Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, February 13, 2012

மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!



                                பொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும் இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாக உணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்த விவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மை இருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலை செய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும் நாயகர்கள் இன்னும் இன்னும்.....

                                 மெரினாவில் சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறது மெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும் சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போது சுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம் கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின் உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்கு கற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன் என்று பாண்டி சொல்கிறான்.

                                   முதியவர்களை தெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீது பேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும் நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்க வேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன் தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரான தமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காக என்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.

                                 பாடல்கள் அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டி ஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியை துவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும் காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியை தோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றைய சமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.
-

Thursday, January 19, 2012

நண்பனின் பொங்கல் வேட்டை.

சினிமாவுக்கு போகலாம் என்று அழைத்தான் நண்பன். 5 காட்சியா? டேய் நீ எந்த காலத்துலடா இருக்கே? அதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு! அவனவன் 4 காட்சி ஓட்டறதுக்கே கண்ணுமுழி பிதுங்கி கிடக்கிறான்.பழைய காலத்து ஆளாக இருக்கிறானே என்று  நினைத்திருக்க வேண்டும். அதெல்லாம் போகில எரிச்சாச்சு என்றான்.நான் சொன்னேன்,இதற்கும் போகிக்கும் என்ன சம்பந்தம்? மழைக்காலம் முடிந்து ஈரத்தில் பழைய துணிகள் போன்றவற்றில் பூஞ்சை தொற்றியிருக்கும்.அவற்றை எரிப்பதற்கு சரியான நேரம் இது.ஒரு மாதம் கழித்து வெயில் ஆரம்பித்துவிடும்.போதும் நிறுத்து!சினிமாவுக்கு போகலாமா? வேண்டாமா?
                               கிராமத்தில் போரடிப்பது போல ஆகிவிடுகிறது.ஒலிப்பெருக்கி சத்தம் பல நேரங்களில் இனிமையாக இல்லை.கோயிலின் முன்னால் மாடுகளை கொண்டுவந்து நிறுத்தினால் இவ்வளவுதானா? என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறது.எனக்கும் சினிமாவுக்கு போகலாம் என்று தோன்றியது. சரி,எந்த படம் நல்லா இருக்காம்? என்றேன்.விமர்சன்ங்களை கூட படிக்க முடியவில்லை.கணினியை பார்த்து சில நாட்கள் ஆகிறது.ஏதோ ஒண்ணு வாடா! பொழுது போனா சரி! பழைய விஷயங்களை பேசிக் கொண்டே பயணம் .ஒரு மணி நேரத்திற்கு முன்பே அரங்கம் முன்னால் அலைந்து முட்டிமோதி டிக்கெட் வாங்கி சினிமா பார்த்த சிறுவயது அனுபவம் இப்போது இருக்காது.
                                நண்பன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போய் நின்றோம்.50 ரூபாய் டிக்கெட்.ஹவுஸ்புல் என்று ஒரு தகவல் பலகை இருக்கும்.அதை என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.அதையும் போகியில் போட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எரித்து விட்டிருப்பார்களோ? இருக்கைகள் காலியாக இருந்து கொண்டிருந்த்து.படம் ஆரம்பிக்கவில்லை.சலிப்பாக இருக்கிறது.பேசாமல் ஏதேனும் இணைய மையத்துக்கு போயிருக்கலாம்.பதிவுகளை படித்து கருத்துரை சொல்லியிருக்கலாம்.ஆனால் திறந்திருப்பது சாத்தியமில்லை.
                                                                           சத்யன் மெஷினுக்கு வரையறை சொல்லும்போது நண்பன் சொன்னான்.நல்ல விஷயம் இல்ல!படம் அவன் சொன்னதைப் போன்று முக்கியமான ஒன்றை பேசுவதாகவே படுகிறது.மனப்பாட கல்வி,இன்றைய சாரமற்ற பயனில்லாத கல்விமுறை,இறுக்கமான கிளிப்பிள்ளை ஆசிரியர்கள்,பெற்றோர்களின் ஆசைக்கு கனவுகளை,திறமைகளை பலியாக்கும் பிள்ளைகள்.இவையெல்லாம் அதிகம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.சமூக மாற்றத்தை கோருபவை.ஆனால் நண்பன் சொல்ல வந்த செய்தியை மனதில் பதிய வைத்த சினிமாவா? படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் யாரும் இதைப்பற்றி பேசியதாக தெரியவில்லை.எத்தனை சினிமா விமர்சனம் இந்த பார்வையை கொண்டிருக்கிறது என்று வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.
                                 சினிமா என்றில்லாமல் எந்த படைப்பும் சொல்லும் விதம்தான் மனதில் பதிய வைக்கிறது.நண்பன் இந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை.தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரச்சினை உண்டு.நல்ல கதையை தேர்வு செய்த பின்னரும் குழம்பித்தவிக்கும்.சி செண்டரில் ஓடாது இரண்டு ஃபைட் வேண்டும் என்பார்கள்.கவர்ச்சி இல்லையே என்று ஆலோசனை சொல்வார்கள்.நல்ல முயற்சிகள் சில வெற்றி பெற்ற பின்னரும்கூட இதுதான் நிலை.ரீமேக் படம் என்பதால் ரொம்ப யோசித்து நட்சத்திரங்களை தேர்வு செய்திருக்கிறார் சங்கர்.வேறு நடிகர்கள் பொருந்துவார்களா என்பது சந்தேகம்.பலரையும் போலவே அந்த வறுமையை கேலி செய்த விதம் வருத்தமான விஷயம்.அதிகமும் அப்படியான ஏழைகளைக் கொண்ட இந்தியாவில் சமூக அச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
                                அடுத்து வேட்டை என்றொரு படம் வந்திருக்கிறது.அடுத்த நாட்களில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை நண்பர்கள் உருவாக்கினார்கள்.வழக்கமான லிங்குசாமியின் பரபரவிறுவிறு படம்.இம்மாதிரி படங்கள் வசூலாகித்தான் விடுகின்றன.சிறுவர்கள் பட்டம் அறுத்த பிரச்சினையில் சண்டை ஆரம்பிக்கும்போது விசில் சத்தம் காதைக் கிழித்துப்போனது.விஷயம் இருக்கிறதோ இல்லையோ யாராவது விசில் அடித்தால் பலரும் கிளம்பிவிடுவது தியேட்டரின் இயல்பு.மனதில் அடுத்தவனை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருக்கிறது.அடிப்பது சந்தோஷமான விஷயம் ஆகிவிடுகிறது.ரௌடி,சவால் விடுவது,அடிதடி,மிரட்டல் இதெல்லாம் பார்த்த விஷயம்தானே என்றேன்.பொழுது போச்சு இல்லையாடா?என்றான் நண்பன்.சரிதான்.
-

Monday, December 19, 2011

மம்பட்டியான் நினைவுகள்.


சிறுவயதில் ம்ம்பட்டியான் கதை கேட்ட நினைவு இன்னும் இருக்கிறது.பெரியப்பா வீட்டில் இருந்தேன்.மலையோர கிராமத்திலிருந்து ஒரு பாட்டி வந்திருந்தார்.அண்ணன்களுக்கு(பெரியப்பா மகன்கள்) அம்மாவைப்பெற்ற பாட்டி.ஒரு கிளியை கூண்டில் அடைத்து எடுத்து வந்திருந்தார்.குச்சி செருகியிருந்த்து.அவ்வளவு உறுதியான கூண்டு இல்லை.
                            மனம் முழுக்க கிளியிடமே இருக்கிறது.அதன் அழகை பார்க்க பார்க்க சலிக்கவில்லை.கிளி பேசுமா? என்று கேட்டேன்.சொல்லிக்கொடுத்தால் பேசும்.இன்னும் பழகவில்லை.நேராக காட்டில் இருந்து கொண்டு வருகிறேன்.எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லாயே என்று கவலையாக போய்விட்ட்து.அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டேன்.

                              பாட்டி ம்ம்பட்டியான் கதை சொல்ல ஆரம்பித்தார்.உணர்ச்சிப்பெருக்கோடு சொல்லிக் கொண்டு வந்தார்.மலையூருக்கும் அவருடைய கிராமத்திற்கும் சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன்.அவர் மிகவும் மரியாதையுடன் குறிப்பிட்ட்தாக நினைவு.கிட்ட்த்தட்ட கதாநாயகனாக வர்ணித்தார்.கேடக சந்தோஷமாக இருந்த்து.
                              சந்தைக்கு போயிருந்தபோது ம்ம்பட்டியான் பற்றிய புத்தகம் பார்த்தேன்.கிராமத்தில் இருப்பவர்களுக்கு வாராவாரம் கூடும் சந்தைதான் சூப்பர் மார்க்கெட்.இப்போது சந்தைகள் களையிழந்து விட்டன.சினிமா பாடல்கள்,மாரியம்மன் தாலாட்டு,ம்ம்பட்டியான் கதை போன்ற புத்தகங்களை வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள்.

