தீபாவளி கூட்டத்தால் கிட்டத்தட்ட திரையரங்கம் நிரம்பிவிட்டிருந்தது.தீபாவளி
படங்களில் பாண்டியநாட்டுக்கு பலர் பரிந்துரை செய்கிறார்கள்.வழக்கமான பழிவாங்கும்
கதைதான் என்றும் சொல்லக்கூடும்.ஓரளவு திரைக்கதை அமைந்துவிட்டால் பழிவாங்கும்
கதைகள் வெற்றிபெற்றுவிடுகின்றன.வழக்கமாக நாயகனைத்தவிர்த்து மகனைக்கொன்றவர்களைப்
பழிவாங்க தந்தையும் களத்தில் இறங்குகிறார்.
தந்தையாக பாரதிராஜா நடிப்பிலும் இமயம்தான் என்று உறுதி சொல்கிறார்.பெற்றபிள்ளையை
இழந்து தவிக்கும் தந்தையின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.நிறைய விமர்சனங்கள்
வந்துவிட்டது.தமிழ்சினிமா ரசிகர்கள் ஒருமுறையாவது பார்த்துவிடத்தான் போகிறார்கள்.போகட்டும்.பழிதீர்க்கும்
கதைகள் ஏன் மனித மனங்களைக் கவர்கின்றன?
பாரதிராஜா,விஷால்தான் பழிவாங்குகிறார்கள் என்று சொல்லமுடியாது.நமது
இதிகாசங்கள் பழிதீர்ப்பதில் மையம் கொண்டிருக்கின்றன.அத்தை
சொல்லிக்கொண்டிருப்பாள்.கூனியால்தான் இராமாயணம்,இராமன் சிறுவயதில் கேலி செய்ததற்கு
பழிவாங்கிவிட்டாள்.பாஞ்சாலி பாரதப்போரில் பழிதீர்த்துக்கொண்டாள்.மனிதன் சமன்
செய்யாமல் விடவேமாட்டான்.
மனிதன் எப்போதும் பழிவாங்கவே காத்திருக்கிறான்.கிராமத்தில் ஒரு விஷயம்
சொல்வார்கள்.கொம்பேறிமூக்கன் பாம்பை அடித்து விட்டுவிடக்கூடாது.அது பழிதீர்க்காமல்
விடாது.கொத்தி சாகடித்துவிட்டு சுடுகாட்டுக்குச் சென்றுவிடுமாம்.இறுதிச்சடங்கை
மரத்தின்மீதேறி பார்த்து உறுதிசெய்யும்வரை விடாது என்று சொல்வார்கள்.
சினிமாவில் எப்படிஎப்படியோ
பழிதீர்த்துவிட்டார்கள்.ஆவியாக,பாம்பாக,ஈயாக,உருவத்தை மாற்றிக்கொண்டு என்று
பலகதைகள்.மனித மனங்களோடு இந்த உணர்வு ஒன்றியிருப்பதால்
வெற்றிபெற்றுவிடுகிறது.நிஜத்திலும் பழிதீர்க்கும் கொலைகளுக்கு அளவே இல்லை.கத்தி
எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது சொல்லப்பட்டுவிட்டது.பள்ளம் சரி
செய்யப்படவேண்டும்.
உணர்வு ரீதியாக காயம்பட்டவர்கள் வஞ்சம் தீர்க்க காத்திருக்கிறார்கள்.அவமானப்படுத்தியவனை,நாலுபேருக்கு
முன்னால் விமர்சித்தவனை யாரும் மறப்பதில்லை.தங்களது முறைக்காக
காத்திருக்கிறார்கள்.நான் அப்போதே சொன்னேன் என்று சொன்னால் அவர்
பழிதீர்த்துவிட்டார் என்று பொருள்.
குடும்பங்களில் பெரும்பாலான பிரச்சினைகளை இது கொண்டுவருகிறது.இருவரில்
ஒருவர் பாதிக்கப்பட்டால் பழி தீர்ப்பதற்காக காத்திருப்பார்.திருமணத்தன்று
சொல்லிக்காட்டியதை பலவருடங்களுக்குப்பிறகும் பேசுவதைக்
கவனித்திருக்கமுடியும்.கணவன் வீட்டாரை மனைவியும்,மனைவி வீட்டை கணவனும் கவனிப்பதில்
பழி தீர்ப்பதுண்டு.
மொட்டைக்கடுதாசி,போட்டுக்கொடுப்பது,வதந்தி பரப்புவது போன்றவை பழிதீர்க்கவும்
முகம் காட்டுகின்றன.நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துவதற்காக பழிவாங்கும் கதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.வாய்ப்புக்கிடைக்கும்போது
மற்றவர்களை காயப்படுத்தினால் அவர்கள் நமக்காகக் காத்திருப்பார்கள்.அன்பைச்செலுத்தினாலும்
அப்படியே காத்திருப்பார்கள்.
1 comment:
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
Post a Comment