Wednesday, October 30, 2013

தெருக்கூத்து நினைவுகள்.சுத்தம் சுகாதாரம் எல்லாம் யாருக்குத்தெரியும்? நான்குபுறமும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கிற இடமாக இருக்கும்.மண்ணில் உட்கார்ந்துதான் பார்க்கவேண்டும்.டவுசர் கால நினைவுகள் அவை.தெருக்கூத்து நடப்பதாக சொல்லிவிட்டால் இரவு சாப்பாட்டில் கூட மனம் இருக்காது.அரிதாரம் பூச நான்குபுறமும் தென்னை ஓலை கட்டி விளக்குபோட்டால் போதும்.முதல் ஆளாக இடம்பிடித்துவிடுவோம்.கூத்து துவங்குவதற்கு முன்பாகவே தூங்கிப்போயிருப்போம்.


எங்கள் கிராமத்தில் நாடகம் என்று சொல்வார்கள்.கொஞ்சம் வளர்ந்து பெரியவகுப்பு படிக்கப்போனபிறகு பபூன் வருகைக்காக தூங்காமல் காத்திருப்போம்.தெருக்கூத்து என்பது மகாபாரதம்,இராமாயணத்தில் ஏதேனும் ஒருபகுதி.அத்தை,பாட்டி போன்றவர்களுக்கு இந்தக்கதையெல்லாம் அற்புதமாகத் தெரியும்.கூத்துக்கு முன்பாகவே கதை சொல்லி ஆர்வத்தைக்கிளறிவிடுவார்கள்.


கூத்துக்கு வாத்தியார் என்று உண்டு.அவர்தான் பயிற்சி கொடுத்து தயார் செய்வார்.ஒவ்வொரு கூத்துக்கென்று தனிதனியாக நோட்டுக்களை வைத்திருப்பார்.ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனியாக வேறு எழுதிக்கொடுப்பார்கள்.புதிய்தாக சேர்ந்தவர் மனப்பாடம் செய்து கொண்டிருப்பார்.ஏதாவது பகுதி மறந்துவிட்டால் வாத்தியார் போடும் சத்தத்தில் மற்றவர்களுக்கும் உதறல் எடுக்கும்.


உள்ளூர் கலைஞர்களாக இருந்தால் உறவினர் நண்பர்கள் ரூபாய் நோட்டுகளை கோர்ப்பார்கள்.கொஞ்சம் வசதிப்பட்டவர்களுக்கு நிறைய நோட்டுகள் சேரும்.அவர்களது குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் திருஷ்டி சுற்றிப்போடுவார்கள்.சில கூத்துகளுக்குக் காரணங்களை வைத்திருப்பார்கள்.இதுபற்றிய எனது பதிவை கிளிக் செய்து படியுங்கள்.நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமம்.


துக்க காரியத்திற்குப்பிறகு தெருக்கூத்து வழக்கமான ஒன்றாக இருந்துவந்தது.கொஞ்சம்கொஞ்சமாக மாற்றம் பெற்று வீடியோ போட ஆரம்பித்தார்கள்.கூத்து என்றால் கிராமத்து மக்கள் மட்டுமல்லாமல் பக்கத்து கிராமத்திலிருந்தும் நிறைந்திருப்பார்கள்.எளிய மக்களுக்கு மதிப்பீட்டை போதித்த கலை அது.இப்போது தெருக்கூத்து பார்க்க பட்த்தில் உள்ள அளவுதான் வருகிறார்கள்.

பதிவில் உள்ள புகைப்படங்கள் சென்ற ஆண்டு ஏலகிரி மலையில் எடுத்தது.அர்ச்சுணன் தபசு கூத்தை முடியும் தருவாயில் நான் பார்த்தேன்.காலை பதினொருமணி ஆகிவிட்டிருந்தது.தபசுக்கம்பத்தில் மேலே ஏறிவிட்டால் கருடன்வரும்வரை கீழே இறங்கமாட்டார்கள்.கருடன் சுற்றிவிட்டுபோன பிறகு பொதுமக்கள் பூசை செய்வார்கள்.சில மாதங்களுக்கு முன்னால் ஹொகேனக்கல் செல்லும்போது மன்மதன் வரையப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.


திருவண்ணாமலை பக்கம் தெருக்கூத்துக்கென்று தரகர்கள் இருக்கிறார்கள்.சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சிலரைப் பார்த்தேன்.இன்னமும் தெருக்கூத்தை தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இரவுகளில் தூக்கம் கெடும் கொஞ்சம் கஷ்டமான தொழில்.ஆனால் எதிர்காலம் இருப்பதாக நான் நம்பவில்லை.

நண்பர் ம்கேந்திரன் தெருக்கூத்து பற்றிய தொடர் கவிதை எழுதி வருகிறார்.மேலதிக தகவல்களை கவிதையில் தெரிந்துகொள்ளலாம்.

இளவேனிற்காலம்.http://ilavenirkaalam.blogspot.in/2013/10/blog-post_28.html
-

3 comments:

Anonymous said...

வணக்கம்
தெருக்கூத்தப்பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்

இனியதீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகேந்திரன் said...

நண்பருக்கு இனிய வணக்கம்....
எதிர்பார்க்கவே இல்லை தங்கள் எழுத்துக்களால்
எனக்கு பொன்னாரம் கிடைக்குமென்று.
இணைப்புக்கு நன்றிகள் கோடி நண்பரே...
==
தெருக்கூத்து பற்றி நீண்ட நாட்களாக எழுதவேண்டும்
என்ற எண்ணம் இருந்தது..
காலமும் செய்திகளும் ஒத்துழைக்கவில்லை...
இப்போதே தருணம் வாய்த்தது...
திருவண்ணாமலையில் தான் தெற்கத்தி கூத்துக்கலை பாணி
தோற்றுவிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது..
இன்னும் கூத்துப்பட்டறையின் உதவியால் இந்தக் கலை
உயிர்ப்புடன் உள்ளது சில நகரங்களிலும் பல கிராமங்களிலும்..

ஒப்பனைக்கு என்று அவர்கள் ஒதுக்கும் காலமும்
அதற்காக அவர்கள் செய்யும் பிரயத்தனமும் அலாதியானது...
வாழவைப்போம் இனிய கலையை...
நன்றிகள் பல.

கி. பாரதிதாசன் கவிஞா் said...


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு