Saturday, January 29, 2011

வலைப்பதிவுகள்,பதிவர்கள் மற்றும் நான்

2008-ம் ஆண்டு குமுதத்தில் பிரபலமான வலைப்பதிவுகள் பட்டியல் போட்டிருந்தார்கள்.அதைப்பார்த்து விட்டு அந்த தளங்களுக்கு சென்றேன்.இட்லி வடை,பி.கே பி.ஆகியன.அவற்றைத்தான் படித்து வந்தேன்.பிறகு ஆனந்த விகடன் மூலமாக சில பதிவுகள் அறிமுகம்.டாக்டர் ஷாலினியின் பதிவுகள் போன்றவை.வேறு விபரங்கள் எனக்கு தெரியாது.இணையத்தில் இலவசமாக எழுத முடியும் என்றோ,யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதெல்லாம் தெரியாது.

ஒரு நாள் create blog மீது தொடப்போக நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.ஒரு வருட்த்திற்கும் மேலாக அப்படியே கிடந்த்து.எப்போதாவது திறந்து பார்ப்பேன்.அவ்வளவுதான்.தமிழில் எழுத்முடியும் என்பது கூட தெரியாது.தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பது அதனால்தான்.கூகுள் ஒலிபெயர்ப்பு,மொழி பெயர்ப்பும் தெரியாது.

புதிய தலைமுறை இதழொன்றில் இ-கலப்பை பற்றி படித்தேன்.அதைத் தேடப்போய் ஒவ்வொன்றாக தெரிந்த்து.பதிவு எழுதி எப்படி மற்றவர்களை படிக்க வைப்பது என்று குழப்பம்.சொந்தமாக கணினியெல்லாம் கிடையாது.எல்லாமும் வெளியில்தான்.அதனால் அதிகம் வேறெதுவும் தெரியவில்லை.

தமிழ் பற்றி ஏதோ தேடிக்கொண்டிருக்கும்போது தமிழ்10 தளத்துக்குப் போனேன்.என்னவென்றே தெரியாமல் இ-மெயில் சந்தாதார்ராக பதிவு செய்தேன்.எனக்கு வந்த மெயிலை அடுத்த நாள் பார்த்தபோது பெரும்பாலானவை சினிமா செய்திகளாக இருந்த்து.சினிமா பார்ப்பேனே தவிர சினிமா செய்திகளில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.இன்றைய பிரபலமான செய்திகள் என்றிருந்த்து.ஏதோ சினிமா பற்றிய இணைய இதழ் என்று கருதி விட்டுவிட்டேன்.மெயிலை திறந்து கூட பார்ப்பதில்லை.

பொழுது போகாமல் ஒரு நாள் தமிழ்10 மெயிலை பார்த்தேன்.உங்கள் பிளாக்கில் திருக்குறள் விட்ஜெட் சேர்ப்பது எப்படி என்று செய்தி.ஆமாம்.வந்தேமாதரம் ச்சிக்குமார்தான்.அங்கிருந்து வந்தேமாதரம் போனவன் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.திரட்டி பற்றியெல்லாம் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

உலவு திரட்டியில்தான் முதல்முதலாக பதிவு செய்தேன்.தமிழ்மணம்,இண்ட்லி யெல்லாம் பின்னர் இணைத்தேன்.என்னுடைய பயனர் பெயர் உலவு திரட்டியில் வேலை செய்யவில்லை.ஓட்டுப்பட்டை பற்றிகூட தெரியவில்லை.பதிவுகளை நேரடியாக இணைத்தேன்.

முதன் முதலாக ‘ஒரு சிறிய புத்தகம்என்று பாரதியார் புத்தகம் பற்றி ஒரு பதிவு.அதற்கு முதல் கருத்துரை இட்டவர்,கேபிள் சங்கர்.என்னுடைய அதிர்ஷ்ட்த்தை என்னவென்று சொல்வது? தமிழின் முதன்மையான பதிவர் என்னுடைய முதல் பதிவுக்கு மறுமொழிதொடர்ந்து எழுதுங்க நண்பரே

தினமணி சில பதிவுகளை முதல் பக்கத்தில் வெளியிட்டு எனக்கு அங்கீகாரம் வழங்கியது.முதலில் பிந்தொடர்ந்தவர் பிரஷா.இரண்டாவதாக வந்தவர் காணாமல் போய் விட இப்போது இவ்வளவுதான்.சராசரியாக ஒரு கருத்துரையும் இரண்டு வாக்குகளும் கிடைத்து விடுகின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு காலை மெயிலை திற்ந்தால் அங்கித வர்மா விருது அனுப்பியிருந்தார்.பாண்டிச்சேரி வலைப்பூவின் அறிமுகத்தவம் சஞ்சிகையில் எனது முகம் மாறிப் போன தமிழ் சினிமா பதிவை மறு பிரசுரம் செய்திருந்தார்.உடல்நலக் குறைவு காரணமாக இப்போது இயங்கவில்லை.அவர் நலமாகி மீண்டும் பதிவில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகிறேன்.

செய்வதை சுத்தமாக செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்.அதிகம் வாசிக்க முடியாத நிலை இருக்கிறது.கிடைக்கும் நேரத்தில் பதிவு எழுதவே சிரம்மாக இருக்கிறது.பதிவுலகில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் நானும் சமூகத்தில் இருக்கிறேன்.முன்னணி பதிவர்கள் பலரை இன்னும் படிக்கவில்லை.பல பதிவர்களுக்கு உள்ள சமூக அக்கறை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.பெருமையாகவும் இருக்கிறது.

-

Thursday, January 27, 2011

திருமணத்தில் தவிர்க்க வேண்டிய சடங்கு


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்பட்ட்து.எங்கே முடிகிறதென்று யாரும் சொல்லவில்லை.பல இன்று நீதிமன்றத்தில் முடிகிறது.கல்யாண சடங்குகள் பெரும் செலவு வைப்பதாக இருக்கிறது.எளிமை தேவை.சில சடங்குகள் மதம் சார்ந்தவை.அவரவர் விரும்பியவாறு இருந்து விட்டுபோகட்டும்.

