Tuesday, September 24, 2013

கணவனோ,மனைவியோ விட்டுக்கொடுத்தால் என்ன நடக்கிறது?



தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துபோகவேண்டும் என்று சொல்கிறார்கள்.விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்றும் சொன்னார்கள்.பதிவுலகம் அறிந்த திண்டுக்கல் தனபாலன் முந்தைய பதிவுக்குஇப்படி கருத்துரை இட்டார், விட்டுக்கொடுத்(த்)தால்...? எதை விட்டுக்கொடுக்கிறார்கள்? தன்னுடைய கருத்து சரியல்ல என்று ஒப்புக்கொண்டு அமைதியாகிவிடுவார்களா?


பொறுத்துப்போகவேண்டும், விட்டுக்கொடுக்கவேண்டும்,அட்ஜஸ்ட் செய்து போகவேண்டும் என்பதெல்லாம் காலம்காலமாக இருந்து வருகிறது.கவனித்துப்பார்த்தவர்கள் இதில் உள்ள உண்மையை புரிந்து கொண்டிருப்பார்கள்.இவையெல்லாம் பெண்ணுக்காக சொல்லப்பட்டு வருகின்றன.குடும்பப் பிரச்சினையின் போது பலரும் பெண்ணைப்பார்த்துத்தான் விட்டுக்கொடுத்துப்போ என்கிறார்கள்.

சுமார் இருபது ஆண்டு காலமாக பொறுமையாக விட்டுக்கொடுத்து வந்தவரை எனக்குத்தெரியும்.கணவரின் நடத்தையை ஊரில் உள்ளவர்களும் விமர்சிக்கவே செய்தார்கள்.அவர்களுக்கு ஒரே மகன்.மகனுக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு தாயும் மகனும் பக்கத்து நகரத்தில் வாடகை வீடு பார்த்து போய்விட்டார்கள்.போகும்போது அவருக்கு சொல்லவில்லை.


சொந்தவீட்டை விட்டு வந்து விட்டதைப்பற்றி அவரிடம் கேட்டேன்.நான் மட்டும் எத்தனை நாளைக்கு பொறுத்திருப்பது? இப்போதும் அவர் மாறவில்லை.மகனுக்கும் அவரைப் பிடிக்கவில்லை.ஆமாம்,அது-எது சொல்லப்பட்டதோ அது மிகச்சரிதான்.விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.ஒருநாள் அவர்கள் நிம்மதியைப்பெற்றுவிடுகிறார்கள்.பொறுத்துப்போகாதவர் நிலை இன்று பரிதாபம்.

சென்ற பதிவிலேயே இந்தவரிகள் இருக்க்கின்றன.அட்ஜஸ்ட் செய்து போவது என்பது வெயிலைச் சமாளிக்க குளிர்நீர் அருந்துவது போலத்தான்.சூட்டை உணர்ந்துதான் ஆகவேண்டும்.வெகுநேரம் தாங்காது.கொஞ்சநேரத்தில் மீண்டும் வியர்க்க ஆரம்பிக்கும்.சமாளிப்பது என்பது  பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக ஆகாது.ஒவ்வொருமுறை விட்டுக்கொடுக்கும்போதும் கொஞ்சம்கொஞ்சம் சேர்ந்து கொண்டிருக்கிறது.


ஆணோ,பெண்ணோ ஒருவரும் தன் கருத்து சரியல்ல என்று ஒப்புக்கொள்வதில்லை. அது உடனடியாக அவர்களது சுயமதிப்பைக் குறைக்கிறது.உண்மையாகவே தவறு என்று தெரிந்தபிறகும் சப்பைக்கட்டு கட்டுபவர்களையே அதிகம் பார்க்கமுடியும்.தன்னை ஒருவர் வெல்வதை மனிதமனம் ஏற்றுக்கொள்வதில்லை.தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்கும்.ஏதோ ஒருவகையில் தந்திரங்களைப் பயன்படுத்தியாவது வெற்றி பெற்றுவிடும்.
-

1 comment:

நிலாமகள் said...

பிரச்சினையின் வேர் புலப்படுகிறது.