அவ்ர்களுக்கு திருமணமாகி ஒருவாரம் ஆகியிருக்கும்.பதினைந்து வயது பெண்,இருபது வயது ஆண்.(சில வருடங்களாக இந்த வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது).மணப் பெண்ணின் தாய் அவர்களை பாதணிகள் விற்கும் கடைக்கு அழைத்து வந்திருந்தார்.மருமகன் ஷூ வேண்டுமென்று ஆசைப்ப்ட்டு கேட்டிருக்க வேண்டும்.
கடை ஊழியர் ஒவ்வொன்றாக காண்பித்துக் கொண்டு வந்தார்.மாமியார் தன்னுடைய சுருக்குப்பையிலிருந்து(கிராமங்களில் தோப்பை என்று சொல்வதுண்டு) ரூபாய் நோட்டுக்களை எடுக்க ஆரம்பித்தார்.அதற்கு மேல் அந்த நோட்டுக்களை மடிக்க முடியாது என்று தோன்றியது.பெரும்பாலானவை நூறு ரூபாய் நோட்டுக்கள்.’’உனக்கு வேண்டுமென்பதை வாங்கிக்கொள்’’என்றார் மருமகனிடம்.
பல காலமாக புருஷனுக்கு தெரியாமல் சேர்த்து வைத்த பணம்தான் அது. மருமகனுக்கு எந்த குறையும் வைக்க்க் கூடாதென்று பெண்ணைப் பெற்றவர்கள் சேமித்து வைக்கிறார்கள்.கணவனுக்கு தெரியாமல் பணம் சேர்ப்பது பெரும்பாலான பெண்கள் செய்து வந்தார்கள்.சாமர்த்தியமில்லாமல் வேறென்ன?
குடும்பம் மனைவியின் தலையில் மட்டும் ஓடுகிறதா? கொஞ்சம் யோசித்தால் புரியும்.இது சாமர்த்தியம்தான்.அன்போ,புரிதலோ இல்லாதவனுடன் குடும்பம் நட்த்தினால் திறமைதான் பெண்ணுக்கு தேவை.மகள் பிறந்த வீட்டுக்கு வந்தால்,மகளுக்கும் மருமகனுக்கும் ஆசைப் பட்ட்தை செய்துதர வேண்டியிருக்கும்.குடிகார கணவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
படிக்காத பாமர பெண்கள் ஏராளமானவர்களை நான் கவனித்திருக்கிறேன்.அவர்கள் வாழ்க்கை முழுக்கவும் பாரம் சுமந்து கொண்டிருப்பதுபோல எனக்கு தோன்றும்.பெண்ணாக பிறந்து விட்ட்தால் மட்டுமே அப்படி! குடும்பம் தலைவியின் தலையில்தான் ஓடுகிறது.
ஒரு பெண்ணை காட்டி நண்பர் சொன்னார். ”பாவம்!இரண்டு வயசுப் பொண்ணுங்கள விட்டுட்டு அவ புருஷன் ஓடிப் போயிட்டான்.எங்க போனான்னு தெரியல!”ஒரு ஆண் குடும்ப கஷ்டம் தாங்காமல் ஓடிப்போகமுடிகிறது!பெண் ஓடிப்போக முடியுமா?
வறுமையைத் தாங்குவது பெண்,குடிப்பழக்கத்தின் விளைவை சுமப்பது பெண்,வேலையில்லாத நிலை,குற்றங்கள்,கொடிய நோய்கள் சமூகத்தின் அனைத்து கேடுகளும் பெண்களையும்,குழந்தைகளையும் குறி வைத்து தாக்குகின்றன.
மகளிர் குழுக்களில் நிறைய பணம் புழங்குகிறது.இன்று பெரும்பாலான பெண்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது.இருந்தாலும் அவர்கள் கணவனுக்கு தெரியாமல் பணம் சேமிக்கிறார்கள்.மகளிர் குழுவில் கிடைக்கும் கடன்,நிதியெல்லாம் அவனிடம் கொடுத்து விடுவார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.ஆனால் மறைமுகமாக பெரும்பாலும் நேரடியாகவும் நிர்வாகம் செய்வது ஆண்கள்தான்.மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற விழா ஒன்றில் ஊராட்சித் தலைவியை பேசுமாறு கேட்டுக் கொண்டார்கள்.அவர் முகத்தை மூடிக் கொண்டுவிட்டார்.பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒரு நாள் அவர் பேசக்கூடும்.
மாற்றங்களுக்கு இன்னும் நாம் காத்திருக்க வேண்டும்.பெண் பணத்தை கணவனிடம் கொடுக்காமல்,கணவன் மனைவியிடம் தரும் நாள் வரலாம்.கணவன் துணையின்றி அரசியலில் வெற்றிக் கொடி கட்டலாம்.இதெல்லாம் சாத்தியம்தான்.
கல்வி கற்று சம்பாதிக்கும் பெண்களுக்கு இன்று கிடைக்கும் மதிப்பை பார்த்து வருகிறேன்.நமக்கு என்ன தேவை என்பதை உணர்த்தும் விஷயம் இது.மார்ச்-8 ஆம் நாள் உழைக்கும் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.உழைக்காத பெண்கள் எங்கே இருக்கிறார்கள்?
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
2 comments:
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
தங்களுக்கு நன்றி,ரத்னவேல்
Post a Comment