தவிர்க்க வேண்டிய சடங்கு ஒன்று இருக்கிறது.அவ்வளவாக கவனித்திருக்க மாட்டீர்கள்.பெரும்பாலான திருமணங்களில் நான் பார்த்து வருந்தியிருக்கிறேன்.இனி உடனிருந்து கவனித்து பாருங்கள்.அந்த சடங்கு-பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வது.சம்பந்திகள் முறுக்கிக்கொள்வது.

நண்பர் ஒருவருக்கு திருமணம்.முந்தைய இரவு நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து.விருந்தில் தயிர் தீர்ந்து விட்ட்தென்று சத்தமிட ஆரம்பித்து விட்டார்.பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்.அது இயல்பான ஒன்றுதான்.இதற்குத்தான் இந்த இடமே வேண்டாமென்றேன் என்றார்.எனக்கு ஆச்சரியமாக இருந்த்து.ஏனெனில்,அவரது விருப்பத்தின் படி முடிவு செய்யப்பட்ட திருமணம் அது.

மணப்பெண்ணின் தந்தை தர்ம சங்கடமாக உணர்ந்தாலும் அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.பெண்ணைப் பெற்றவன் வேறு என்ன செய்வது? உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தானாக வேண்டும்.ஆனால்,அவரது உறவினர்கள் பார்ப்பவர்களிடமெல்லாம் மணமகன் வீட்டாரைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

நண்பனின் தந்தை அங்கே சாப்பிடவில்லை.அவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.ஹோட்டலுக்கு சென்று விட்டார்.அப்போதிலிருந்து நான் செல்லும் அனைத்து திருமணங்களிலும் கவனித்து வருகிறேன்.ஒருவரை ஒருவர் இரு வீட்டாரும் குறை சொல்லிக்கொள்வது சடங்காகவே இருக்கிறது.

உளவியல் படியும் கூட இயல்பானதென்று எனக்கு தோன்றுகிறது.தான் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பது அடிப்படையாக இருப்பதுதான்.கூட்ட்த்தில் தன்னை கவனிக்கவேண்டும் என்று கருதி அதி முக்கியமில்லாத விஷயத்திற்கு சத்தமிடுகிறார்கள் அவ்வளவே.இன்னொன்று புது பொண்டாட்டி மயக்கத்தில் தன்னை மகன் கவனிக்கமாட்டானோ என்பது.

கல்யாணத்தில் என்றில்லை புதிய உறவுகள் உருவாகும் எல்லா இடங்களிலும் இதைக் காண முடியும்.மற்றவர்களை குறை சொல்வதெல்லாம் தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவே!அத்தகைய மனிதர்களை, சூழலை புரிந்துகொண்டால் எளிதாக நம்மால் கடந்து செல்ல முடியும்.வாழ்வில் ஒருமுறை நடக்கும் திருமணத்தில் இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

-

Tuesday, January 25, 2011

ஓட்டு போட பணம் வாங்கினால் ஆபத்து


பொதுத் தேர்தல்கள் பணம் சம்பாதிக்கும் பருவ கால தொழிலாக மாறியிருக்கிறது.பத்திரிகை விளம்பரம்,அச்சகங்கள்,டிஜிட்டல்பேனர் தயாரிப்பவர்கள்,வாடகை கார்,வட்டம்,மாவட்ட்த்திற்குத்தான் சீசன் தொழிலாக இருந்து வந்த்துதேர்தல்.தற்போது ஒவ்வொரு வாக்காளனுக்கும் அவன் குடும்பத்துக்கும் என்றாகிவிட்ட்து.

ஓட்டு போட்ட வாக்காளர் அவர் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.அதை அச்சடித்து தரலாமா என்பதை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிபுணர் குழு அமைத்திருக்கிறது.குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள்.

வாக்களித்தவர்களுக்கு தான் எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டோம் என்பது தெளிவாக தெரிந்து விடும்.நல்லதுதான்.ஆனால் இப்போது ஓட்டை விற்கும் காலத்தில் பணம் கொடுத்தவர்கள் ஆதாரமாக ஒப்புதல் சீட்டை ஒப்படைக்க்க் கோரலாம்.இரண்டு,மூன்று வேட்பாளர்களிடம் பணத்தை கறக்கும் புத்திசாலி ஏஜண்டுகள் வசமாக மாட்டிக்கொள்வார்கள்.

அரசியல் கட்சிகள் மேற்கண்ட காரணங்களுக்காக இந்த நடைமுறையை வரவேற்கலாம்.பிரிண்ட் அவுட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டால் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்கள் தயங்குவார்கள்.கொடுக்கும் காசுக்கு ஓட்டு உறுதி.வெற்றி வாய்ப்பில்லாத வேட்பாளருக்கு கறுப்புப் பணம் மிச்சம்.

வேட்பாளருக்கு எதிர்கோஷ்டியைச்சேர்ந்த வட்டம்,ஒன்றியம்,கிளை எல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவார்கள் அவர்களின் எண்ணம் இத்தகைய நடைமுறை வந்தால் ஈடேறாமல் போகும்.எல்லா கட்சிகளிடமும் “உனக்குத்தான் என் ஓட்டுஎன்று தொழில் செய்பவர்கள் நிலை சங்கடம்.

அச்சடித்த ஒப்புதல் சீட்டு வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்கே நன்மை அதிகம்.சாதாரண வாக்காளன் எப்போதும் அப்பாவிதான்.போகட்டும் அவன் எப்போதுதான் வாழ்ந்தான்?

-

எங்கே போனார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்?


மேலாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் சிலருக்கும் தகராறு.ஒரு பணியாளருக்கு ஆத்திரம் அதிகமாக,மேலாளரை ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறி.பல இடங்களில் விசாரித்து ஒரு புலனாய்வு பத்திரிகை நிருபரை பிடித்தான்.மேலாளரின் ஊழலையும் அத்துமீறலையும் விவரித்தான்.