                              மேற்கண்ட பின்னணியாகத்தான் இருக்கவேண்டும்.தியாகராஜனின் மலையூர் ம்ம்பட்டியான் பட்த்தை நான் பார்க்கவில்லை.1983 ல் நான் சின்னப்பையன்.யார் கூட்டிப்போவார்கள்?பிரசாந்த் நடித்து வெளியாகியுள்ள பட்த்தை பார்க்கலாம் என்று தோன்றிவிட்ட்து.நாற்பது ரூபாய்தானே போனால் போகிறது.இருக்கைகள் கொஞ்ச நேரத்திலேயே நிரம்பி விட்ட்து.தியேட்டர் முழுக்க நிரம்பியதைப் பார்த்து பலகாலம் ஆகிவிட்ட்து.
                                                                            திருவிழா ஒன்றில் பெற்றோரைக் கொன்றவர்களை பழிவாங்கி விட்டு காட்டுக்குள் மறைகிறார் ம்ம்பட்டியான்.அதே வீரப்பன் காடுதான்.போலீஸ் தேடுகிறது.இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்.கிராமத்து மக்கள் மிகவும் மரியாதை வைத்திருக்கிறார்கள்.காவல்துறைக்கு அடிக்கடி டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிக்கிறார்.போலீஸ் ம்ம்பட்டியான் தலைக்கு வைத்த விலை நல்லவனை கெட்டவனாக்க படம் முடிகிறது.

                                  மலையோர கிராமங்கள்,கல்வீடு,அருவி,காடு என்று பார்க்க சந்தோஷமான லொகேஷன்.வடிவேல் வெகு நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில்! தனது வழக்கமான உடல் மொழியுடன் அதேவடிவேல்.திரைப்பட்த்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் விரைப்பாக இருக்கிறார்.அவருக்கு யாராவது நடிப்பு சொல்லித்தரவேண்டுமா என்ன?
                                 ஒரு காலத்தில் தமிழ்சினிமாவுக்கு ஒரு ஃபார்முலா இருந்த்து. பட்த்தில் அவசியம் ஒரு கவர்ச்சி நடிகை இடம்பெற வேண்டும்.முமைத்கான் படம் முழுக்க தாராள கவர்ச்சியாம்.!?நடனமாடுபவர் என்றால் மட்டும் படம் முழுக்க அரைகுறை உடையுடனே இருக்கவேண்டுமா என்ன?  இதனால்தான் படம் ஓடுகிறது என்று எண்ணி தொடராமல் இருந்தால் நல்லது.

                                 கதாநாயகி கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாகவே செய்துவிட்டார்.பழைய பாடல்கள் இப்போதும் கேட்க அவ்வளவு சுகம்.பட்த்திற்கு நல்ல வசூல் நிச்சயம் என்றுதான் தோன்றுகிறது.மற்றபடி தொழில்நுட்பம் எனக்கு அவ்வளவாக தெரியாது.நான் சினிமா விமர்சகனும் அல்ல!

-

Sunday, August 21, 2011

டொரண்டோ பறக்கிறது அழகர்சாமியின் குதிரை.

சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் டொரண்டோவில் நடக்கிறது.சர்வதேச அளவில் முக்கியமான திரைப்படங்கள் இவ்விழாவில் பங்கேற்க இருக்கின்றன.இத்திரைப்பட விழாவில் பங்கேற்க அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே திரைப்படம் இது.

                                பாஸ்கர் சக்தியின் கதை திரைப்படமாக்கப்பட்டிருந்த்து.சுசீந்திரன் இயக்கத்தில் அப்புகுட்டியும் சரண்யா மோகனும் வாழ்ந்து காட்டியிருந்தார்கள்.சமீபத்தில் இளையராஜா இசை அமைத்த படமும் கூட! இப்படம் வெண்ணிலா கபடிக்குழு அளவுக்கு இல்லை என்று கருத்து சொல்லப்பட்ட்தும் உண்டு. 

                                உலகத்தின் முக்கியமான சினிமா கலைஞர்கள் அழகர்சாமியின் குதிரையை பார்க்கப் போகிறார்கள்.அப்புக்குட்டி நிச்சயம் அவர்களை கவர்ந்து விடுவார் என்பதே நிஜம்.ஒரு நிஜ குதிரைக்காரனை நேரில் பார்க்கப் போகிறார்கள்.பெரிய நடிகர்கள்,நாலு பைட்,ஒரு கவர்ச்சி டான்ஸ் என்ற தமிழ் சினிமாவின் விதியை மீறிய படம் இது.

                                 பெருவெற்றி பெற்ற படங்கள் இருக்கிறது.அதிகம் சிலாகிக்கப்பட்ட சினிமாக்கள் உண்டு.ஆனால் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவம் பெற்ற சினிமா இது.அப்புகுட்டியை மட்டும் வைத்து திரைப்படம் செய்ய அதிக தைரியம் வேண்டும்.எப்போதும் சினிமா என்பது சூதாட்டம்தான்.வெற்றி,தோல்வியை கணிப்பது சாத்தியமே இல்லை.

