பது நமக்குத்  தெரிந்துவிடுகிறது.பேசாமல் இருப்பவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரிவதில்லை.நம்மைப் பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.அவர் ஒரு புதிராக தெரிகிறார்.ஒருவேளை காத்திருந்து தாக்கவும் செய்யலாம்.நாம் சஞ்சலப்படுகிறோம்.புறக்கணிக்கத் தயாராகிறோம்.

குட்டீஸ் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சி சன் டி.வி.யில் வந்து கொண்டிருக்கிறது.இமான் அண்ணாச்சி தொகுத்து வசங்குகிறார்.பையன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறான்.மட்டுமரியாதை இல்லாமல் பேசுவது என்று சொல்வோமில்லையா? அப்படி பேசுகிறான்.பக்கத்தில் இருக்கும் பாப்பா பெரியவர்களை அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறாள்.அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி விட்டாள்.மற்ற இரண்டு சிறுமிகள் எதையும் பேசவில்லை.அடுத்து இமான் அண்ணாச்சி கேட்கிறார்.அந்தப் பையனுக்கு கிப்ட் தரலாமா? வேண்டாமா? பேசாமல் இருந்த சிறுமிகள் தரவேண்டாம் என்கிறார்கள்.கண்டித்துப் பேசிய சிறுமி கிப்ட் தரலாம் என்கிறார்.ஏனெனில் அந்தச் சிறுமியின் கோபம் வெளியேறிவிட்டது.உணர்ச்சி உள்ளே தங்கவில்லை.

கோபம்,கவலை உள்ளிட்ட உணர்ச்சிகளை உள்ளேயே தங்க விடுவது நோய்க்கு வழிவகுக்கும்.இம்மாதிரி சூழ்நிலைகளில் யாரிடமாவது பகிர்ந்து கொள்வதே சரியானது.நம்மீது அக்கறை உள்ள நண்பர்கள் இருந்தால் நல்லது.அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் நேரமில்லை.அவரவர் குடும்பத்தை கவனிக்கவும்,குழந்தை களிடம்  பேசுவதற்கும் கூட முடியவில்லை.சலித்துக் கொள்ளும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன்.மேலும் இது மன அழுத்த யுகம்.அதனால் நாம் காமெடியை மட்டுமே வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.வலிகளை,புலம்பலை காது கொடுத்துக் கேட்க பலரும் விரும்ப மாட்டார்கள்.

நாம் 'ரிசர்வ் டைப்' என்று சிலரை சொல்லிக் கொண்டிருப்போம்.அதிகம் பேச மாட்டார்கள்.அவசியம் இல்லை என்பதாலோ அல்லது கூச்சத்தின் காரணமாகவோ பேசாமல் இருக்கலாம்.மேலே சொன்ன உம்மென்று இருப்பவர்கள் வகையைச் சார்ந்தவர்கள்.தவிர எல்லா சூழ்நிலைகளிலும் நம்மால் நமது உணர்ச்சியை வெளிப்படுத்திவிட முடியாது.உதாரணமாக அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் வெளிப்படுத்திவிட முடியாது.சில நேரங்களில்?! வீட்டிலும் கூட பேசிவிடமுடியாது.உணர்ச்சிகளை காகிதத்தில் கொட்டுவது நல்ல வழி.எழுதிவிட்டு கிழித்துப் போட்டுவிட்டால் கூட மனம் லேசாவதை உணர முடியும்.நாட்குறிப்பு எழுதலாம்.இப்போது வலைப்பதிவு ஆரம்பித்து எழுதிவிட முடியும்.

-

Monday, June 10, 2013

கள்ளக்காதல் பாலியல் குற்றங்களைத் தூண்டுகிறதா?



தில்லியில் நடந்த வன்புணர்ச்சியின் அதிர்ச்சி அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை.சமீபகாலமாக செய்திகளில் கவனம் கொண்டிருப்பவர்கள் இவற்றை அறிந்திருக்க முடியும்.பாலியல் குற்றங்களும் கள்ளக்காதலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.கொலைக்கான காரணங்களில் முதலிடம் வகிக்கும் அளவுக்கு கள்ளக்காதல் பெருகியிருக்கிறது.கள்ளக்காதலுக்கான காரணங்களைத்தாண்டி அதன் தாக்கத்தை கவனித்து வந்திருக்கிறேன்.