அடுத்த சில நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நிருபருடன் அலைந்தான்.ஆதாரங்கள் தயாரானது.மூன்று வேளையும் பத்திரிகையாளருக்கு சாப்பாடு,சிற்றுண்டி எல்லாம் ஆனது.அடுத்த வெளியீட்டில் புகைப்பட்த்துடன் மேலாளரைப்பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.

இரண்டு,மூன்று பத்திரிகையாளர்கள்-அவர்களும் புலனாய்பவர்கள்-கூடி விவாதித்தார்கள்.ஆதாரங்களுடன் மேலாளரிடம் பேசினார்கள்.பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மேலாளரின் மானம் காப்பாற்றப்பட்டு விட்ட்து.அவருக்கும் குடும்பம் இருக்கிறது(நிருபருக்கு இல்லையா?).புலனாய்வு நிருபர் சில நாட்கள் அலைந்த்தற்காக மட்டும் மேலாளரிம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டார்.

எனது நண்பர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கை நட்த்தி வந்தார்.பத்தாண்டுகளுக்கு முன்பு! எப்போதும் ஒரு கூட்டம் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.அவர்களெல்லாம் நிருபர்கள்.பத்திரிக்கை அதிபர் அவர்களுக்கு சாப்பாடு கூட வாங்கித் தரமாட்டார்.ஊதியம் கிடையாது.நிருபர்கள் ஆசிரியருக்கு எல்லா செலவையும் பார்த்துக் கொள்வார்கள்.புதிது புதிதாக முளைப்பார்கள் இளைஞர்கள்.

தற்போது சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் பத்திரிக்கை முயற்சியை தொடங்கிப்பார்த்தார் நண்பர்.நிருபர்கள் ஒருவர் கூட வரவில்லை.இளம் பத்திரிக்கையாளர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.நண்பர் ஆச்சரியத்துடன் கூறுகிறார்இப்போதெல்லாம் மாறிப்போய்விட்ட்துஎன்னதான் நடந்த்து?’’ஒரு வேளை அவர்களெல்லாம் வலைப்பூ எழுதுகிறார்களோ என்னவோ’’என்றேன்.

உண்மையில் அந்தப் பத்திரிகையாளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.கண்ணில் இலட்சிய வெறியும்,தார்மீக கோபமும்,சமூகத்தின் மீது அக்கறையும் உள்ள இளைஞர்களை காலம் விழுங்கி விட்ட்து.பேனா மாற்றத்தை உருவாக்கித்தரும் என்று நம்பியவர்கள் அவர்கள்.கால ஓட்ட்த்தில் காணாமல் போனார்கள்.

செல்போன்கள் போன்று நுகர்பொருட்கள் அவர்களை சிதைத்தன.இரண்டு,மூன்று செல்போன்கள் இன்றைய நடைமுறை.தனக்கு,மனைவிக்கு,குழந்தைகளுக்கு விலை உயர்ந்த சாதன்ங்கள் தேவை.இல்லாவிட்டால் யார் மதிப்பார்கள்?அவன் வீட்டில் யார் பெண் எடுப்பார்கள்? யார் பெண் கொடுப்பார்கள்?

ஒரு அதிகாரியைப் பற்றி இரண்டு பக்கத்துக்கு எழுதுவதன் மூலம் அவனுக்கு என்ன கிடைக்கும்.தவிர,எழுதப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு சமூகம் நன்மையடைந்த்தா,ஆட்சியாளர்களை மக்கள் புறக்கணித்து ஒதுக்கி வெளியேற்றினார்களா அல்லது அரசு வாகனத்தில் பவனி வந்தார்களா என்பது நமக்கு தெரிந்த எளிய உண்மை.

பத்திரிகையாளன் பேரம் பேசாமல் இலட்சியத்துடன் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டானா?ஆனால் முழுதும் அப்படியல்ல!கொஞ்சம் தர்ம்ம் மிச்சமிருக்கிறது.நமக்கு கொஞ்சம் நம்பிக்கை..இதுவும் கடந்து போய்விடும்!


-

Sunday, January 23, 2011

சினிமா தவறென்கிறாய்


சினிமா தவறென்கிறாய்

அப்போது நெடுங்கதை?

நாவல் திரைப்படமானதை

கேட்ட்தில்லையா?

பாடல்

இசை

தாலாட்டு

நாட்டுப்புற பாடல்

மேலான காதல்

நான்

நீ

நாம்

எல்லாம் தவறா

இவையெல்லாம்

சினிமாவில் உண்டே

சிந்திப்பாயா நண்பனே?

சினிமா தவறா?

அதில் ஒரு பகுதியா?

-

Saturday, January 22, 2011

நெஞ்செரிச்சல்-அவசர வாழ்வின் கொடை


வழியில் கிடைத்த எதாவதொன்றை விழுங்கி விட்டு பறக்கும் இன்றைய அவசர யுகத்தில் இழந்தவற்றுள் முக்கியமானது நமது உடல்நலம்.ஆம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.உணவுக் குழாய் சுவர்களை அரிக்கும் ஒரு உடல் நலக்கோளாறு நெஞ்செரிச்சல்.உணவு செல்லும் பாதையில் அமிலம் பொங்கும் அவஸ்தை.

வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் உணவுப்பாதையில் நெஞ்சு வரை பயணித்து இதயத்தில் பிரச்சனையா என்று கவலைப்படும் அளவுக்கு வாட்டும்.உண்மையில் நெஞ்சுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.அப்பகுதியில் எரிச்சலும்,அரிக்கும் உணர்வு ஏற்படும் அவ்வளவே.