                                   பட்த்தில் உள்ள மூட நம்பிக்கை,மக்கள் இதையெல்லாம் பார்த்தால் உலகம் என்ன நினைக்கும்? ஒன்றும் நினைக்காது.இந்தியாவைப்பற்றி உலகத்துக்கு தெரியும்.தவிர மூட நம்பிக்கைகள் உலகம் முழுக்க இருக்கும் விஷயம்தான்.ஒவ்வொரு இட்த்திலும் வேறுபடும்.வித்தியாசமான முயற்சிகள்தான் முக்கியம்.

                                   பரபரப்போ,விறுவிறுப்போ உலக சினிமா கலைஞர்களுக்கு காட்ட வேண்டியிருப்பதில்லை.அழகர்சாமியின் குதிரை போன்ற முயற்சிகள் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படவேண்டிய ஒன்றுதான்.குறைகள் இருப்பது பொதுவானது.அது முக்கியமும் அல்ல.சர்வதேச அளவில் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கப்படும்.

                                    தமிழுக்கு கிடைத்திருக்கும் கௌவரம் இது.உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த கலைஞர்களும் நம்முடைய முயற்சியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு.அப்படி ஒரு அரங்கில் நம்ம ஊர் குதிரை பங்கேற்பது நமக்கு பெருமையான ஒன்று.அழகர்சாமி குதிரை குழுவை வாழ்த்தி அனுப்பி வைப்போம்.
-

Thursday, December 30, 2010

முகம் மாறிப்போன தமிழ் சினிமா


பல தமிழ் சினிமாவை நின்றுகொண்டே பார்த்திருக்கிறேன்.உட்கார இடம் கிடைக்காது.இருக்கைகளின் அளவுக்கு தாண்டி டிக்கெட் கொடுத்து விடுவார்கள்.இரண்டரை மணி நேரமும் நின்றுகொண்டே படம் பார்க்கவேண்டும்.கீழே உட்கார நினைத்தாலும் இடம் இருக்காது.அதுவும் முதல் நாளன்று அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.

மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கவேண்டாம்.தொண்ணூறுகளின் துவக்கத்தில்கூட இந்நிலை இருந்த்து.அப்புறம் வந்த்து திருட்டு சிடி யுகம்.தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுவிட்ட்து.நூறு நாட்கள் என்பது சாதாரணமாக இருந்த நாட்கள் போய் இந்த ஆண்டு பன்னிரெண்டு படங்களே பார்த்திருக்கின்றன.

சினிமா டிக்கெட்டுகளின் விலையும் இப்போது வசதியானவர்களும்,காதலர்களும் படம் பார்க்க போகும் அளவுக்கு இருக்கிறது.சாதாரணமானவர்கள் திருட்டு சிடியில் குடும்பத்தோடு பார்த்துவிடுகிறார்கள்.செலவும் குறைவு.நினைத்த நேரத்தில் அணைத்துவிடலாம்.

சினிமாக்களுக்கு சென்று பாதியில் எழுந்து வந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.உட்காரமுடியாத அளவுக்கு தரத்துடன் அவை இருக்கும்.பணத்தையும் இழந்து நேரத்தையும் இழந்து வெறுத்து வெளியேறும் தர்மசங்கடம் திருட்டு சிடியில் இல்லை.இதனாலேயே மக்களின் ஆதரவு கிடைத்துவிட்ட்து.

கேபிள் சங்கர்,சி.பி.போன்றவர்கள் கஷ்டப்பட்டு சினிமாவை பார்த்து நமக்காக விமர்சனம் எழுதி நம்மையெல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.பிளாக்கில் படித்து விட்டு பல சினிமாக்களை தவிர்த்திருக்கிறேன்.சினிமா விமர்சன்ங்களுக்கு மனமார்ந்த நன்றி.

அடிக்க அடிக்க தாயிடம் ஓடும் குழந்தையை போல சினிமா மீதான கவர்ச்சி குறையவில்லை.எப்போதும் குறையாது.சினிமாவைப்போன்றுபிரபலமும் பணமும்வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது.குறைந்த முதலீட்டில் நல்ல படங்கள் எடுக்க முடியும் என்பதை பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.நன்கு திட்டமிட்டு உழைத்தால் நம்மாலும் சிகரத்தை தொட முடியும்.அதற்கு நம்மிடமே நல்ல உதாரணங்கள் இருக்கின்றன.வரும் புத்தாண்டு அதற்கான கதவுகளை திறக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


-