Thursday, October 28, 2010

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது எப்படி?

காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.
மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரை உற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உண்மையை உணர்த்தும் உடல்மொழி !
படிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரது கைகள்,கால்கள்,முகபாவம் என்னசொல்கிறது என்பதை பொறுமையாக கவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதை நம்மால் சொல்லமுடியும்தானே!அசட்டுச்சிரிப்பா?சந்தோஷ சிரிப்பா?சோக சிரிப்பா?என்பதை உணர உங்களால் முடியும்.சில நேரங்களில்யாரையோ ஏன் டென்ஷனாக இருக்கிறீர்கள்?என்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்தது?இன்னும் இன்னும் கவனம் செலுத்துங்கள்.ஒருவரது உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்.
கவனமாக கேளுங்கள் :
உடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரது வார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது.காது கொடுத்து கேளுங்கள் கடவுள் ஆகலாம் -தலைப்பிட்ட எனது பதிவைஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்.வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியை அடையாளம் காணுங்கள்.அதற்கு ஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போது நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா?
ஒருவர் எப்படி உணர்கிறார்?
ஒரே சம்பவம் உங்களிடத்திலும்,உங்கள் நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பது நிச்சயமல்ல!இருவருக்கும் வேறுவேறு நம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளை கவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு சொல் இருக்கிறது.நீங்கள் உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம் அக்கறையும்,மனிதநேயமும் இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால் குழப்பத்துக்கும்,பிளவுக்கும் அங்கே என்ன வேலை?
மேலும் சில துளிகள் ..............
  • ஆம்.கண்களை கவனிக்கவும்.
  • கவனமாக கேட்கவும்
  • அவரும் உங்களைப்போல மனிதர்தான்.
  • ஒவ்வொருவருக்கும் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
  • உணர்வுகளை கண்டறியுங்கள்
  • ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிலை பெறும். -