வழக்கமாக செரிமானம் ஆகாத உணவுகள்,-இவை பெரும்பாலும் மசாலா,துரித உணவுகள்-இக்கோளாறை உருவாக்கும்.புகை பிடித்தல்,மது,அளவுக்கதிகமான உணவு,கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்,அதிக எடை போன்றவையும் காரணம்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாத உண்வுகளை உண்பதாலும் ஏற்படும்.

பொதுவாக, தொண்டை,நெஞ்சு பகுதியில் எரிச்சல்,வயிற்றின் உணவு நுழையும் பகுதியில் வலி,வாந்தி,குமட்டல்,இருமல்,உடலின் பின் பகுதியில் கூட சிலருக்கு வலி இருக்கலாம்.இத்தகைய அறிகுறிகள் இருக்குமானால் உடனே கவனிக்க வேண்டும்.

நெஞ்செரிச்சலில் இருந்து காத்துக்கொள்ள


• புகை பிடித்தல்,மதுவை தவிர்ப்பது(ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும்)
• போதுமான அளவுக்கு நீர் அருந்துங்கள்.
• துரித உணவுகளை தவிர்க்கவும்
• அமிலம் சேர்க்கப்பட்ட குளிர்பான்ங்களை தவிர்த்து பழச்சாறுகளை தேர்ந்தெடுக்கவும்.
• வறுக்கப்பட்ட உணவு,எரித்த இறைச்சி போன்றவை செரிமானத்தின் எதிரி.
• காபி அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும்.
வயிற்றில் ஒரு பங்கு உணவு,ஒருபங்கு நீர்,ஒரு பங்கு காலியாக இருப்பது என்று தீர்மானித்துக்கொண்டால் அதிகம் தின்பதை தவிர்க்கலாம்.

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகள் ஒவ்வாமையை உருவாக்கலாம்.இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அத்தகைய உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.
-மருத்துவர் ஆனந்தகுமார் உதவியுடன் -

Thursday, January 20, 2011

சிறுத்தை-விகடனும் நானும்


வாரப்பத்திரிக்கை படிக்கத் தொடங்கிய நாளில் இருந்து ஆனந்த விகடனின் வாசகன் நான்.அதிக திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை.விகடனின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் பெரும்பாலான படங்களுக்கு சென்றிருக்கிறேன்.நானும் பிளாக்கில் எழுதும் முயற்சியை சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறேன்.

பொங்கலில் நேரம் கிடைத்த்தால் சிறுத்தை படம் பார்த்தேன்.எனக்கு பட்ட்தை நான்கு வரி எழுதி வைத்தேன்.விகடன் விமர்சனத்தோடு எனது வரிகளை ஒப்பிட்டு பார்த்த்தன் விளைவு இது.

விகடன்:

ஊரையே மிரட்டும் ரௌடிகள்,ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டு பழங்கஞ்சியை,பட்டாக்கத்தி,வெட்டுக்குத்து மசாலா பூசிப் படைத்திருக்கிறார்.

நான்:

ஒரே ஓர் ஊர் .அதில் ஒரு வில்லன்,அவனுடைய தம்பி,மகன் எல்லாம் வில்லன்கள் ,அவர்களுடைய அட்டூழியங்கள்,கஞ்சா,மந்திரி தொடர்பு,அடி,உதை,அவனுக்கு பயந்த மக்கள்,வில்லன் வீட்டில் ஒருகுத்துப்பாட்டு ,நேர்மையான போலிஸ் இதெல்லாம் இன்னும் குழந்தைகள் தியேட்டரில் பார்த்திருக்க மாட்டார்கள்

விகடன்:

தம்மாத்தூண்டு இடுப்பைத் திரையில் சரித்துக்கொண்டே நிற்கும் ‘லைஃப்டைம் கேரக்டர் தமன்னாவுக்கு,மற்றபடி விசேஷம் இல்லை.

நான்:

தமன்னாவை கதாநாயகி வேண்டும் என்பதற்காவும்,பாட்டுக்காகவும்,இடுப்புக்காகவும்,கிளைமாக்சுக்க்காகவும் புக் செய்திருக்கிறார்கள்.

விகடன்:

சம்பவங்கள் இல்லாத முதல் பாதி முழுக்க ‘சந்தான சாம்ராஜ்யம்

நான்:

இப்போது தமிழ் சினிமா நகைச்சுவைக்கு சந்தான யுகம் போல் தோன்றுகிறது.

விகடன்:

முதல் முறையாக இரு வேடங்களில் கார்த்தி..............................................................வெளுத்துக்கட்டியிருக்கிறார்.

நான்:

கார்த்தி இரண்டு பாத்திரங்களில் ஜொலிக்கிறார்.திருடனாக,இலட்சியமுள்ள போலிஸ் அதிகாரியாக இருவேறு முகங்களில் நறுக்.

விகடன்:

சிங்கத்தை பார்த்து சிறுத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.மதிப்பெண்.-39/100

நான்:

.பொழுது போகவேண்டும்,பணமும் இருக்கிறது என்றால் தியேட்டருக்குள் நுழையலாம்.

நீயெல்லாம் விகடனோடு ஒப்பிட்டு பார்ப்பதா? என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.இது சும்மா.


-

Tuesday, January 18, 2011

தரமான பொருளுக்கான இந்தியக்கனவு


நாம் கொடுக்கும் பணத்திற்கு தரமான பொருள்,சேவை கிடைக்கவேண்டும் என்று கருதுகிறோம்.ஆனால்,எடைகுறைவு,கலப்படம்,சேவைக்குறைபாடு,முறையற்ற வர்த்தகம்,ஏமாற்றி பொருளை தலையில் கட்டுவது போன்றவை நமது இன்றைய அவலங்கள்.தற்போதைய நுகர்வோர் கலாச்சாரத்தில் பெருமளவிலான தொல்லைகள் சந்திக்க நேரிடுகிறது.நுகர்வோர் என்ற சொல் பணம் கொடுத்து பொருளை,சேவையை பெறுபவரை குறிக்கிறது.சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதி வரை இதில் அடக்கம்.