                               கள்ளக்காதல் போன்றதொரு நிகழ்வை உற்று நோக்கும் வாய்ப்பு கிட்டியது.அலுவலகம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.இருவரும் மணமாகி குழந்தைகள் இருந்தார்கள்.வேலையைக்காரணம் காட்டி மற்றவர்கள் வருவதற்கு முன்பே அலுவலகத்தில் இருந்தார்கள்.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.வேலை நேரத்தை தாண்டியும் வெளியேறாமல் கிடந்தார்கள்.நிகழ்ச்சிகளில் புகைப்பட்த்துக்கு ஒன்றாக நின்று கொண்டார்கள்.பல நாட்களில் மதிய உணவு பெண் வீட்டிலிருந்து அவனுக்கு எடுத்துவருவார்.

                                அந்த ஆண் மனநலம் பெற்றவன் என்று சொல்லமுடியாது.அருவருப்பான குணங்களும்,கீழ்த்தரமான செயல்களும் அவனிடம் மிகுந்திருந்தன.கள்ளக்காதலில் அவனுக்கு அனுபவம் எதுவுமில்லை.அதிக உணர்ச்சிவசப்பட்டு சுற்ற ஆரம்பித்தான்.அந்தப்பெண்ணின் நோக்கம் இவனில்லை என்பது வேறு விஷயம்.ஆனால் உடனிருப்பவர்கள் அவர்கள் காதலிப்பதாக பேச ஆரம்பித்தார்கள்.மொத்த ஆண்களும் இறுக்கமாகிக் கிடந்தார்கள்.சிரிக்க மறந்து விட்டார்கள்.இந்தச் செய்தியை உணர்ச்சிப்பெருக்கோடு மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் இறுக்கத்தை தணித்துக்கொண்டார்கள்.அவர்களிடம் என்ன உணர்வை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் உணரமுடியும்.

                                  சோவியத் யூனியனில் இருந்து வெளியிடப்பட்ட கல்வி உளவியல் புத்தகம் ஒன்றில் படித்த விஷயம் இது. கல்லூரிகளில் ஒரு வகுப்பில் பெரும்பாலானவர்கள் காதலில் இருப்பவர்களாக இருக்கலாம்.இன்னொரு வகுப்பில் யாரும் காதலிக்காமல் இருக்கலாம்.தொற்றிக்கொள்ளும் விஷயம் இது.காதலை விடவும் கள்ளக்காதல் சிக்கலான பிரச்சினையை தோற்றுவிக்கிறது.சுயமதிப்பை உடைத்து அங்கீகாரத்தை வேண்டும் தீவிர உணர்வை வேண்டுகிறது.இருவரைப்பற்றிய கற்பனைகள் மன இறுக்கத்தையும் தொடர்ந்து பாலுணர்வையும் தூண்டக்கூடும்.இணையத்தின் பாலியல் படங்களைவிடவும் இது போன்ற நிகழ்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

                                    ஒரு வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சண்டை.மனைவிக்கு அடி விழுந்து காயம் ஆகிவிட்ட்து.மனைவி திருப்பி கணவனை அடிக்கவில்லை.மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குவந்த மகனை ஓங்கி அறைந்தார்.கணவன் மீதான ஆத்திரத்தை குழந்தையை அடித்து தீர்த்துக்கொண்டார்.மனத்தில் ஏற்படும் தீவிர உணர்வை ஏதோவொரு இட்த்தில் இறக்கிவைத்துத்தான் ஆகவேண்டும்.வெளிப்ப்டையான கள்ளக்காதல் போன்ற நிகழ்வுகளால் தூண்டப்பட்டு பாலியல் குற்றவாளியாக மாறுவது சாத்தியம்தான்.மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் இன்னொரு பணியாளர் மீது குற்றம் சாட்டினார்கள்.பெண் வாடிக்கையாளர்களிடம் தவறாக நடந்து கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இது அலுவலகத்தில் ஏற்படுத்திய கள்ளக்காதல் நிகழ்வின் தாக்கமாக இருக்கமுடியும்.

                               ஒரு கிராமத்திற்கு ஓரிருவர் இப்படி இருப்பது சாத்தியம்தான்.மேலும் கள்ளக்காதல் எப்போதும் ரகசியமான ஒன்றல்ல! சுட்டியை அழுத்தி படிக்கவும்: கள்ளக்காதல் வெளியேவருவது எப்படி?.பெண் போகப்பொருளாக மட்டுமே கருதும் சமூகத்தில் மணம் தாண்டிய உறவுகள் ஆணிடம் மிக மோசமான பிம்பத்தை ஏற்படுத்துகிறது.அதிக ஆண்கள் பெண்ணின் மீது ஆத்திரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.சில நடிகர்கள் பெண்களை மோசமாக விமர்சிக்கும்போது திரையரங்கில் பலத்த கரவொலியை நீங்கள் கேட்க முடியும்.ஒரு பெண்ணின் மீதான ஆத்திரம் இன்னொரு பெண்ணின் மீது திரும்பும் சாத்தியம் உண்டு.

