Showing posts with label நோய்த்தொற்று. Show all posts
Showing posts with label நோய்த்தொற்று. Show all posts

Monday, October 24, 2011

தும்மல் வந்தால் ஆயுசு நூறா?

மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும்.அலர்ஜி காரணமாகவும்,வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும்,சைனஸ் பிரச்சினையாலும் தும்மல் வரும்.இந்த சமயங்களில் ஹிஸ்டமின் தூண்டப்ப்ட்டு மூளைக்கு தகவல் போய் அச் என்று சத்தம்.அதுவும் ஒவ்வொருவருக்கும் தனி சத்தம் இருப்பது போல் தோன்றுகிறது.அப்புறம் ஏதோ இழந்த்தை திரும்ப பெற்றது போல ஒரு உணர்வு.
                                நான் சிறுவனாக இருந்தபோது வெடித்த பட்டாசுகளைவிட இப்போதைய சிறுவர்கள் வெடிப்பது குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு சரத்தை பிரித்து சட்டை பாக்கெட்டில்,டிராயர் பாக்கெட்டில் நிரப்பிக்கொள்வோம்.ஊதுபத்தியை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு வெடியாக வெடித்து,ஆஹா ஆனந்தம்! என் நண்பனுக்கு சட்டை பாக்கெட் இருந்த வெடிகள் வெடிக்க ஆரம்பித்து காயம் ஆன சம்பவமும் உண்டு.கரும்புகை கிளம்பும்.

                                விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசு என்று ஒரு பதிவு தந்திருக்கிறேன்.(இப்போது அந்த இட்த்தில் “ பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுஎன்று காவல்துறை பேனர் கட்டியிருக்கிறது)அப்போது ஒருவர்(பெண்)நடந்து போய்க்கொண்டிருந்தார்.கையில் குழந்தை.பட்டாசு வெடித்த கரும்புகையில் குழந்தை தும்மியது.அவர் சொன்னது “நூறு ஆயுசு!
                                குழந்தைக்கு ஏற்பட்ட்து புகையால் வந்த தும்மல் என்று பாவம் அவருக்கு புரிந்திருக்காது.குறைந்த பட்சம் குழந்தைகளையாவது புகை பக்கம் எடுத்துப்போகாமல் இருக்கலாம்.சில மத்தாப்புகள் புகை அதிகமாகத் தரும்.குழந்தைகளுக்கு அருகில் சிகரெட் பிடிப்பவர்களை பார்த்தாலும் மனசு வலிக்கிறது.

                                 தும்முவதன் மூலம் நோய்களும் பரவலாம்.சில வைரஸ் தொற்றுகளும்,காசநோயும் இப்படி பரவும்.பொது இடங்களில் தும்முபவர்கள் ஏதாவது கைக்குட்டை பிடித்து தும்மினால் சமுதாயத்துக்கு நல்லது.ஆனால் இதெல்லாம் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.திடீரென்று ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவது கஷ்டம்.
                               சிறு வயதில் பள்ளிக்கு போகும்போது ஒரு செடி இருக்கும்.அதன் இலையை கிள்ளி முகர்ந்தால் ஓயாத தும்மல் வரும்.விளையாட்டாக தும்மிக் கொண்டிருப்போம்.யுனானியில் ஒரு பொடி இருக்கிறது.புகையிலை சேர்க்கப்பட்ட்தல்ல! நோயாளிகளுக்கு தருவதை பார்த்திருக்கிறேன்.சோர்வு,தலைவலி எல்லாம் போய்விடும் என்று போட்டிருப்பார்கள்.கொஞ்சம் போட்டுப்பாருங்கள் என்று தம்பி ஒருவன் கொடுத்தான்.நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
                                தும்மலை சகுனமாக பார்ப்பது இன்னமும்  இருந்து வருகிறது.பஞ்சாங்கங்கத்திலும் இடம் பெற்றிருக்கிறது.பெண்ணுக்கு ஆண் தும்மினால்,ஆணுக்கு பெண் தும்மினால் நல்லது என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.இன்றைய தலைமுறை இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.தும்மலுக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்ப்பதுதான் அதிகம்.
                                 தலைப்புக்கு வருவோம்.யாராவது வீட்டில் தும்மினால் ஆயுள் நூறு என்று வீட்டில் சொல்வார்கள்.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.
         இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
-