வங்கியில்,பேருந்தில்,ரயிலில்,வர்த்தக நிறுவனங்களில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை களைய முடியும்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அதற்கு உதவுகிறது.ஒரு பொருளை வாங்கினீர்கள்.அதில் குறையிருப்பதாக கண்டறிந்தால் குறைகளை நீக்கித்தருமாறு அல்லது மாற்றித்தருமாறு கேட்க உங்களுக்கு உரிமை இருக்கிறது.அவர்கள் மறுத்துவிட்டால் நுகர்வோர் நீதி மன்றம் செல்ல முடியும்.மன உளைச்சலுக்கும் இழப்பீடு கோர முடியும்.

இந்தியாவில் நுகர்வோருக்கு எதிரான நடப்புகளுக்கும்,நுகர்வோர் நீதிமன்றம் செல்வதற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது.இந்தியன் தனது உரிமையை நிலைநாட்ட போரிடுவது மிகக்குறைவு.வேறு வேலை இருக்கிறது.அல்லது சினிமா பார்க்கவோ சீரியல் பார்க்கவோ செல்லவேண்டும்.திரையரங்கில் உள்ள சேவை குறைபாட்டுக்கு வழக்கு தொடுத்திருந்தால் பல அரங்குகள் தன்னை மாற்றிக் கொண்டிருக்கும்.இன்றைய அவசர யுகத்தில் இதையெல்லாம் யார் பெரிதுபடுத்துவது என்று நினைக்கலாம்.

நுகர்வோர் நலனுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மிகக்குறைவு.இதிலெல்லாம் அதிக பணம் கிடைக்காது.மாவட்டத்திற்கு மூன்றோ,நான்கோ இருக்கின்றன.மத்திய,மாநில அரசுகள் அளிக்கும் நிதியுதவிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் கிடைக்கிறது.இவை ஆண்டுக்கு சில ஆயிரங்கள்.பள்ளி,கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துகிறார்கள்.

நம்மில் எத்தனை பேர் மருந்துக் கடையில் பில் கேட்டு வாங்குகிறோம்?பில் இல்லாமல் இருநூறு ரூபாய் குறைவு என்றால் அங்கே ஒடுபவர்கள்தான் அதிகம்.அதில் ஏதேனும் குறையிருந்தால் கேட்க சட்டப்படி உரிமை இல்லை.யார் திருத்துவது?பணம் மிச்சமாவதும் இலவசமும்தான் நமக்கு முக்கியமாக தெரிகிறது.நாளைய சங்கடங்கள் அல்ல.தள்ளுபடி என்பது இன்னொரு இன்னொரு ஏமாற்று வேலை.ஆனால்,இந்தியக் குடிமகனுக்கு பிடித்தமானது.

நமது உரிமைகளை நாம் பயன்படுத்தாத வரை தரமான பொருளுக்கான நமது கனவு கனவாகவே இருக்கும்.ஆபத்தான ஒன்றை பணம் கொடுத்து கடையில் வாங்கி வரும் அதி புத்திசாலி இந்தியனாகவே நாம் இருப்போம்.உரிய ஆவணங்களுடன் ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்குவது என்றுநாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.குறைபாட்டை சட்டத்தின் கைக்கு கொண்டு செல்வதன் மூலம் நமது கனவு நிறைவேறலாம். -

Sunday, January 16, 2011

சிறுத்தை -ரீமேக் மிமிக்ரி


ஒரே ஓர் ஊர் .அதில் ஒரு வில்லன்,அவனுடைய தம்பி,மகன் எல்லாம் வில்லன்கள் ,அவர்களுடைய அட்டூழியங்கள்,கஞ்சா,மந்திரி தொடர்பு,அடி,உதை,அவனுக்கு பயந்த மக்கள்,வில்லன் வீட்டில் ஒருகுத்துப்பாட்டு ,நேர்மையான போலிஸ் இதெல்லாம் இன்னும் குழந்தைகள் தியேட்டரில் பார்த்திருக்க மாட்டார்கள்.

இப்போது தமிழ் சினிமா நகைச்சுவைக்கு சந்தான யுகம் போல் தோன்றுகிறது.குரு உச்சத்தில் இருக்கும் நேரம்.படத்தை காமெடிதான் கொஞ்ச நாளைக்கு ஓடவைக்கும்.கொடுக்கும் காசுக்கு ராக்கெட் ராஜா கார்த்தியும்,சந்தானமும்தான் புண்ணியம் கட்டிகொள்கிறார்கள்.

விறுவிறுப்பான படமாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் முன்பே பார்த்துவிட்டது போல தோன்றிக்கொண்டே இருக்கிறது.தமன்னாவை கதாநாயகி வேண்டும் என்பதற்காவும்,பாட்டுக்காகவும்,இடுப்புக்காகவும்,கிளைமாக்சுக்க்காகவும் புக் செய்திருக்கிறார்கள்.

கார்த்தி இரண்டு பாத்திரங்களில் ஜொலிக்கிறார்.திருடனாக,இலட்சியமுள்ள போலிஸ் அதிகாரியாக இருவேறு முகங்களில் நறுக்.காமெடியில் சந்தானத்தோடு போட்டி போடுகிறார்.அதிகம் சொல்ல எதுவுமில்லை.பொழுது போகவேண்டும்,பணமும் இருக்கிறது என்றால் தியேட்டருக்குள் நுழையலாம். -

Thursday, January 13, 2011

காமராஜர், எம்.ஜி.ஆர்.வழியில் ..........

காமராஜரும்,எம்.ஜி.ஆரும் எளிய,ஏழை உள்ளங்களிலும் புகழ் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.அவர்களது மங்காத புகழுக்கு காரணம் அனைவரும் அறிந்ததுதான்.அவர்களது தொண்டுள்ளத்தில் முக்கியமான திட்டம் உணவு.காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்.பசித்த வயிறுகளை கவனத்தில் கொண்டோர் என்றும் இறப்பதில்லை.அதுவும் குழந்தைகளின் பசி என்பது கொடூரமான வெளியில் வராத நெருப்பு.பசி வந்திட பத்தும் பறந்து போக கல்வி எங்கே நிற்கும்?

