Thursday, February 3, 2011

திருவண்ணாமலையில் ஒரு புத்தகம் தந்த வலி

புத்தகம் ஒன்றை பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தேன்.கிடைக்காமல் போனதற்கு என்னுடைய சோம்பேறித்தனம் காரணமாக இருக்க வேண்டும்.நான் போகும் கடைகளில் எப்போதும் இருந்த்தில்லை.மறைந்த தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல்தான் அது.

கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த சுபமங்களா இதழ் மூலமாக சுந்தர ராமசாமி, அவரது எழுத்துக்கள் பற்றி அறிமுகம்.பிறகு,நான் அவருக்கு கடிதம் எழுதியது,அவர் இரண்டு காலச்சுவடு இதழ்களை அனுப்பி வைத்த்தை எனது வேறொரு பதிவில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்தேன்.காலச்சுவடு அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை வி.பி.பி.யில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.அவர்களும் இசைந்தார்கள்.ஒரு முக்கியமான விருப்பம் நிறைவேறின சந்தோஷம்.

அடுத்த சில நாட்களில் திருவண்ணாமலையில்வம்சி புக்ஸ்சென்றேன்.பவா.செல்லதுரை இருந்தார்.அப்போதுதான் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து வந்த பார்சல்களை பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.அதில் ஜே.ஜே.சில குறிப்புகளை பார்த்துவிட்டேன்.எனக்கு அடித்துக்கொண்ட்து.

நான் பவா.செல்லதுரை அவர்களை அணுகி பதிப்பகத்திலிருந்து அனுப்பக்கோரிய தகவலை சொன்னேன்.’’நீங்கள் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்.நான் காலச்சுவடுக்கு சொல்லி விடுகிறேன்என்றார்.என்னைப் பற்றி கேட்டு பதிப்பகத்துக்கு தனது செல் மூலம் தகவலை தெரிவித்துவிட்டார்.புத்தக்த்தை வாங்கி விட்டேன்.’’புத்தகத்தை படித்து விட்டு தெருத் தெருவாக பித்துப் பிடித்தவர்களை போல அலைந்திருக்கிறேன்’’என்று கூறி கொடுத்தார்.

புத்த்கத்தை படிக்கத் துவங்கியிருக்கவில்லை.வேலை காரணமாக ஜவ்வாது மலையில் இருந்தேன்.அருகில் இருப்பவர்கள் எனக்கு போன் செய்தார்கள்.வி.பி.பி.யில் புத்தகம் வந்திருந்த்து.ஏற்கனவே அஞசல் எடுத்து வந்தவர் மூன்று நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறார்.அனுப்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தேன் என்ற சிந்தனையில் அப்போதைய மனநிலையில் எதுவும் ஓடவில்லை.’’திருப்பி விட்ட்டுமா?’’என்று கேட்கிறார் என்றார்கள்.சரி என்று சொல்லி விட்டேன்.

அடுத்த முறை பவா,செல்லதுரையை அவரது கடையில் சந்தித்த போது வி.பி.பியை திருப்பி விட்ட தகவலை கூறினேன்.நான் எதிர்பார்க்கவில்லை.அவரது முகம் மாறிப்போனது.நான் சங்கட்த்தில் தலையை குனிந்துகொண்டேன்.நான் இப்போது திருவண்ணாமலையில் இல்லை.இருந்தவரை அவரது கடைக்கு சென்றும் அவரது முகத்தை நேருக்கு நேராக பார்த்து பேசவில்லை.

நாவலிலிருந்து உங்களுக்காக....

மனித முகங்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.இது அலுக்காத ஒன்று.இந்த்த் தாகம் முன்னைவிட இப்போது அதிகம்.பஸ் நிலையங்கள்,கோவில் வாசல்கள்,மருத்துவமனைகள்,திருவிழாக்கள்,சந்தைகள்,கடைத்தெருக்கள்,அரவமின்றி,உடல் உரசி நிற்கும் ஜீவன்களுக்கும் தெரியாமல்,மனச்சிலுவைகளில் வருத்தம் துடித்துக்கொண்டிருக்கிறது.துக்கத்தின் ஜுவாலைகள் பட்டு முகம் கருகுவதைத் தவிர்க்க முடிவதில்லை.கண்கள் ஒளி இழந்து மங்குவதைத் தடுக்க முடிவதில்லை.கண்களையும் முகங்களையும் கூர்ந்து நோக்கிஎந்த மன நிலையில் ஒருவன் இருக்கிறான் என்று அனுமானிக்க முயல்வேன்.இந்த அனுமான்ங்கள்,சுயப் பிரச்சினைகளைச் சார்ந்த கற்பனைகளாக முடிந்து போய் விடக் கூடாதென்பதற்காகச் சில கவன்ங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பேன். மனத்தில் ஒரு சொத்தைப் பல்லின் வலி இருந்து கொண்டிருப்பதான அனுமானமே எப்போதும் ஏற்படுகிறது.இந்த வலி பாரபட்சமின்றி சகல ஜீவன்கள் மீதும் கவிந்து கொண்டிருக்கிறது.(வேட்டையாடக் கூடாது என்று தகப்பன் தடுத்த்தற்காக ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டான்.) தனது துக்கத்தை வெளியே சொல்ல விரும்பியும் பல சமயம் சொல்ல முடியாமல் வெட்க உணர்வால் தடுக்கப்பட்டு அவமானம் கவிந்து விடுமோ என அஞ்சி,தனது படிம்ம் சிதறி விடுமோ எனக் கவலைப்பட்டுத் த்த்தளித்துக்கொண்டிருக்கிறான் மனிதன்.துக்கங்களைச் சரிவரச் சொல்ல வருவதுமில்லை.துக்கங்களுக்கும் பாஷைக்கும் ஒத்துப் போவதும் இல்லை.மேகங்களை உலையில் ஏற்றி,உருக்கி,கம்பியாக அடித்து நீட்ட முடியுமா? இருந்தும் மனிதன்,வேறு வழியின்றி பாஷைக்குள் விழுகிறான்.

-

2 comments:

அன்புடன் நான் said...

பகிர்வு நல்லாயிருக்குங்க.....

shanmugavel said...

நன்றி,கருணாகரசு.