Tuesday, September 20, 2011

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்


வெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்குக்கு முன்பும் பின்பும் அல்லது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு லேசாக வெள்ளைப்படுவது இயல்பானது.பலரும் இதை உடல் சூடாகி விட்ட்து என்பார்கள்.ஆனால் இது பால்வினை நோயாக இருப்பதற்கான நம்பிக்கை அதிகம்.
                                                
                               நிரூபன் வெள்ளைப்படுதலுக்கு எள்ளுருண்டை சாப்பிடலாம் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.எள்ளுருண்டை எனக்கு மிகவும் பிடித்த உணவுப் பண்டம்.உருண்டை பிடிக்க எளிதாக சில இடங்களில் அடை சுட்டும் இதில் சேர்ப்பார்கள்.நிலக்கடலை,பொட்டுக்கடலை,முந்திரி சேர்ப்பதும் உண்டு.சாப்பிட அப்படி ஒரு சுகம்.


                               வெள்ளைப்படுதல் உடல் சூட்டால் வருகிறது என்ற நம்பிக்கையொட்டி இந்த எள்ளுருண்டை சாப்பிடுவதும் ஏற்பட்டிருக்கலாம்.எள் குளிர்ச்சி என்று கருதுவதால் சாப்பிட ஆரம்பித்திருக்க வாய்ப்பிருக்கிறது.முன்பே சொன்னது போல சாதாரணமாக ஏற்படும் நீர்க்கசிவு தானாகவே சரியாகி விடும்.பால்வினை நோயாக இல்லாதவரை பிரச்சினை இல்லை.

                               வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலோ,நமைச்சல் எரிச்சலுடனோ,துர்நாற்றத்துடனோ வெள்ளைப்படுதல் இருந்தால் அது நிச்சயம் பால்வினை நோய்.பாக்டீரியா,பூஞ்சை போன்ற நுண்ணியிரிகள்(micro organisms) ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்றி இருக்கலாம்.உடல் சூடு போன்ற தவறான கருத்துக்களால் சிகிச்சைக்கு அணுகுவது குறைவாக இருக்கிறது.


இத்தைகைய நீர்க்கசிவை ஒரே வகையில் அடக்கிவிட முடியாது.அதே சமயம் எல்லாமும் பால்வினை நோயல்ல! கருப்பை சார்ந்த இடங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் உண்டாகும்.சுத்தமில்லாமல் இருந்தால் குழந்தைகளுக்கும் பரவும்.வெள்ளைப்படுதல் என்று பொதுவாக சொன்னாலும் அறிகுறிகளிலேயே வகைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது வழக்கத்தில் இருக்கிறது.
                      
                               நமைச்சலுடன் வெள்ளைப்பட்டால் அது பூஞ்சைத்தொற்றாக (candidiasis)இருக்கலாம்.curdy type என்று சொல்வார்கள்.கெட்டியான திரவம் வெளியாகும்.துர் நாற்றத்துடன் வெளியாகும் நீர்க்கசிவு (டிரைகோமோனியாஸிஸ்)இன்னொரு வகை.கொனேரியா என்ற நோயில் சிறுநீர்க்கழிக்கும்போது கடுமையான வலியுடன் அல்லது சாதாரணமாக இருக்கலாம்.ஆண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் இந்நோயாகவும் இருக்கலாம்.ஆண்களுக்கு பழுப்பு நிறத்தில் திரவம் வெளியாகும்.

                               மேலே குறிப்பிட்ட கொனேரியா(இப்போது ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்) தொற்றில் பழுப்பு நிற திரவம் வெளியாவது நின்றுவிடுவதும் சாத்தியம்.அப்போது நோய் குணமாகிவிட்ட்தாக நினைத்துக்கொள்வார்கள்.ஆனால் உண்மையல்ல! அறிகுறி இல்லாமல் நோய்த்தொற்று இருந்து கொண்டிருக்கும்.எள்ளுருண்டை தின்று நோய் குணமாகிவிட்ட்தாக நினைத்துக்கொள்வதன் விபரீதம் இப்போது புரிந்திருக்கும்.

                                 ஆண்கள் பலருக்கு கிருமித்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.அதனால் எனக்கு ஒன்றுமில்லை என்று சிகிச்சைக்கு மறுப்பார்கள்.ஆனால் காரணமே பெரும்பாலும் அவர்கள்தான்.இருவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டாலும் மீண்டும் தொற்று ஏற்படும்.பாதுகாப்பில்லாத பாலுறவு மூலம் இத்தகைய வியாதிகள் பரவுவதால் எய்ட்ஸ் தொற்றும் பாதிப்பும் இவர்களுக்கு அதிகம்.
-