Tuesday, October 8, 2013

பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது?



பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார்.கொஞ்சம் சம்பந்தமில்லாமல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.பெண்கள் சீக்கிரமாக எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார்கள்.ஆண்களால் அப்படியெல்லாம் முடியாது.வேறு சில இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறேன்.பெண்களுக்கு மட்டும் தனிச்சிறப்பான ஆற்றல் இருக்கிறதா?

கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்க்கும் குடும்பங்களில் இதைக்கண்டிருப்பார்கள்.கோழி குஞ்சு பொறித்த நாளிலிருந்து கழுகு,காக்கைகளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும்.கழுகை விரட்ட எப்போதும் பறக்காத உயரத்திற்கு கோழி பறந்து செல்லும்.ஒருவேளை பறிகொடுத்துவிட்டால் அச்சத்திலும்,ஆற்றாமையிலும் முனகிக்கொண்டிருக்கும்.


இயற்கை அன்னைக்கு சில சிறப்புத்தகுதிகளை ஏற்படுத்தியிருக்கிறது.அன்பு,பாசம் எல்லாம் எல்லா உயிர்க்கும் அடிப்படையாக இருக்கின்றன.பெண்களுக்கும் அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது.குழந்தையின் உணர்வை அன்னை அறிந்துகொள்ளாவிட்டால் என்ன நிகழும்? குழந்தையின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களை கவனித்து குழந்தையின் தேவையை புரிந்துகொள்கிறாள்.

உணர்ச்சிகள் வழியேதான் ஒருவரைப் புரிந்துகொள்ளமுடியும்.ஒருவரது சிந்தனையை உணர்ச்சிகளைப் பின் தொடர்ந்துசென்று அறிந்துகொள்ளலாம்.பெண்கள் இயல்பாகவே உணர்ச்சிகளோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.அந்தக்கொடையை இயற்கை வழங்கியிருக்கிறது.அப்போதுதான் அவளால் குழந்தைகளைக் காக்கமுடியும்.


பெண்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஏன் குடும்பத்தில் பிரச்சினைகள் வருகின்றன? கணவனைப்பற்றி சரியாகத் தெரிந்துகொண்டால் அதற்கேற்றவாறு நடந்துகொள்ளமுடியுமே? அவனது சிந்தனையை அறிந்து அவனுக்கு ஆலோசனை வழங்குவது சாத்தியமாக வேண்டும்.ஆனால் குடும்பங்களில் நிறைய குழப்பங்கள்.குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு தன்னுடைய மகனைக்கூட தாயால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

பல நேரங்களில் ஆண் தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில்லை.ஆத்திரத்தையும் கோபத்தையும் காட்டுகிறான்,சோகம்,கவலை,பயம்,கலக்கம் போன்ற உணர்ச்சிகளை மறைத்துக்கொள்கிறான்.ஆண் அழக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.துக்கம் மனசிலிருந்து பொங்கும்போது அழாமல் அடக்கிக்கொள்கிறான்.போதை வஸ்துக்களை நாடுகிறான்.


யார் மீதோ உள்ள கோபத்தை மனைவிமீது காட்டுகிறான்.அச்சத்தை மறைக்க வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.பயத்தைக்காட்டுவது பலவீனம்,ஆண் தைரியசாலியாக இருக்கவேண்டுமென்று சமூகம் அவனுக்கு சொல்லித்தந்திருக்கிறது.பொய் முகத்தைக்காட்டுவது ஆணுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிடுகிறது.பெற்றதாயும் கூட குழம்பிவிடுகிறாள்.

உள்ளத்தில் இருப்பது முகத்தில் பிரதிபலிக்கவேண்டும்.அப்போது பெண்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.கண்களைப்பார்த்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று கண்ணைப்பார்த்துப் பேசுவதை தவிர்த்துவிடுகிறான்.பெண் என்னதான் செய்யமுடியும்? பிரச்சினைகள் தவிர்க்கமுடியாமல் போகின்றன.ஆண் உண்மையான முகத்தைக் காட்டும்போது அங்கே இயல்பான மகிழ்ச்சி சாத்தியம்.
-

No comments: