Friday, June 3, 2011

தமிழக அரசுக்கு மிக்க நன்றி!

                                   இன்றைய ஆளுனர் உரையை படித்தபோது நான் மகிழ்ச்சியும்,நெகிழ்ச்சியும் அடைந்தேன்.திருக்குறள்,பாரதி,பாரதிதாசன் நூல்களை மொழி பெயர்க்க நிதி உதவி அளிக்கப்படும் என்பதால்! திருக்குறளின் பெருமை உலகம் அறிந்த்து தான்.என்னுடைய தளத்திற்கு வருபவர்கள் நான் எழுதுவதை படிக்காவிட்டாலும் ஒரு குறளையாவது படித்து சந்தோஷப்படமாட்டார்களா? என்று கருதியே திருக்குறள் விட்ஜெட்டை சேர்த்திருக்கிறேன்.
                                    பாரதியும்,பாரதிதாசனும் உலகம் முழுக்க சென்று சேர வேண்டியவர்கள்தான்.என்னை செம்மைப்படுத்தியவன் பாரதி.எப்போதாவது மனம் சோர்வுறும் நேரங்களில் நான் நாடுவது பாரதியார் கவிதைகள்.பாரதியால் நான் வாழ்க்கையில் பெற்ற பலன் அதிகம்.முழுமையாக வார்த்தைகளில் விவரிக்க என்னால் முடியவில்லை என்பதே நிஜம்.

                                    மொழிபெயர்ப்பின் மூலம் இன்னும் இன்னும் உலகின் அதிக உள்ளங்கள் செம்மைப்படுத்தப்படும் என்பதை நினைக்க சந்தோஷமாக இருக்கிறது.பாரதியும்,பாரதிதாசனும் தமிழன்னைக்கு கிடைத்த பெரும்பேறு.எட்டுத்திக்கும் அவர்களது நூல்கள் செல்ல தமிழக அரசு முயற்சி எடுத்திருப்பது அருமையான விஷயம்.

                                    என்னுடைய முதல் இடுகை பாரதியார் கவிதைகள் புத்தகத்தை பற்றிய சில வரிகள்தான்.அன்று திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நான் இணைத்திருக்கவில்லை.எப்படியோ அடையாளம் கண்டு கருத்துரை இட்டவர் மதிப்பிற்குரிய கேபிள் சங்கர்.அந்த பதிவை கீழே தருகிறேன்.(நெருங்கிய உறவினர் திருமணம் காரணமாக வெளியூர் செல்லவேண்டியுள்ளதால் இரண்டு நாட்களுக்கு பதிவிட முடியாது.நன்றி நண்பர்களே!)

ஒரு சிறிய புத்தகம்.பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது வாங்கினேன். அப்போது படிக்கவில்லை.படிப்பதற்கான நேரம் தானாக வந்தது.கனமழை.அழுக்குகள் கரைந்து வெளியேறியது . பல்லாண்டுகளாக தூங்கிக்கிடந்த விதைகள் முளைக்கத்துவங்கின . விதை முளைக்கும் சத்தத்தில் விழித்துக்கொண்டேன் .
தனி மனிதனை மட்டுமல்ல உலகின் சரித்திரத்தை யும் ,சமூக ,கலாசார மாற்றங்களையும் கலை இலக்கியங்கள் தான் மாற்றியமைத்திருக்கின்றன .கதை படித்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள் .ஒரு சிறிய புத்தகம் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படி விவரிப்பேன் என்று தெரியவில்லை.

இயற்கையின் வசம் ஆட்படாதவர்கள் யாருமில்லை .கடும் மழையிலும் ,நடுங்கும் குளிரிலும் தாங்கொணாத கோடையிலும் தாங்கும் வலிமையை தந்தவை அந்த எழுத்துக்கள்.வஞ்சகர்களின் கீழ்த்தரமான தந்திரங்களையும், மனிதப்பண்பற்ற விலங்குகளையும் ,அன்பற்ற மனக்கோளாறுகள் கொண்டோரையும் அமைதியாக எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்.பின்னர் நெருப்பாற்றை கடந்தேன்,சுனாமியை எதிர்கொண்டேன்.அரவங்களின் நடுவே ,புயலின் உக்கிரத்தில் வாழ்ந்தபோதும் உருக்குலையாமல் நின்றேன். அந்த சிறியபுத்தகத்தின் பெயர் பாரதியார் கவிதைகள்.
கலை இலக்கியங்களின் வலிமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இன்றைய வலைப்பக்கங்கள் சமூகத்தை முன்னெடுத்துச்செல்லும் வகையில் நல் உணர்வுகளை வளர்க்கும் பணியை மேற்கொள்ள அனைவரையும் அழைக்கிறேன்.

-

8 comments:

மதுரை சரவணன் said...

கருத்தில் கொள்ள வேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்

shanmugavel said...

நன்றி சரவணன்.

A.K.RASAN said...

அருமை.

நிரூபன் said...

சகோ, கவுன்சிலிங் உடன் இணைந்து தமிழ் மொழி பற்றிய ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்யும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.

Sankar Gurusamy said...

ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. போகப்போக எப்படியோ?? இன்னும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.

http://anubhudhi.blogspot.com/

Karthikeyan Rajendran said...

திரு சங்கர் குருசாமி சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்
திரு சங்கர் குருசாமி சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்

Jana said...

சகோ, கவுன்சிலிங் உடன் இணைந்து தமிழ் மொழி பற்றிய ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்யும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.

Yes True :)

shanmugavel said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.