இந்து மத சடங்குகளில் ,பரிகாரங்களில் அன்னதானம் முதலிடத்தை வகிக்கிறது.கோயில் சந்நிதியில் அன்னதானம் செய்வதாக கடவுளிடம் பேரம் பேசுபவர்கள் (வேண்டுதல்) நம்மிடையே உண்டு.பல தோஷ நிவர்த்திகளுக்கு அன்னதானம் பரிந்துரைக்கப்படுகிறது.மற்றவர்களுக்கு உணவளிப்பது நமது பண்பாட்டில் கலந்திருக்கும் ஒரு செயல்.

பெங்களூரு பதிவர் சந்திப்பு பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.அக்ஷய பாத்திரம் என்பது பற்றிய பொருள் என்ன என்பது ஒருவர் கேட்டார்.அள்ள அள்ள குறையாத பாத்திரம் என்று விளக்கி மகாபாரதத்தை உதாரணமாக காட்டினார்அந்நிறுவன தலைவர்.நம்மிடையே மணிமேகலையும்,ஆபுத்திரனும் உண்டு.நல்ல விசயங்களுக்கு மற்ற இடத்தில் ஒரு உதாரணம் இருந்தால் தமிழில் இரண்டு உதாரணம் இருக்கிறது.

பசியில் முறைமுகப்பசி(indirect Hunger) என்றொரு வார்த்தை எனக்கு தோன்றுகிறது.உடலுக்கும்,மன நலனுக்கும் தேவையான சத்துக்கள் இல்லாத நிலை.ஏதோ ஒன்றை வயிற்றை நிரப்பினால் மட்டும் போதாது.உயிர்ச்சத்துக்கள்,தாதுக்கள் என நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மனதிற்கும் உடலுக்கும் அவசியம்.ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் இந்தியாவில் அதிகம்.

அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனம்-பெங்களூரு 1,281,664 குழந்தைகளுக்கு பல்வேறு மாநிலங்களில் சத்துணவை வழங்கிக்கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டுக்கு தேவைப்படவும் இல்லை.முதல்வரின் முட்டைகள் முக்கியமானது.மாநில அரசு மான்யங்கள் உள்ளிட்ட நிதியுதவி இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.நன்கொடைகள் எதிர்பார்க்கும் இந்நிறுவனத்தை http://www.akshayapatra.org சென்று பார்க்கலாம்.ஆம்.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!தமிழர் திருநாளில் நமது பண்பாட்டை நினைவு கூறவே இப்பதிவு.

இதயங்கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் -

Tuesday, January 11, 2011

திருப்பூர் குமரன்



உனது செந்நிறக் குருதியால்

புனிதமடைந்தது நம் தாய்மண்

கொடிக்காக இன்னுயிர்

மண்ணுக்காக ரத்தம்

பட்டொளிவீசி பறக்கிறது

நம் தேசியக்கொடி இன்று

உன் புகழைப் பரப்ப

புவியில் காற்றுள்ளவரை

உன் பெயரை ஒலித்துக்கொண்டிருக்கும்

நீ தாங்கிய கொடி

கருப்பாயி ஈன்ற மகன்

காலத்தை வென்ற நாளில்

வணங்குகிறேன்.
(நேற்று எழுதியது )

-

Sunday, January 9, 2011

IndiBlogger சந்திப்பில் தமிழ் பிளாக்கர்ஸ் ராக்!



பெங்களூருவில் நடைபெறும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு IndiBlogger-ல் இருந்து மெயில் வந்திருந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் எனக்கு இரண்டு மணி நேர பயணம்தான் என்பதாலும் கலந்து கொள்ள முடிவுசெய்து பதிவு செய்தேன்.ஈரோட்டில் நடைபெற்ற சந்திப்பு போலல்ல இது.ஏழை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அக்ஷய பாத்ரா என்னும் தொண்டு நிறுவனத்திற்கு உதவுவதற்கான சந்திப்பு.ஏற்பாடு அனைத்தும் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள ஹரே கிருஷ்ணா கோயிலுடன் இணைந்த --அந்நிறுவனமே.இது ஐந்தாவது சந்திப்பு என்றார்கள்.

கோவிலின் உள்ளே உள்ள அரங்கில்தான் சந்திப்பு.வெளியிலிருந்து பார்க்கும்போதே தமிழர்களின் உழைப்பில் உருவான பிரமாண்டம் என்பது நினைவுக்கு வந்தது.பிரபலமான அந்த ஆலயத்தின் கட்டுமான பணியாளர்கள் அனைவரும் தமிழர்களே! பல ஆண்டுகள் எங்கள் ஊரிலும்,சுற்றியுள்ள ஊரைச்சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்ததுஅந்தக்கோயில்.வாயிலில் டி-சர்ட் அடையாளத்தோடு நின்றிருந்தவர் உதவியுடன் அரங்கத்தை அடைந்தேன்.இளம்பெண்கள் இரண்டுபேர் என்னுடைய இ-மெயில் முகவரியை அங்கிருந்த கணினியில் டைப் செய்யுங்கள் என்றார்கள்.டைப் செய்தவுடன் ஹலோ,சண்முகவேல் என்றது திரை.நான் தான் என்று உறுதிசெய்து மதிய உணவு கூப்பன்,பழச்சாறுடன் உள்ளே அனுப்பினார்கள்.

