Showing posts with label Crime against women. Show all posts
Showing posts with label Crime against women. Show all posts

Saturday, June 25, 2011

சாருவும் தமிழ்ப்பெண்களும்

                                                                                          எதையாவது எழுதிக்கொண்டிருப்பவனுக்கு(!) சமகால நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்காது.அப்படித்தான் முள்வேலி உறுத்தியபோது “தமிழன் என்ற சொல் குற்ற உணர்வு தரும் சொல்லாகிவிட்ட்து”என்று எழுதினேன்.அதற்கு தொப்பிதொப்பி போட்ட கமெண்ட் “வேண்டாம்
மீண்டும் எழுவோம் தமிழன் என்றால் உலகே அதிசயிக்கும்”

                                   இன்றும் தமிழனை உலகம் அதிசயமாக பார்க்கிறது.சாரு விஷயத்தைத்தான் சொல்கிறேன்.எழுத்தாளர்கள்,அறிவு ஜீவிகள் என்றால் சமூகத்தில் இருக்கும் மதிப்பு தனி.”கேரளாவில் எழுத்தாளன் தான் தன் குழந்தையின் கையைப்பிடித்து அட்சரம் எழுதக்கற்றுத்தரவேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்’’ என்கிறார்விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன்.

                                    குடிக்கும் எழுத்தாளர்கள்,புகைக்கும் எழுத்தாளர்கள் பற்றி விமர்சன்ங்கள் வந்திருக்கின்றன.ஆனால் சாருவின் விஷயம் அருவருப்பானது.வயது வித்தியாசமின்றி ஒரு இளம்பெண்ணிடம் நடந்துகொண்டுள்ள செயல் எழுத்துலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதே நிஜம்.

                                    இந்த மாதிரி விஷயங்களை பெண்கள் எப்போதும் வெளிப்படுத்த தயங்கியே வந்திருக்கிறார்கள்.உடனே திரும்பும்,அவனுடன் எதற்கு பேசினாய்?,பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருக்கவேண்டியதுதானே?உடனே நீ வீட்டுக்குள் ஓடி கதவை சாத்திக்கொள்வதுதானே? ஆண்கள் என்றால் அப்படித்தான்,கண்டும் காணாமல் போவதுதானே? இப்படியே நீளும்.

                                      சாருவுடன் சாட் செய்த பெண் பேச்சு திசைமாறுவது தெரிந்தும்,ஏதோ பிரபல எழுத்தாளர் என்று நினைத்தால் சாக்கடைத்தனமாக ஏதேதோ வருகிறது என்று தெரிந்தும் தொடர்ந்திருக்கிறார்.இது திட்டமிட்டு செய்த்துதான்.தான் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஆசாமி இல்லை என்றவுடன் அவர்களை வீழ்த்துவதற்கு ஆதாரங்களை அதிகப்படுத்தவே முயல்வார்கள்.இது பெண்களிடம் இருக்கும் குணங்களில் ஒன்று.ஒரே வித்தியாசம் வழக்கமாக நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்குவார்கள். இங்கு பதிவாக வருகிறது.

                                      ஒரு பெண் வீட்டு மனிதர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றால் இருபத்துநான்கு மணிநேரமும் காமிரா வைத்து பெற்றோர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று பொருள் அல்ல.அவர் யாருடன் பேசுகிறார்,பழகுகிறார் என்பதை கவனிப்பார்கள்.பிரபல எழுத்தாளருடன் சாட் செய்தால் அவர்கள் பெருமையாகவே நினைத்திருப்பார்கள்.

                                                                                               பாலியல் ரீதியாக பெண்களிடம் வரம்பு மீறுபவர்கள்மீது காவல்துறையில் புகார் செய்தால் இதற்கென்று ஊருக்கு ஒரு காவல்நிலையம்தான் திறக்கவேண்டும்.இன்று படித்த பெண்கள் பலருக்கும் அதற்கென உள்ள சட்டங்கள் கூட தெரியாது.இதை புதியதாக சொல்லவில்லை.என்னுடைய ஆரம்பகால பதிவுகளில் ஒன்றான “பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்’’ என்ற பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                                     ஆம் நண்பர்களே! பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்.அதிர்ந்து பேசக்கூடாது.வீட்டில் சமையல் செய்து கொண்டு,குழந்தை பெற்றுக்கொண்டு,கணவன் சாப்பிட்ட மீந்த்தை சாப்பிட்டு,பின் தூங்கி முன் எழுந்து,வாய் திறக்காமல்.................... சரிதான்.எழுந்து நின்று ஜோராக கைத்தட்டுங்கள். இந்தியா வல்லரசாகப்போகிறது.
-

Sunday, June 19, 2011

கற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.


கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும்.இயல்பு வாழ்க்கையை தொலைக்கவேண்டும்.மகளிர் அமைப்புகள் சில வழக்குகளுக்கு சிறப்பான பணியாற்றியிருக்கின்றன.


கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்படும் போது வழியில் அவனை சந்தித்தேன்.காவல்துறையை சேர்ந்த நண்பர் என்னிடம் "ரேப் பண்ணியிருக்கான் ,இவனபார்த்தா எப்படியிருக்கு பார் ?"எனக்கும் ஆச்சரியாமாகத்தான் இருந்தது.ஒரு வீரனைப்போல அவன் முகம் காட்டினான்.குற்றம் சுமத்தப்பட்டவன் என்று அவனிடம் கவலையோ,குற்ற உணர்வோ இல்லை.விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற கோப்பையை உயர்த்தி காட்டும் மலர்ச்சியை நான் பார்த்தேன்.யாராலும் செய்யமுடியாத காரியமா?நண்பருக்கு என்னைப்பற்றி தெரியுமாதலால் அவனை அருகில் அழைத்து பேசினேன்.


அவனது வார்த்தைகளில் சில...................................


இதுக்கு மேல யார் சார் கல்யாணம் பண்ணிக்குவான் அவள,நான் எதுவும் பண்ணல!நான் வேணும்னா பலதடவ கல்யாணம் பண்ணிக்கலாம்,லவ் பண்ணலாம்னு சொன்னேன் .அவ எதுவும் பேசல! கோவத்துல சண்ட புடிச்சப்ப அவ சொந்தக்காரன் ஒருத்தன் பார்த்துட்டான்.அதனால வூட்ல போயி சொல்லிட்டா.அவளுக்குத்தான் அசிங்கம்.எவன் வருவான்?அப்படி ஆத்தரமா இருந்தா ரோட்ல,வீதில எத்தனையோ பேர் இருக்காங்க!நான் தண்ணியடிச்சா அந்த மாதிரி பழக்கமுண்டு.ராத்திரில செகண்ட்ஷோ சினிமா போய்ட்டு வந்து அந்தமாதிரி பொம்பளைங்ககிட்ட பழகியிருக்கிரன்.இதுக்கு மேல யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்க்கிறேன்(திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்).அன்னக்கி நான் ஒண்ணும் தண்ணியிலகூட இல்ல!நான் ஒரே பையன்,கெடச்ச கூலிக்கு போவேன்.தப்புபண்ணமாட்டேன்.எங்கப்பன் குடிச்சி குடிச்சி காச கரைக்காம இருந்திருந்தா நான் எப்படியோ இருந்திருப்பேன்.நானும் படிச்சிருப்பேன்.இவள மாதிரி ஆளுங்கல்லாம் கால் தூசு (சற்று மாறுதல் செய்யப்பட மீள்பதிவு)
-

Saturday, April 23, 2011

இணையத்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கிறதா?


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சாபக்கேடு.ஆண்டுதோறும் தொடர்ந்து இவை அதிகரித்து வருகின்றன.1990-ஆம் ஆண்டு 9518 ஆக இருந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 2009-ல்   21397 ஆக அதிகரித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் இது.

                            பெருநகரங்களில்தான் கற்பழிப்புகளும்,பெண்களுக்கெதிரான குற்றங்களும் மலிந்துள்ளன.பல வல்லுநர்களும் நகரமயமாதலை முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.பணி காரணமாக பெண்கள் தனியாக வாழ்வது நகரங்களில் அதிகம்.குறிப்பிட்ட வயதில் உள்ள ஆண்களும்  அதிகம்.

                            வீட்டைவிட்டு வெளியில் தங்கி பணிபுரியும் ஆண்களிடம் சகவாசம் காரணமாக போதைப்பழக்கங்கள் உள்பட பல்வேறு சீரழிவுகள்.இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக டெல்லியே முதலிட்த்தில் இருக்கிறது.ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான சமூக தொடர்பில்லாத நிலையில் இன்னொரு மனிதனை மிருகமாகவே கருதுகிறார்கள்.

                             அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தாதாக்களும் அவர்களது அடியாட்களும் இம்மாதிரியான குற்ற நிகழ்வுகளில் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.ஈவ் டீசிங்,கட்த்தல்,பாலியல் தொல்லைகளும் இவர்களால் நாள்தோறும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

                             பத்தாண்டுகளில் அதிகரித்துள்ள இன்னொரு விஷயம் இணையம்.தியேட்டர்களில் பிட்டுப்படங்களுக்கு தயங்கி தயங்கி போய்க் கொண்டிருந்தவர்களுக்கு இன்று இருபது ரூபாயில் ஒருமணி நேரம் ஆபாசபடம் பார்க்கலாம்.நகரங்களில் பெரும்பாலான பிரௌசிங் செண்டர்களில் முக்கியமான முகவரி போன்று ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆபாசமும்,போதையும் சேரும்போது விளைவுகள் மோசமாகின்றன.