-

Thursday, June 6, 2013

நெல்லிக்கனி-சி வைட்டமின் -திரிபலா



ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் குறித்த அச்சம் நிலவுகிறது.இது குறித்த விரிவானபதிவை இத்தளத்தின் வாசகர்கள் ஏற்கனவே படித்திருக்க வாய்ப்புண்டு.படிக்காதவர்கள் சுட்டியை அழுத்திப் படிக்கவும்.மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா உஷார்!புதிய ஆய்வு முடிவு ஒன்றை படித்தேன்.தற்போதுள்ள காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களை சி வைட்டமின் அழித்துவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.இதே வைட்டமின் ஆண்டி ஆக்ஸிடெண்டாக செல் சிதைவை தடுக்கிறது என்று சென்ற பதிவில் பார்த்தோம்.

ஆயிரம் மில்லிகிராம் வரை உணவில் சேர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.ஆனால் தினமும் மாத்திரைகளாக உண்பதை பலரும் ஆதரிக்கவில்லை.உணவு மூலம் அதிக அளவு சி வைட்டமினை பெறுவது இன்று நமக்கு முக்கியமான சவால்.உணவின் மூலம் குறைந்த செலவில் எப்படி பெறுவது? என்று ஒருவர் கேட்டார்.எலுமிச்சை விலை குறைவுதான்.மேலும் இதைப்பற்றிய சிந்தனையின் போது எனக்கு நினைவுக்கு வந்தவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார்.
அதியமான் வள்ளலான கதை நமக்குத்தெரியும்.தமிழ் மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமென்று நினைத்திருக்கவேண்டும்.தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வைக்குக் கொடுத்து வரலாற்றில் நீங்காத இடம் பெற்றான்.எங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டரில் இருக்கிறது அதியமான்கோட்டை என்ற ஊர்.தமிழக அரசால் அதியமான்கோட்டம் கட்டப்பட்டுள்ளது.அவ்வை பெற்ற நெல்லிக்கனிக்கு மட்டுமல்ல! அனைத்து நெல்லிக்கனிக்கும் நீடித்த வாழ்வைத்தரும் ஆற்றல் உண்டு என்பதே நிஜம்.
 
உயிர்ச்சத்து சி ஆரஞ்சுப்பழத்தை விட இருபது மடங்கு அதிகமாக இருக்கிறது.ஆரஞ்சு அளவுக்கு பணம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை.இந்திய மருத்துவத்தில் நெல்லிக்காய் தொடர்ந்து சிறப்பிடம் பெற்றிருக்கிறது.ஆயுர்வேத,சித்த மருத்துவத்தில் ச்யவன்பிராஷ்,நெல்லிக்காய் லேகியங்கள் புகழ்பெற்றவை.சுவை காரணமாக நெல்லிக்காய் அதிகம் பயன்பாட்டில் இல்லை.ஊறுகாயாக,மருந்தாக மட்டுமே இருந்துகொண்டிருக்கிறது
.
உப்பு,காரம் சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானது.பழச்சாறாக சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.முக்கியத்துவம் தெரிந்தவர்கள் உலர் நெல்லிக்கனியை மென்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.கடைகளில் எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும்.உலர்ந்தபின்பும் அதில் உள்ள சத்துக்களில் மாற்றம் இல்லை என்கிறார்கள்.சூயிங்கம் போன்றவற்றை மெல்லுவதை விட இதில் ஏராள நன்மைகள் உண்டு.தூள் செய்யப்பட்டும் பயன்படுத்துகிறார்கள்.

இளமையை மீட்டெடுக்கும் கனியாக நெல்லிக்கனி தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.முடியும் தோலும் இதனால் வளம் பெறுகின்றன.மேலும் கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்த,இதயத்தை,கல்லீரலை பாதுகாக்க என்று நன்மைகள் ஏராளம்.ஆரஞ்சு போன்ற பழங்களை ஒப்பிடும்போது குறைந்த விலையில் அதிக சி வைட்டமினை நெல்லிக்காய் மூலம் பெறலாம்.

சென்றவாரம் நண்பன் ஒருவனை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.நெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய் சேர்த்து ஒருவர் தூளாக்கித் தருவதாகவும்,தினமும் பயன்படுத்துவதாக சொன்னான்.திரிபலா என்ற பெயரை அவன் கேள்விப்பட்டிருக்கவில்லை. மாதம் ஐம்பது ரூபாய் செலவாகிறது என்றான்.உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் சொன்னான்.குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை போக்கும் மருந்தாக ஆயுர்வேத,சித்த மருத்துவத்தில் தரப்படுகிறது.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பதாக படித்திருக்கிறேன்.
-