அரங்கினுள்ளே மூன்றாவது வரிசையில் இரண்டுபேர் மட்டும் அமர்ந்த்திருந்தார்கள்.ஒரு இருக்கையை விட்டு தள்ளி அமர்ந்தேன்."எங்கிருந்து வருகிறீர்கள்?''.என்று கேட்டேன்.என்னுடைய அதிர்ஷ்டம் அவர் சென்னை தமிழர்.எங்கு சென்றாலும் நமக்கு ஆள் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.பிரேம் என்பது அவருடைய பெயர்.சாப்ட்வேர் எஞ்சினியர்.தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றுமாக இரண்டு வலைப்பதிவுகள்.அதிகம் எழுதுவதில்லைஎன்றார்.வால்பையனின் தீவிர வாசகர்.மற்ற பிரபலமானவர்கள் யாரையும் அதிகம் தெரிந்திருக்கவில்லை.

அறுபது வலைப்பதிவர்கள் மட்டுமே அறிமுகம் செய்துகொள்ள அனுமதித்து அவர்களே தேர்வு செய்திருந்தார்கள்.எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.என்னைப்பற்றி கூறும்போது வலைப்பதிவு முகவரி ,பெயர்,முகவரி கணினி திரையில் தெரிந்தது.அறிமுகம் செய்து கொண்டு Tamil Blogger thanks to IndiBlogger என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.வந்திருந்தவர்களில் நான் மட்டுமே தமிழில் மட்டும் எழுதுபவன்.கன்னடத்தில் ஒருவர்.இந்தி உள்பட வேறு இந்திய மொழிகளில் பதிவிடுபவர்கள் யாருமில்லை.தமிழின் பெயர்சொல்ல நான்இருந்தேன்.

கலந்துகொண்ட வலைப்பதிவர்களில் பெரும்பாலானோர்பெங்களூரு.கொல்கத்தா,மும்பையிலிருந்தும்வந்திருந்தார்கள்.தமிழர்கள் சென்னை,கோவை,ராஜபாளையம் என்று வந்திருந்தாலும்ஆங்கிலத்தில் எழுதும் பதிவர்களே! பெங்களூருவில் அண்ணன்,தம்பி என இரண்டு தமிழர்கள் இருந்தார்கள்.ஒருவர் தமிழிலும் ஒரு வலைப்பதிவு பதிவு செய்திருக்கிறேன் என்றார்.சந்திப்பின் நோக்கம் பற்றி விளககிவிட்டு மதிய உணவுக்கு அனுப்பினார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு சார்ட்(chart) கொடுத்தார்கள்.முதுகுக்கு பின்னால் கட்டிக்கொண்டு மற்றவர்களிடம் கருத்துரை (comment)வாங்கவேண்டும்.இங்கேயுமா? எனக்கு வழக்கமாக ஒரு கமென்ட் வந்தாலே அதிசயம்.அங்கே பதினெட்டு வந்தது.அதில் முக்கியமானவை,

தமிழ் ப்ளாக்கர்ஸ் ராக்

மெல்லத்தமிழ் இனி வாழும்

தமிழனா? கொக்கா?

நம்ம ஆட்கள் வந்திருந்ததே ஆறு பேர்தான்.அவர்கள் கருத்துரை இது.எழுபதுக்குமேல் நான்குபேர் கமென்ட் வாங்கியிருந்தார்கள் .அவ்ரர்களுக்கு பிரேம் போட்ட குழந்தைகள் படம் படம் பரிசளித்தார்கள்.குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டம் பற்றி விவாதம்,கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது.பிறகுநான்கு குழுவாக பிரித்து ஆளுக்கொருதலைப்பில் விவாதம்
வைத்தார்கள்.எனக்கு நேரமாவதால் விடைபெற்றுக் கொண்டேன்.


அக்ஷய பாத்ரா திட்டத்தின் தலைவர் பேசும்போது,"சந்திப்பிற்கு பிறகு வலைப்பதிவர்கள் அன்னதான திட்டம் பற்றி பதிவிடுவதன் மூலமாக தாங்கள் பெரிய அளவு நன்மையடைந்து வருவதாக" குறிப்பிட்டார்.வலைப்பதிவர்களின் ஆற்றல் சாதனைகளை நிகழ்த்தும்.நன்மை பயக்கும் மாற்றங்களை கொண்டுவரும்என்ற என்னுடைய எண்ணம் உறுதியான ஒரு சந்திப்பாக அமைந்தது.
-

Friday, January 7, 2011

பாலியல் மூடநம்பிக்கைகள் -18+


அறிவியல் சார்ந்து நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்கிறோம். மதம் சார்ந்த சில சடங்குகள்,நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக அறியப்பட்டுள்ளன.அவற்றை ஒழிப்பதற்கு இயக்கங்கள் தோன்றின.தொடர்ந்து விவாதங்களும் இருந்து வருகின்றன.பாலியல் சார்ந்த நம்பிக்கைகள் மட்டும் இன்னமும் ரகசியமாகவே சமூகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கலாம்.

பாலியல் தொடர்பான சந்தேகங்கள் யாருக்கும் இல்லையா?அந்த சந்தேகங்களை எப்படி தீர்த்துக்கொள்கிறான்?.இன்டர்நெட்டில் அதிகமாக தேடப்படும் பொருள் செக்ஸ் என்று அறிகிறோம்.எதை தேடிக்கொண்டிருக்கிறான்?"சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை"-என்றால் என்ன தெரிந்துகொள்ள இத்தனை ஆவல்?இது தொடர்பாக நண்பர்களும்,சுற்றியிருப்பவர்களும் தரும் நம்பிக்கைகள்தான் ஒருவனது கல்வியாக இருக்கிறது.

ஒரு சிறு நகரத்தின் ஒரே தெருவில் பத்தாம் வகுப்பு வரை படித்த இரண்டு ஆண்கள்.இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுடையவர்கள்.திருமணமானவர்கள்.பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், பாதுகாப்பான உடலுறவு பற்றி அவர்களிடம் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் பேசினார்.ஒருவர் உடலுறவையே மறுத்தார்.அவரது நம்பிக்கை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்.இன்னொருவர் நீர் விட்டுக்கொண்டிருந்தால்தான் குழந்தை நன்றாக வளரும் என்றார்.

