Saturday, February 19, 2011

என் தூக்கத்தைக் கெடுத்த மூன்று பெண்கள்ஒரு சம்பவத்தை நேரிலோ அல்லதுபுகைப்பட்த்திலோ பார்ப்பதற்கும்,வீடியோவில் காண்பதற்கும்,வித்தியாசம் இருக்கிறது.ஒவ்வொன்றும் நம்மிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஆளுமைக்குத் தக்கவாறு மாறுபடும்.சிலரது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நேரில் அவர்களது வார்த்தைகளில் அறியும்போது நாம் பாதிக்கப்படுகிறோம்.

சினிமாவில் மற்றவர்களது துயரங்களைப் பார்த்து அழுபவர்கள் இருக்கிறார்கள்.நெருங்கிய உறவினர் இறப்புக்கும் கதறாத ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.விபத்து,கற்பழிப்பு,கொடுந்துயரம் என்று எத்தனையோ நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை படிக்கிறோம்,தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.சில நிமிட உணர்வுகளை தூண்டிவிட்டு அவை மறைந்துவிடுகின்றன.அடுத்த விஷயத்துக்கு தாவி விடுகிறோம்.

துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பஞ்சமில்லை.அதிகம் வாசிக்கப்படாத எனது இடுகை ஒன்றில் இருந்தாலும் அதன் உளவியல் பகுதிகளை அறிவதற்காக மீண்டும் அவற்றைத் தருகிறேன்.

. பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது. .சிறு நீர் வெளியேறுவதுதெரியவில்லை.நனைந்தபின்னர்வெகு நேரம் கழித்து தெரியவரும்.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை. கணவன் வீட்டில் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார் மருத்துவர்.

.மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் .உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் , மாமியார் ,நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், ''எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள் ''.அந்தப்பெண்ணின் பதில்,"என் தங்கை வேறு இருக்கிறாள்,அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும் ?வாழாவெட்டி வீட்டில் இருக்கும்போது யார் வருவார்கள்? .

இரண்டாவது தென் மாநிலம் ஒன்றிலிருந்து இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற பெண் பணிக்காக மும்பை சென்றார். உயர்சாதியை சார்ந்தவர்.தமிழ் நாட்டை ச்சார்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.வேலையையும் ,பெற்றோரையும் விட்டு விட்டு காதலனுடன் வந்துவிட்டார்.கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது

.கர்ப்பமானது தெரிந்தவுடன் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தி கலைக்கப்பட்டு விட்டது.-ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறார்கள் ,மேலும் தேவையில்லை-. ரேஷன் கார்டில் அவரது பெயர் இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ற்போது தீராத நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்து,கல்வி கற்றும் அடையாளமற்று !

மூன்றாவது,கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை.அந்தப்பெண்ணுக்கு பதினைந்து வயது.தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளது அக்காவின் கணவன் கற்பழித்தான்.

ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".

நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருதாய் அவ்வளவுதான் தண்டனை தர முடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள்

மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.

நாம் சிந்திப்போம் தோழர்களே .....

சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?

அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறுமையில்,மதுவின் போதையில்,பாலியல் தொழிலில்,மனக்கோளாறுநிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?

பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும் ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?

கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம் சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?

-

6 comments:

Jana said...

நல்லதொரு பதிவு. இந்த மூவர்போல உலகில் இன்னும் நிறையப்பேர்..

shanmugavel said...

ஜனா ,மிக்க நன்றி ,

வேடந்தாங்கல் - கருன் said...

nice.,

shanmugavel said...

நன்றி ,கருன்

வசந்தா நடேசன் said...

நம் சமூகம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது..

shanmugavel said...

நன்றி,வசந்தா நடேசன் அவர்களே