Showing posts with label வைட்டமின். Show all posts
Showing posts with label வைட்டமின். Show all posts

Thursday, June 6, 2013

நெல்லிக்கனி-சி வைட்டமின் -திரிபலா



ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் குறித்த அச்சம் நிலவுகிறது.இது குறித்த விரிவானபதிவை இத்தளத்தின் வாசகர்கள் ஏற்கனவே படித்திருக்க வாய்ப்புண்டு.படிக்காதவர்கள் சுட்டியை அழுத்திப் படிக்கவும்.மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா உஷார்!புதிய ஆய்வு முடிவு ஒன்றை படித்தேன்.தற்போதுள்ள காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களை சி வைட்டமின் அழித்துவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.இதே வைட்டமின் ஆண்டி ஆக்ஸிடெண்டாக செல் சிதைவை தடுக்கிறது என்று சென்ற பதிவில் பார்த்தோம்.

ஆயிரம் மில்லிகிராம் வரை உணவில் சேர்க்கலாம் என்று அமெரிக்க மருத்துவர் ஒருவர் சொல்கிறார்.ஆனால் தினமும் மாத்திரைகளாக உண்பதை பலரும் ஆதரிக்கவில்லை.உணவு மூலம் அதிக அளவு சி வைட்டமினை பெறுவது இன்று நமக்கு முக்கியமான சவால்.உணவின் மூலம் குறைந்த செலவில் எப்படி பெறுவது? என்று ஒருவர் கேட்டார்.எலுமிச்சை விலை குறைவுதான்.மேலும் இதைப்பற்றிய சிந்தனையின் போது எனக்கு நினைவுக்கு வந்தவர்கள் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார்.
அதியமான் வள்ளலான கதை நமக்குத்தெரியும்.தமிழ் மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமென்று நினைத்திருக்கவேண்டும்.தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வைக்குக் கொடுத்து வரலாற்றில் நீங்காத இடம் பெற்றான்.எங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டரில் இருக்கிறது அதியமான்கோட்டை என்ற ஊர்.தமிழக அரசால் அதியமான்கோட்டம் கட்டப்பட்டுள்ளது.அவ்வை பெற்ற நெல்லிக்கனிக்கு மட்டுமல்ல! அனைத்து நெல்லிக்கனிக்கும் நீடித்த வாழ்வைத்தரும் ஆற்றல் உண்டு என்பதே நிஜம்.
 
உயிர்ச்சத்து சி ஆரஞ்சுப்பழத்தை விட இருபது மடங்கு அதிகமாக இருக்கிறது.ஆரஞ்சு அளவுக்கு பணம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை.இந்திய மருத்துவத்தில் நெல்லிக்காய் தொடர்ந்து சிறப்பிடம் பெற்றிருக்கிறது.ஆயுர்வேத,சித்த மருத்துவத்தில் ச்யவன்பிராஷ்,நெல்லிக்காய் லேகியங்கள் புகழ்பெற்றவை.சுவை காரணமாக நெல்லிக்காய் அதிகம் பயன்பாட்டில் இல்லை.ஊறுகாயாக,மருந்தாக மட்டுமே இருந்துகொண்டிருக்கிறது
.
உப்பு,காரம் சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமானது.பழச்சாறாக சில இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.முக்கியத்துவம் தெரிந்தவர்கள் உலர் நெல்லிக்கனியை மென்று கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.கடைகளில் எப்போதும் கிடைத்துக்கொண்டிருக்கும்.உலர்ந்தபின்பும் அதில் உள்ள சத்துக்களில் மாற்றம் இல்லை என்கிறார்கள்.சூயிங்கம் போன்றவற்றை மெல்லுவதை விட இதில் ஏராள நன்மைகள் உண்டு.தூள் செய்யப்பட்டும் பயன்படுத்துகிறார்கள்.

இளமையை மீட்டெடுக்கும் கனியாக நெல்லிக்கனி தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.முடியும் தோலும் இதனால் வளம் பெறுகின்றன.மேலும் கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்த,இதயத்தை,கல்லீரலை பாதுகாக்க என்று நன்மைகள் ஏராளம்.ஆரஞ்சு போன்ற பழங்களை ஒப்பிடும்போது குறைந்த விலையில் அதிக சி வைட்டமினை நெல்லிக்காய் மூலம் பெறலாம்.