ஒரே தெருவில் இருவேறு நம்பிக்கைகளை யார் உருவாக்கியது.அவரவர் நண்பர்கள் வட்டமே.இரண்டாமவர் நம்பிக்கை தனது நோயை மனைவிக்கும் தொடர்ந்து குழந்தைக்கும் பரப்பும் ஆபத்தை கொண்டிருக்கிறது.கன்னிப்பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணுறுப்பில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.இந்த நம்பிக்கை குழந்தைகள்,சிறுமிகளையும் வன்முறைகளுக்கு உள்ளாக்குகின்றன.

பாலியல் சார்ந்த மூட நம்பிக்கைகளை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?அவை தனிமனிதனை உளவியல் ரீதியாக பாதிக்கச்செய்து அவனது இயல்பு நிலையை முடக்குகிறது.உதாரணம்.சுய இன்பம் பற்றிய தவறான நம்பிக்கைகள்.சமூக சீர்கேட்டை உருவாக்குகின்றன..(sexual abuse- போன்றவை ),சில நம்பிக்கைகள் குடும்பத்தில் குழப்பத்தையும்,கள்ளக்காதல் போன்ற உறவுகளையும் உருவாக்கலாம்.எடுத்துக்காட்டாக பிறப்புறுப்பு அளவுகள் பற்றிய மூட நம்பிக்கைகளை சொல்லலாம்.எச்.ஐ.வி./எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களும் பரவிக்கொண்டிருக்கின்றன.

தற்போது நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன.சில ஆயிரம்பேர் அவற்றை படித்திருக்கலாம்.சமூகத்தில் பெருவாரியான மனிதர்களிடம் மூட நம்பிக்கைகளை எப்படி அகற்றுவது? உங்களிடம் சிந்தனையை உருவாக்கவும்,ஆலோசனைகளை பெறவுமே இந்த பதிவு. -

Tuesday, January 4, 2011

தமிழன் என்ற சொல்


தமிழன் என்ற சொல்

குற்ற உணர்வு தரும்

சொல்லாகிவிட்டது
எனக்கு

இறக்கும் வரை

தவிக்க வேண்டும்

நெஞ்சில் குத்திய

முள்ளுடன்

முள்ளும் வேலியும்

உடல்சுற்றி

கனவில்

கனவு கலைந்து

தாகத்தில்

நீர் அருந்தும்போது

நினைவுக்கு வருகிறது

உயிர் நீரும்

வாய்க்காத

உதிரங்கள்
-

Monday, January 3, 2011

மக்களின் மனங்கவர்ந்த போலி டாக்டர்கள்

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நீங்கள் அவர்களை பார்க்கலாம்.யாரோ உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு சைக்கிளில் அல்லது நவீன இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கே வந்து ஊசி போட்டு மாத்திரையும் தருவார்.அழைத்தவுடன் வீட்டுக்கு வந்து நிற்பார்.கேட்கும் பணத்தில் கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்தாலும் பரவாயில்லை.அப்புறம் தருகிறேன் என்று கூட -கடன்-சொல்லிக்கொள்ளலாம்.கிராமத்தில் இருப்பவருக்கு அவர் டாக்டர்.

மக்களின் மனங்கவர்ந்த இந்த டாக்டர்கள் பத்தாம் வகுப்போ அல்லது பனிரெண்டாம் வகுப்போ படித்திருப்பார்கள்.சுகாதாரத்துறையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்,பணியாற்றுபவர்கள்,மருத்துவம் தொடர்பான பார்மசி,லேப் டெக்னிஷியன் படித்தவர்கள் ஆகியோர் இப்பணியை தொழிலாக கொண்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.மேற்கண்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு தனியாக தொழில் தொடங்கி புகழ் பெற்றவர்களும் உண்டு.

கிராமத்தில் -ஏன் சில சிறு நகரங்களில்-நுழைந்து விசாரித்தால் இவர்கள் மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார்கள் என்பது தெரியவரும்.மேலே தெரிவித்துள்ள காரணங்கள் தான்.கடன் சொல்லலாம்.கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்.எந்த நேரத்துக்கும்,எந்த இடத்துக்கும்.செலவும் குறைவு.என்னென்னவோ பரிசோதனை எல்லாம் செய்யத்தேவையில்லை.

படித்த மருத்துவரிடம் செல்ல வேண்டுமானால் நகரத்துக்கு செல்ல வேண்டும்.பணமும் நிறைய தேவை.மருந்துக்கும் மற்ற பரிசோதனைக்கும் நிறைய செலவு.தவிர கிராம மக்களுக்கு புரிகிற மாதிரி சொல்வதுமில்லை.பாதி நாள் வீணாகிவிடுகிறது.வீட்டைப்பார்த்துக்கொள்ள ஆளில்லை.

உழைக்கும் கிராம மக்களில் பெரும்பாலோருக்கு அப்படியென்ன வரக்கூடாத வியாதி வந்து விடப்போகிறது.சாதாரண காய்ச்சல்,சளி,பேதி,போன்றவைகளுக்கு இந்த டாக்டர்கள் போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.கொஞ்ச நாள்! பார்த்துவிட்டு மீறிப்போனால் அரசு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று சொல்கிறார்கள்.இவர்களெல்லாம் முறையாக மருத்துவம் படிக்காதவர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

சில நேரங்களில் கொலையாளிகளாகவும் மாறிப்போவதை நான் பார்த்திருக்கிறேன்.நள்ளிரவு படுக்கையிலேயே ஒன்பது வயது சிறுமியை பாம்பு கடித்துவிட்டது.அந்த போலி டாக்டருக்கு போன்செய்தார்கள்.வந்து என்ன பாம்பு என்று கேட்டார்? "தெரியவில்லை.போய் விட்டது"என்றார்கள்.ஏதோ ஊசியை போட்டு விட்டு பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.காலையில் அந்த சிறுமி உயிருடன் இல்லை. -