                               புள்ளிவிவரங்களை தாண்டி பல கற்பழிப்புகள் மூடி மறைக்கப்பட்டு விடுவதுதான் அதிகம்.வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை போய்விடும் என்ற பயத்தால் தடுக்கப்பட்டன.ஓரளவு கல்வியறிவு காரணமாக இப்போது வழக்கு பதிவாவது அதிகரித்திருக்கிறது.எண்ணிக்கை அதிகம் காணப்படுவதற்கு இதுவும் காரணம்.

                               இன்னொரு வகை கற்பழிப்புகள் சுத்தமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.அவை நெருங்கிய உறவினர்களால் நடக்கும் கொடூரங்கள்.தனது அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப்பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.எப்போதும் இதெல்லாம் வெளியில் வராது.இந்த வகை கற்பழிப்புகள் அதிகம்.

                               குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளும் நெருங்கிய உறவினர்களாலும்,தெரிந்தவர்களாலும்தான் நடக்கின்றன்.52 சதவீத குழந்தைகள் பாதிக்க்ப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்பம் மேம்பட்ட அளவுக்கு இன்னும் மனம் மேம்படவில்லை என்பது கவலை தரும் ஒன்று.
-

Saturday, February 19, 2011

என் தூக்கத்தைக் கெடுத்த மூன்று பெண்கள்



ஒரு சம்பவத்தை நேரிலோ அல்லதுபுகைப்பட்த்திலோ பார்ப்பதற்கும்,வீடியோவில் காண்பதற்கும்,வித்தியாசம் இருக்கிறது.ஒவ்வொன்றும் நம்மிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஆளுமைக்குத் தக்கவாறு மாறுபடும்.சிலரது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நேரில் அவர்களது வார்த்தைகளில் அறியும்போது நாம் பாதிக்கப்படுகிறோம்.

சினிமாவில் மற்றவர்களது துயரங்களைப் பார்த்து அழுபவர்கள் இருக்கிறார்கள்.நெருங்கிய உறவினர் இறப்புக்கும் கதறாத ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.விபத்து,கற்பழிப்பு,கொடுந்துயரம் என்று எத்தனையோ நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை படிக்கிறோம்,தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.சில நிமிட உணர்வுகளை தூண்டிவிட்டு அவை மறைந்துவிடுகின்றன.அடுத்த விஷயத்துக்கு தாவி விடுகிறோம்.

துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பஞ்சமில்லை.அதிகம் வாசிக்கப்படாத எனது இடுகை ஒன்றில் இருந்தாலும் அதன் உளவியல் பகுதிகளை அறிவதற்காக மீண்டும் அவற்றைத் தருகிறேன்.

. பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது. .சிறு நீர் வெளியேறுவதுதெரியவில்லை.நனைந்தபின்னர்வெகு நேரம் கழித்து தெரியவரும்.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை. கணவன் வீட்டில் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார் மருத்துவர்.

.மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் .உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் , மாமியார் ,நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், ''எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள் ''.அந்தப்பெண்ணின் பதில்,"என் தங்கை வேறு இருக்கிறாள்,அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும் ?வாழாவெட்டி வீட்டில் இருக்கும்போது யார் வருவார்கள்? .

இரண்டாவது தென் மாநிலம் ஒன்றிலிருந்து இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற பெண் பணிக்காக மும்பை சென்றார். உயர்சாதியை சார்ந்தவர்.தமிழ் நாட்டை ச்சார்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.வேலையையும் ,பெற்றோரையும் விட்டு விட்டு காதலனுடன் வந்துவிட்டார்.கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது

.கர்ப்பமானது தெரிந்தவுடன் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தி கலைக்கப்பட்டு விட்டது.-ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறார்கள் ,மேலும் தேவையில்லை-. ரேஷன் கார்டில் அவரது பெயர் இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. தற்போது தீராத நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்து,கல்வி கற்றும் அடையாளமற்று !

மூன்றாவது,கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை.அந்தப்பெண்ணுக்கு பதினைந்து வயது.தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளது அக்காவின் கணவன் கற்பழித்தான்.

ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".

நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருதாய் அவ்வளவுதான் தண்டனை தர முடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள்

மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.

நாம் சிந்திப்போம் தோழர்களே .....

சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?

அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறுமையில்,மதுவின் போதையில்,பாலியல் தொழிலில்,மனக்கோளாறுநிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?

பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும் ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?

கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம் சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?

-