Sunday, October 27, 2013

இரயில் பயணத்தில்.....பார்க்கச்சலிக்காத விஷயங்களில் இரயிலும் ஒன்று.பேருந்துப்பயணத்தை ஒப்பிடும்போது இரயில் உடல் சோர்வு தராமல் கொண்டு சேர்க்கிறது.எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டரில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருக்கிறது.ஆடி பதினெட்டு என்றால் வழக்கமாகச் செல்வதுண்டு.சுமார் பாதிதூரத்தை இரயில்பாதை வழியே நடந்துசெல்வது வழக்கம்.அப்போது இத்தனை இரயில் இல்லை.இரயிலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கும்.

கடந்தவாரம் ஆம்பூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்தேன்.முதல் வேலையாக இரண்டாம்வகுப்பில் காலியிடத்தைக் கேட்டோம்.வாலாஜாவில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று சீட்டு வழங்கினார்கள்.அதுவரை நின்றுகொண்டுதான் பயணம் செய்யவேண்டும்.பக்கத்தில் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒருகுடும்பம் காத்திருந்தது.

மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள்.குழந்தைகளுக்கு ஆறு,நான்கு வயது இருக்கக்கூடும்.கணவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.தாயும் இரண்டு குழந்தைகளும் உள்ள இருக்கையில் இன்னொருவர் அமரமுடியும்.கையில் குழந்தை வைத்திருந்தபெண் உட்கார அனுமதி கேட்டார்.அவரது முயற்சி பலிக்கவில்லை.அந்தப்பெண்மணியின் பரிவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டார்கள். குழந்தைகளுக்கு டிக்கெட் எடுத்திருக்கக்கூட மாட்டார்கள் என்று ஒருவர் சொன்னார்.கணவன்,மனைவி இருவரும் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.ஆங்கில நாளிதழ் ஒன்றின் பெயர் தாங்கிய பயணப்பையை வைத்திருந்தார்கள்.கணவரும்,மனைவியும் மாறிமாறி குழந்தையை வைத்துக்கொண்டார்கள்.

பேருந்துப்பயணத்தில் சாதாரணமாக நாம் பார்த்திருக்கிறோம்.கர்ப்பிணிகள் என்றால் யாராவது இடம் கொடுத்துவிடுவார்கள்.பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் அப்படித்தான்.ஆனால் இப்போது அந்தப்பண்பும் மறைந்து வருவதாக எனக்குத்தோன்றுகிறது.இப்போது அந்தக்குணங்களை கொண்டிருப்பவர் எளிய கிராமத்து மனிதராக இருக்கிறார்.இன்று பேருந்திலும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.கர்ப்பிணிகளுக்கும்,குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் இடம் ஒதுக்கினால் என்ன?

இரயில் நான் அந்தப்பெண் குழந்தைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.அவர்களிடமும் இத்தகைய பண்புகள்தான் மனதில்பதியும்.தனிக்குடும்பத்தைத் தாண்டி சக மனிதர்களிடம் பழகுவதே குறைந்துவருகிறது.உலகத்தில் இருப்பதே அவர்கள் நான்குபேர்தான்.குழந்தைகளுக்கு பரிவும் நேசமும் வளர வாய்ப்பே இல்லை.தாய்,தந்தையைத் தாண்டி குழந்தைகளுக்கு நெருக்கமான உறவுகள் அறிமுகமே இல்லை.

கிராமத்திலும்,கூட்டுக்குடும்பத்திலும் குழந்தையைத்தூக்கிக் கொண்டாட நிறைய மனிதர்கள் இருந்தார்கள்.அவர்கள் பரிவும் நேசமும்காட்டினார்கள்.குழந்தைகளிடமும் அந்தப்பண்புகள் வளர்ந்தன.சாஃப்ட்வேர் துறையில் நல்ல நிலையில் இருக்கும் ஒருவர்,கிராமத்து உறவினர் வீட்டு சாவுக்கு செல்லத்தயங்கினார்.நான் செத்துப்போனால் நாலுபேர் வீட்டில் இருக்கவேண்டுமே? என்று மகனுக்குப் புரியவைத்தார்.

சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ள உறவுகள் என்றநிலை மாறி நாலுபேர் வேண்டுமே? என்று ஆகிவிட்டது.குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகப்படுத்துவதும்,அவர்களுடைய வீடுகளுக்கு சென்றுவருவதும் அவசியம் என்று தோன்றுகிறது.சக மனிதர்கள்மீது பரிவும்,நேசமும் வளராத சமூகம் குற்றவாளிகளைத்தான் உற்பத்தி செய்யும்.
-

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் பெற்றோர்கள் கையில்...

Chellappa Yagyaswamy said...

சமீபத்தில் எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது. பெண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் நின்று கொண்டு இருந்த வயதான பெண்மணிக்கு இடம் தர மறுத்தார். யார் சொல்லியும் பயனில்லை. சுயநலம் சார்ந்த வளர்ப்பே காரணம் .

Typed with Panini Keypad