சென்றவாரம் நண்பன் ஒருவனை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.நெல்லிக்காய்,கடுக்காய்,தான்றிக்காய் சேர்த்து ஒருவர் தூளாக்கித் தருவதாகவும்,தினமும் பயன்படுத்துவதாக சொன்னான்.திரிபலா என்ற பெயரை அவன் கேள்விப்பட்டிருக்கவில்லை. மாதம் ஐம்பது ரூபாய் செலவாகிறது என்றான்.உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் சொன்னான்.குடலை சுத்தம் செய்து மலச்சிக்கலை போக்கும் மருந்தாக ஆயுர்வேத,சித்த மருத்துவத்தில் தரப்படுகிறது.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பதாக படித்திருக்கிறேன்.
-

Friday, February 15, 2013

மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்.


                              மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு.

                               பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்தார்.அன்று மாலை அவருடைய அம்மா கடைக்குப்போய் திரும்பிக்கொண்டிருந்தார்.” அவனுக்குப் பிடிக்கும் என்று பலகாரம் செய்யப்போகிறேன்.”ஆமாம்.அம்மாவுக்கு தெரியாதா என்ன? குழந்தைகள் எதற்கு கவலையை மறப்பார்கள்? எப்படி வழிக்கு கொண்டு வருவதுஎன்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும்.ஒவ்வொருவருக்கும் சில உணவுகளில் விருப்பம் அதிகம்.விருப்பமான உணவுகள் மனதை சந்தோஷப்படுத்தி விடுகிறது.மனம் இறுக்கமாக இருக்கும்போது பிடித்த உணவை உண்பது இறுக்கத்தை குறைக்க உதவும்.

                               மேலே கண்ட அம்மா வைத்தியமும் இப்போது பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.சிறுவயது முதலே இனிப்பு,குப்பை உணவு என்று பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.அதிக எடை,ஆரோக்கிய குறைபாடு என்று திசை மாறிக்கொண்டிருக்கிறது.ஆரோக்கியம் தரும் பலகாரத்தை வீட்டில் செய்து தருவது இன்று சாத்தியமாக இல்லை.பொட்டலம் கட்டப்பட்ட அல்லது கடையை நம்பியே இருக்கிறார்கள்.அழும்போதெல்லாம் இப்படிப்பட்ட உணவுகளையே தின்னக் கொடுக்கிறார்கள்.இத்தகைய பழக்கங்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

                                                                       பெரும்பாலான வீடுகளில் இந்தப்பழக்கம் இருக்கிறது.சமைப்பதற்கு முன்னால் என்ன செய்யட்டும் என்று கேட்பார்கள்.ஆனால் அனைத்து உறுப்பினர்களையும் திருப்திப்படுத்துவது சாத்தியம் இல்லை.நமக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட உணவின் மீது ஆசை உண்டாகிறது.உணவின் மீதான ஆர்வத்துக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஒரு கிராமத்துப்பெரியவர் சொன்னார்.உடலில் உள்ள நோய்க்கு தகுந்தவாறு உணவின் மீதான ஆசையும் இருக்கும் என்றார்.உதாரணமாக ஒருவர் உடலில் சி வைட்டமின் பற்றாக்குறையாக இருக்கும்போது சி உயிர்ச்சத்து மிகுந்த உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.இது சிந்திக்கவேண்டிய விஷயமாகத்தோன்றுகிறது.
                                                                         மகிழ்ச்சி, நல்ல மனநிலை,தூக்கம் போன்றவற்றிற்கு செரோடானின் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக உள்ளது.செரோடானின் அளவை உயர்த்தும் உணவுகளை உண்பது முக்கியமானது.வைட்டமின் பி சத்துள்ள உணவுகள்(பச்சை காய்கறிகள்,இறைச்சி,முட்டை,முளை கட்டிய தானியங்கள்,கைக்குத்தல் அரிசி,கோழி இறைச்சியின் மார்புப்பகுதி போன்றவை),வாழைப்பழம்,தக்காளி,அன்னாசி,கடல் உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்கும்.
-